×
Monday 16th of June 2025

ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி அம்மன்


Last updated on மே 29, 2025

sri ramalinga sowdeswari amman

Sri Ramalinga Sowdeswari Amman Temple History in Tamil

ஸ்ரீ மது ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில்

கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள சாமுண்டி மலையில் இருக்கும் சாமுண்டேஸ்வரி அம்மன் தான் இந்த சவுடேஸ்வரி அம்மன் என்கிறார்கள். கர்நாடகாவில் இந்த அம்மனை தங்கள் குல தெய்வமாக வணங்கி வந்த தேவாங்கர் சமுதாயத்தினர் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு இங்கிருந்து தொழில் நிமித்தமாக தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா போன்ற பிற மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்தனர். நெசவுத் தொழில் செய்து வந்த இவர்கள் தாங்கள் சென்று குடியேறிய ஊர்களிலெல்லாம் தங்களது தெய்வமாக ஸ்ரீ ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் திருக்கோவிலை அமைத்திருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் கன்னட மொழி பேசும் இந்த தேவாங்கர் சமுதாயத்தினர் தேவாங்க செட்டியார் என்றும் அழைக்கப்படுகின்றனர். இவர்கள் கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், சேலம், ஈரோடு, மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் உள்ள பல ஊர்களில் குறிப்பிட்ட அளவில் வசித்து வருகின்றனர். இவர்கள் இந்து சமயத்தின் சைவம், வைணவம் என்கிற இரு பிரிவுகளில் தங்கள் தெய்வ வழிபாட்டு முறைகளைக் கடைப்பிடித்து வந்தாலும் அனைவருக்கும் பொதுவாக இந்த ஸ்ரீ மது ராமலிங்க சவுடேஸ்வரி அம்மனுக்குக் கோவில் அமைத்து வழிபட்டு வருகின்றனர். இந்த சமுதாயத்தினர் அதிகமாக வசிக்கும் ஊர்களில் எல்லாம் சவுடேஸ்வரி அம்மனுக்குக் கோவில்கள் அமைக்கப்பட்டு இருக்கிறது.

Sri Ramalinga Sowdeswari Amman History in Tamil

தல வரலாறு

தேவமுனி என்பவர் துணி நெய்வதற்காக தேவலோகத்திலிருந்து பூலோகத்திற்கு வந்தார். அங்கு அவர் தாமரைத் தண்டுகளிலிருந்தும், மலர்களின் இதழ்களிலிருந்தும் துணிகள் நெய்வதற்கான நூலிழைகளைப் பிரித்து வைத்திருந்தார். இதையறிந்த அசுரர்கள் அவருடைய இடத்திற்கு வந்து அவருக்குத் தெரியாமல் அந்த நூலிழைகளை எடுத்துச் சென்று விட்டனர்.

தன்னுடைய நூலிழைகள் காணாமல் போய்விட்டதால் தேவமுனி வருத்தமடைந்தார். தன்னுடைய நூலிழைகளை எப்படியாவது கண்டுபிடித்துத் தரும்படி இறைவனை வேண்டினார். அப்போது அவர் முன் தோன்றிய சவுடேஸ்வரி அம்மன் அவருடைய தாமரை நூல்களை அதைத் திருடிச் சென்ற அசுரர்களிடமிருந்து தான் மீட்டுத் தருவதாகக் கூறினார்.

அதன்படி சவுடேஸ்வரி அம்மன் தாமரை நூல்களைத் திருடிச் சென்ற அசுரர்களைக் கண்டு அழித்து அவர்களிடமிருந்து தேவமுனியின் தாமரை நூல்களை மீட்டு வந்து தந்தார். இதனால் மகிழ்ச்சியடைந்த தேவமுனி சவுடேஸ்வரி அம்மனிடம் அந்த ஊரிலேயே அம்மனுக்கு ஆலயம் ஒன்று அமைக்கப் போவதாகவும் அந்த ஆலயத்தில் குடிகொண்டு அந்த ஊரிலிருப்பவர்களுக்கு அருள் புரிய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். சவுடேஸ்வரி அம்மனும் அதற்கு சம்மதித்துச் சென்றார்.

தேவமுனியும் அந்த ஊரில் இருக்கும் அம்மனுடைய பக்தர்கள் உதவியுடன் அழகான கோவில் ஒன்றைக் கட்டினார். அந்தக் கோவிலில் வந்து தங்கி அந்த ஊர் மக்களுக்கு அருள் புரிய வேண்டி சில பக்தர்களுடன் அந்த அம்மனை அழைக்கச் சென்றனர். அப்போது அந்த சவுடேஸ்வரி அம்மன் அவர்களிடம் அந்தக் கோவிலில் தான் வந்து குடியமர்ந்து கொள்ள ஒரு நிபந்தனையை விதித்தார்.

