×
Sunday 15th of June 2025

மார்கழி பாவை நோன்பு – திருவெம்பாவை


Last updated on மே 20, 2025

margazhi-paavai-nombu

Table of Contents

Margazhi-Paavai Nombu

மார்கழி மாத இறைவழிபாடு பற்றி மாணிக்கவாசகர் திருவெம்பாவையிலும், ஆண்டாள் நாச்சியார் திருப்பாவையிலும் போற்றியுள்ளனர். அதிகாலை வழிபாட்டில் கோவில்களில் வேதங்களுக்குப் பதிலாக திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, ஆழ்வார் பாசுரங்கள் பாடப்படுகின்றன.

திருவெம்பாவை என்பது மாணிக்கவாசகர் என்ற புலவரால் இயற்றப்பட்ட பாடல்களின் தொகுப்பாகும். இது சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட 20 சரணங்களைக் கொண்டுள்ளது. இது திருவாசகம் என்ற தொகுப்பின் ஒரு பகுதியாகவும், தமிழ் சைவ சித்தாந்தத்தின் நியமன உரையான திருமுறையின் எட்டாவது நூலாகவும்  உள்ளது. தமிழ் மாதமான மார்கழி மாதத்தில் திருமணமாகாத இளம் பெண்களுக்கான பாவை சடங்கின் ஒரு பகுதியாக பாடல்கள் உள்ளன.

மார்கழி மாதம் இறைவழிபாட்டிற்கு உரிய மாதம் இந்த மாதத்தில் பெண்கள் ஏற்கும் விரதம், பாவை நோன்பு ஆகும். திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் பாடி இறைவனை வணங்குவார்கள். இதன் மூலம் மனதிற்கு பிடித்த கணவர் கிடைப்பார்கள்.
மார்கழியில் நோன்பு நோற்றதால் மார்கழி நோன்பு என்றும், கன்னிப்பெண்களால் நோற்கப்படுவதால் பாவை நோன்பு என்றும் கூறப்படுகின்றது.
இந்த நாட்களில் திருவெம்பாவை பாடி இறைவனை பெண்கள் வழிபடுகின்றனர். சிவனை நினைத்து மாணிக்கவாசகர் பாடிய திருவெம்பாவை இருபது பாடல்களைக்கொண்டது. மார்கழி மாதம் பாடப்படுகின்றது.

மாணிக்கவாசகர் சிவபெருமான் மீது இயற்றிய திருவெம்பாவை பாவைப்பாட்டுக்களில் சிறந்தவை. 

திருவெம்பாவை தத்துவமானது, சிவசக்தியின் அருட்செயலையும், நவசக்திகள் ஒன்று சேர்ந்து சிவபெருமானை துதிப்பதும் திருவெம்பாவையின் தத்துவமாகும். மனோன்மணி, சர்வ பூதமணி, பலப்பிரதமனி, பலவிகரணி, கலவிகரணி, காளி, ரௌத்திரி, சேட்டை, வாமை என்ற ஒன்பது சக்திகளின் ஏவலால் இந்த பிரபஞ்ச காரியம் நடைபெறுகிறது. இதை உணர்ந்து கடைப்பிடிப்பதே பாவை நோன்பாகும். பெண்கள் நோன்பு கடைப்பிடிக்க செல்லும் போது, தூங்குபவளை எழுப்பும் காட்சி திருவெம்பாவையில் வருகின்றது. ஆதியும் அந்தமும் இல்லாத அருட்பெருஞ்ஜோதி, சிவலோகன், தில்லை சிற்றம்பலத்து ஈசன், அத்தன், ஆனந்தன், அமுதன், விண்ணுக்கு ஒரு மருந்து, வேத விழுப்பொருள், சிவன், முன்னைப் பழம், தீயாடும் கூத்தன் என்று பலவாறு இறைவனை குறித்து பாடி, நீராடி சிவபெருமானிடம் பக்தர்கள் வேண்டுவதை திருவெம்பாவை விளக்குகிறது. 

திருவெம்பாவை பாடல் – 1

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்
சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
போதார் அமளியின்மே னின்றும் புரண்டிங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள்என் னேஎன்னே
ஈதேஎந் தோழி பரிசேலோர் எம்பாவாய்.


