×
Thursday 10th of July 2025

திருவண்ணாமலை தீர்த்தங்கள்


Last updated on மே 20, 2025

theerthams in tiruvannamalai

Thiruvannamalai Theerthangal

திருவண்ணாமலை தீர்த்தங்கள்

தெய்வத் திருமலை திருவண்ணாமலையில் கண்ணுக்குத் தெரிந்தும் தெரியாமலும் முந்நூற்று அறுபது தீர்த்தங்கள் இருக்கின்றனவாம்.

இந்தத் தீர்த்தங்களிலே கங்கா, நர்மதா, கோதாவரி, யமுனை, சரஸ்வதி, சிந்து, காவேரி முதலான புனித நதிகள் திருவிழாக் காலங்களில் வந்து கலப்பதாக புராணங்கள் விரிவாக எடுத்துக் கூறுகின்றன. அவற்றுள் சில:

Theerthams in Tiruvannamalai

திருவண்ணாமலையின் கிழக்கே இந்திரனால் உண்டாக்கப்பட்ட தீர்த்தம் ஒன்று உள்ளது. இது இந்திர தீர்த்தம் எனப்படும். இத்தீர்த்தத்தில் தைப்பூசத்தன்று நீராடி ஒரு கையளவு நீர் உட்கொண்டால் கோடி பிரம்மஹத்தி தோஷம் போகும். அங்கு நீராடிய இந்திரன் தன் குற்றங்கள் நீங்கப்பெற்று தொடர்ந்து இந்திரப் பதவியை வகிக்கும் பேறு பெற்றான்.

திருவண்ணாமலைக்குத் தென்கிழக்கில் அக்னி தீர்த்தம் என்று ஒரு தீர்த்தம் உண்டு. அதில் பங்குனி மாதம் பௌர்ணமி நாளில் மூழ்கி எழுந்தால் எப்பேர்ப்பட்ட பாவமும் நீங்கும். அறமும் தவமும் வந்து சேரும். அக்னிதேவன் தனக்கு ஏற்பட்ட பாவத்தை இந்தத் தீர்த்தத்தில் மூழ்கி இறைவனை வழிபட்டு போக்கிக் கொண்டான்.

திருவண்ணாமலையின் நிருதி மூலையில் நிருதி தீர்த்தம் இருக்கிறது. இத்தீர்த்தத்தில் மூழ்குபவர்களுக்கு பகை நீங்கும் என்று சொல்லப்படுகிறது. நிருதியானவள் இத்தீர்த்தத்தில் மூழ்கியதன் பயனாக நெருப்பு போன்ற கண்களையும், பிளந்த வாயினையும் உடைய ஒரு ராட்சஸப் பேயை தன் வயமாக்கிக் கொண்டான்.

திருவண்ணாமலைக்கு மேற்கு திக்கில் வருண தீர்த்தம் என்று ஒன்றுண்டு அதில் பக்தியோடு மூழ்கி எழுந்தால் ஒன்பது கிரகங்களும் நன்மையைச் செய்யும். அந்த ஒன்பது கிரகங்களும் அதன்படி மூழ்கி வேண்டிய வரங்களைப் பெற்றனவாம். அத்தீர்த்தத்தின் வாயு திசையில் வாயு தீர்த்தம் இருக்கின்றது. அத்தீர்த்தத்தில் மூழ்கினால் சகல துன்பங்களும் தீரும் என்பர்.

திருவண்ணாமலையில் வடதிசையில் குபேர தீர்த்தம் என்றொரு தீர்த்தம் உண்டு. அதில் மூழ்கி எழுந்தால் சகல பாவங்களும் நீங்கி மேலான நிலையை அடைவதோடு சிவபெருமானின் பாதங்களைச் சேர்வார்கள்.

திருவண்ணாமலையில் எமன் தீர்த்தத்திற்குத் தெற்கே அகத்தியத் தீர்த்தம் இருக்கிறது. புரட்டாசி மாதத்தில் அதில் மூழ்கி நீராடி தீர்த்தம் அருந்தினால் பெரும் பண்டிதர் ஆவார் என்றும்; திருமகளும் கலைமகளும் அவரிடத்திலே வந்து தங்கியிருப்பார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

திருவண்ணாமலையில் குபேர தீர்த்தத்தின் அருகே வசிட்ட தீர்த்தம் என்று ஒரு தீர்த்தம் உண்டு. அதில் நீராடிய வசிஷ்ட முனிவர் முனிவர்களுக்கெல்லாம் தலைமையைப் பெற்றார். அத்தீர்த்தத்தில் மூழ்கியவர்களுக்கு எல்லா சாஸ்திரங்களும் விளங்கும்.

திருவண்ணாலையின் வடக்கு பக்கத்தில் திருநதி என்று ஒரு நதியுண்டு. அதில் திருமகளான லட்சுமிதேவி மூழ்கி எழுந்ததால் திருமாலின் மார்பினைச் சேர்ந்தார்.

நர்மதை ஆற்றினால் வணங்கப்படும் சோணம் என்ற ஒரு நதி அண்ணாமலையின் தெற்கே இருக்கிறது. அதில் கங்கை, யமுனை, காவிரி ஆகியோர் வந்து மூழ்கித் தங்கள் துன்பத்தைப் போக்கிக் கொண்டார்களாம்.