பாடல் விளக்கம்: ஒளி பொருந்திய நீண்ட கண்களை உடைய பெண்ணே! முதலும் முடிவும் இல்லாத அருட் பெருஞ்சோதியை உடைய இறைவனை நாங்கள் பாடுவதைக் கேட்டும், உறங்குகின்றனையோ? உன் காது என்ன செவிடாகி விட்டதா? அந்த மகாதேவனுடைய நெடிய சிலம்பணிந்த திருவடிகளை நாங்கள் புகழ்ந்து பாடிய வாழ்த்துப் பாடல்களின் ஒலி கேட்டு தெருவில் சென்ற எங்கள் தோழி ஒருத்தி விம்மி அழுது, பின்னர் தரையில் விழுந்து புரண்டு மூர்ச்சித்துக் கிடந்தாள். ஆனால், என் தோழியே நீ இன்னமும் உறங்குகிறாயே! பெண்ணே! நீயும் சிவனை வாழ்த்திப் பாட உடனே எழுந்து வருவாயாக! என்று அழைக்கின்றனர்.

திருவெம்பாவை பாடல் 2:

பாசம் பரஞ்சோதிக்கென்பாய் இராப்பகல் நாம்
பேசும் போதெப்போது இப்போதார் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்
சீசி இவையுஞ் சிலவோ விளையாடி
ஏசும் இடம் ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக்
கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்
தேசன் சிவலோகன் தில்லைச் சிற்றம்பலத்துள்
ஈசனார்க்கு அன்பர் யாம் ஆரேலோர் எம்பாவாய்.

பாடல் விளக்கம்: சிறந்த அணிகலன்களை அணிந்தவளே! இரவும் பகலும் நாம் பேசும் பொழுது, என் பாசமெல்லாம் எப்பொழுதும் என் அன்பு, மேலான ஒளிப் பிழம்பான இறைவனுக்கு என்று கூறுவாய். இப்பொழுது அருமையாகிய படுக்கைக்கே, அன்பு வைத்தனையோ? என்று பெண்கள் வெளியில் இருந்து கேட்கின்றனர். அதற்கு அவளோ…. பெண்களே! சீச்சி நீங்கள் பேசும் நகை மொழிகளில் இவையும் சிலவாகுமோ! என்னோடு விளையாடிப் பழித்தற்குரிய சமயம் இதுதானோ? இது இறைவனை பாட வேண்டிய நேரம் என்று கூறுகிறாள். தேவர்களும் வழிபடுதற்கு நாணுகின்ற தாமரை மலர் போன்ற திருவடியை அன்பருக்குக் கொடுத்தருள எழுந்தருளும் ஒளி உருவன்; தில்லைச் சிற்றம்பலத்து இறைவனுக்கு, அன்பு பொருந்திய நாம் உனக்கு யார்?

திருவெம்பாவை பாடல் 3:

முத்தன்ன வெண்நகையாய் முன்வந்து எதிர் எழுந்தன்
அத்தன் ஆனந்தன் அமுதனென்ற உள்ளுறித்
தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடை திறவாய்
பத்துடையீர் ஈசன் பழஅடியீர் பாங்குடையீர்
புத்தடியோம் புன்மை தீர்த்தாட் கொண்டாற் பொல்லாதே
எத்தோ நின் அன்புடமை எல்லோம் அறியோமே
சித்தம் அழகியார் பாடாரோ நம் சிவனை
இத்தனையும் வேண்டும் நமக்கேலோர் எம்பாவாய்

பாடல் விளக்கம்: உறங்குகிற பெண்ணை எழுப்புவதாக இந்த பாடல் அமைந்துள்ளது. முத்துப்பற்கள் தெரிய சிரித்து எங்களை மயக்குபவளே! கடந்த ஆண்டுகளில், நாங்கள் வந்து எழுப்பும் முன்னதாக நீயே தயாராக இருப்பாய். சிவனே என் தலைவன் என்றும், இன்ப வடிவினன் என்றும், இனிமையானவன் என்றும் வாய் இனிக்க அவன் புகழ் பேசுவாய். ஆனால், இப்போது இவ்வளவு நேரம் எழுப்பியும் எழ மறுக்கிறாய். கதவைத் திற என்று தோழிகள் எழுப்புகின்றனர். சிரிக்கும் போது பற்கள் முத்து போல இருப்பதாக வர்ணிப்பதே அழகுதான். சிவனைப் பற்றி வாயார பேசும் போதே அழகுதான் என்று சொல்கிறார் மாணிக்கவாசகர்.

எழுதியவர்: ரா.ஹரிசங்கர்


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

offering jaggery to the family deity
  • ஏப்ரல் 1, 2025
குலதெய்வத்திற்கு வழங்க வேண்டிய தானம்: வெல்லம்
Vilakku Thandu
  • ஏப்ரல் 1, 2025
புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் விளக்குத் தண்டு
lord-krishna-facts
  • மார்ச் 30, 2025
கிருஷ்ணரை மகிழ்விப்பது எப்படி?