திருவண்ணாமலையின் மேற்கு திசையில் புண்ணியநதி என்று ஒன்று உண்டு. அதன் அருகே புண்ணியாற்றூர் என்று ஒரூர் இருக்கிறது. அங்கு வாழ்ந்த ஈழன் என்ற அரசன் தனக்கு தீங்காக வந்தடைந்த பெண் உருவை அந்நதியில் மூழ்கிப் போக்கிப் பெரும் பேறு பெற்றான். இப்புண்ணிய நதிக்கு வடப்பக்கம் சேயாறு என்ற ஆறு உள்ளது. அது முருகப் பெருமானால் உண்டாக்கப்பட்டது என்பர். அதில் முருகப் பெருமானே மூழ்கி எழுந்து அசுரர்களைக் கொல்லும் வரமும் தேவசேனாதிபதி என்ற பேறும் பெற்றார்.

திருவண்ணாமலைப் பெருமான் கோவிலில், உள்ளே சிவகங்கைத் தீர்த்தம் என்று ஒரு தீர்த்தம் உண்டு. இதனை தினந்தோறும் உள்ளத்தில் நினைத்தால் கங்கை நதியில் மூழ்கிய பயன் உண்டாகும். அநேக உருத்திரர்கள் அதில் மாசி மாதத்தில் மூழ்கி இடபாரூடராய் எல்லா தேவரினும் மேலான பேறு பெற்றார்கள்.

திருவண்ணாமலையில் உள்ள சிவகங்கை தீர்த்தத்தின் கிழக்கே சக்கர தீர்த்தம் இருக்கிறது. திருமால் வராக அவதாரம் எடுத்தபோது அதில் நீராடினாராம். அதில் நீராடுவோரும், அந்நீரை அருந்தியவர்களும் அதனை வலமாக வந்தவர்களும் துயரக்கடல் நீங்கி சிவபெருமானின் திருவடிகளைச் சேர்வர்.

திருவண்ணாமலையார் சன்னதியில் அக்னி திசையில் பிரம்மதேவனால் அமைக்கப்பெற்ற பிரம்ம தீர்த்தம் ஒன்றுண்டு. அதில் மூழ்கியவர்கள் பிறவிக் கடலில் நீந்தி சென்ற பிறப்புகளில் சேர்ந்த தீவினைகள் அனைத்தும் நீங்கப் பெறுவர். அந்த பிரம்ம தீர்த்தத்தில் மூழ்கி அணுவளவுப் பொன்னை தானம் கொடுப்பாராயின், நவமணிகள் நிறைந்த நிலவுலகத்தையே ஒரு அடியவருக்குக் கொடுத்த புண்ணியத்தை அடைவர். இத்தீர்த்தத்தில் மூழ்கி எழுந்து தானங்களைச் செய்தவர்கள் சிவபெருமானின் திருவடித் தாமரையை அடைவார்கள்.

விநாயகர், முருகன், சூரியன், சந்திரன், கங்கை, பார்வதி, பைரவர், சப்த கன்னியர், அட்டவசுக்கள், தேவர்கள் ஆகியோர் மூழ்கி எழுந்த தீர்த்தங்கள் பலவுண்டு. அவற்றின் பெருமையை வேதங்களும் அறியாது.

திருக்கோவில்களில் நடைபெறும் திருவிழாக்களில் தீர்த்தவாரி என்பது ஒரு முக்கிய நிகழ்வாகும். இறைவனையும் இறைவியையும் தரிசித்தவர்கள் இருவினையும், மும்மலங்களும் அடங்கி இறைவியின் திருப்பாதம் பெற்று பேரின்பத்தில் மூழ்குவர் என்பதாகும். இதன் அடிப்படையில்தான் பத்தாவது நாளில் தீர்த்தவாரி என்ற நிகழ்ச்சி திருக்கோவில்களில் நடைபெற்று வருகிறது.

தீர்த்தவாரி நடைபெறும்போது மக்களின் ஆன்மா குளிர்ச்சியடைகிறது. அதாவது இறைவனோடு இறைபக்தியும் சேர்கிறது. திருவண்ணாமலை திருக்கோவில் இறைவன் மணலூர்பேட்டை சென்று தீர்த்தமாடுவதும், கலசப்பாக்கம் சென்று தீர்த்தமாடுவதும் அந்தந்த ஆற்றிற்கு சிறப்பாகும்.

எல்லா நதிகளும் அங்கு ஒன்றாகக் கலந்து இறைவனை வழிபடுவதாக அர்த்தம். ஆக, தீர்த்தவாரி என்பது மிகவும் முக்கியமானதாகும். லட்சக்கணக்கான பக்தர்கள்கூடி இறைவன் தீர்த்தவாரி செய்து அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும்போது தாங்களும் நீராடுவதால் தங்களுடைய பாவங்களைத் தீர்த்தது போல் ஓர் உள்ளுணர்வு ஏற்பட்டு மனநிம்மதி அடைகின்றனர்.

 

Also read:


 

இதைப் பதிவேற்றியவர்..

Dineshgandhi

நான் தினேஷ், Aanmeegam.org வலைத்தளத்தின் நிறுவனர். 2018 ஆம் ஆண்டு Blogger மூலம் ஆரம்பித்து 2020 இல் WordPress-க்கு மாறினேன். ACCET, காரைக்குடியில் MCA முடித்துள்ளேன். 10 ஆண்டுகளுக்கும் மேல் அனுபவம் வாய்ந்த SEO நிபுணராகவும், ஆன்மிக பதிவாளராகவும் செயல்படுகிறேன்.

Read full bio →


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

kolampakkam-agastheeshwarar-temple-entrance
  • ஜூன் 26, 2025
அருள்மிகு ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோவில், கொளப்பாக்கம்
boy-baby-names-in-tamil
  • ஜூன் 19, 2025
ஆண் குழந்தை தமிழ்ப் பெயர்கள் [Boy Baby Tamil Names]
srisailam-sri-bhramaramba-mallikarjuna-swamy
  • ஜூன் 1, 2025
அருள்மிகு ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனர் திருக்கோவில், ஆந்திரப் பிரதேசம்