பக்தர்கள் அனைவரும் முன்னால் நடந்து செல்ல வேண்டும். அம்மன் அவர்களுக்குப் பின்னால் நடந்து வருவார். ஆனால் முன்னால் நடந்து செல்பவர்கள் பின்னால் திரும்பிப் பார்க்கக் கூடாது. அப்படி பின்னால் திரும்பிப் பார்த்தால் அம்மன் அந்த இடத்திலேயே தங்கி விடப் போவதாகவும் தெரிவித்தார்.

இந்த நிபந்தனைக்கு தேவமுனியும் மற்றவர்களும் சம்மதித்தனர். அவர்கள் முன்னால் நடக்கத் துவங்கினர். அம்மனும் அவர்களைப் பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்தார். அம்மனின் காலில் கட்டியிருந்த கால் சலங்கையின் ஒலியைக் கேட்டபடி அவர்கள் முன்னால் நடந்து சென்று கொண்டிருந்தனர். வழியில் நீரோடை ஒன்று குறுக்கிட்டது. அனைவரும் முன்னால் சென்றனர். ஆனால் சலங்கை ஒலி நின்று போனது. தங்களுக்குப் பின்னால் வந்து கொண்டிருந்த அம்மன் வரவில்லையே என்று அவர்கள் திரும்பிப் பார்த்தனர். இதையடுத்து அம்மன் அந்த இடத்திலேயே தங்கி விட்டார்.

இதனால் வருத்தமடைந்த பக்தர்கள் தங்கள் தவறுக்காக வருந்தி தங்கள் உடலைக் கத்தியால் கீறிக் கொண்டனர். அவர்கள் உடலில் இரத்தம் சொட்டச் சொட்டத் தங்களை மன்னித்து தங்களது கோவிலுக்கு வந்து அமர்ந்து அருள் வழங்கவும் வேண்டிக் கொண்டனர். அவர்களது தீவிர வேண்டுதலில் மனமிரங்கிய அம்மன் அவர்கள் வேண்டுகோளை ஏற்று அவர்கள் கோவிலுக்கு வந்து குடியமர்ந்தார் என்று தேவாங்கர் குலத்தைச் சேர்ந்த பெரியவர்கள் இந்த அம்மனின் முதல் தலம் அமைந்த வரலாற்றைத் தெரிவிக்கின்றனர்.

வழிபாடுகளும் சிறப்புகளும்

இந்த சவுடேஸ்வரி அம்மன் கோவில்களில் தேவாங்கர் சமுதாயத்தினர் அதிகமாக வசிக்கும் ஒரு சில ஊர்களில் வருடந்தோறும் திருவிழா நடத்தப்படுகிறது. இந்தத் திருவிழாவின் போது ஏழு நாட்கள் வரை விரதமிருக்கும் பக்தர்கள் குழு அந்தக் கோவிலில் பூசாரிகளாக இருப்பவர்கள் சொல்லும் இடத்திற்குச் சென்று தீர்த்தம் எடுத்து வரச் செல்கிறார்கள். அவ்விடத்தில் இந்த பக்தர்கள் குழு சூரிய உதயத்திற்கு முன்பாக தீர்த்தம் எடுத்துக் கொண்டு தங்கள் கோவிலிருக்கும் எல்கைக்குள் சூரிய அஸ்தமனத்திற்கு முன்பாக வர வேண்டும் என்பதைக் கடைப்பிடிக்கிறார்கள். இப்படி கொண்டு வரப்பட்ட தீர்த்தம் கோவிலுக்குள் கொண்டு செல்வதற்கு முன்பாக ஊரின் எல்லைப் பகுதியிலிருந்து இவர்கள் ஊர்வலமாகச் செல்கின்றனர்.

ramalinga sowdeswari amman kathi poduthal knife

இந்த அம்மன் அழைப்பு ஊர்வலத்தில் முன்பாகச் செல்லும் சில பக்தர்கள் தல வரலாற்றில் சொல்லியபடி தங்கள் உடலில் மார்புப் பகுதியில் கத்தியைக் கொண்டு கீறிக் கொள்கிறார்கள். இப்படி கத்தியால் உடலைக் கீறிக் கொள்ளும் பக்தர்கள் “சவுடம்மா வேசுக்கோ… தீசுக்கோ…(சவுடம்மா வாங்கிக்கொள்… ஏற்றுக்கொள்…) என்று கன்னட மொழியில் பக்தியுடன் ரத்தம் வழிவதையும் பொருட்படுத்தாமல் முன்னே செல்கின்றனர். இதற்கு கத்தி போடுதல் என்று சொல்கிறார்கள். கத்தியால் கீறப்பட்ட காயங்களை குணப்படுத்த 11 வகை மூலிகைகளினால் ஆன திருமஞ்சனப்பொடி பயன்படுத்தப்படுகிறது. இந்தப்பொடி எப்படிப்பட்ட காயத்தையும் இரண்டு நாட்களில் சரியாக்கி விடும் என்கின்றனர். (ஒரு சில ஊர்களில் கத்திபோடும் போது காயம் வரக்கூடாது என்றும் சொல்கிறார்கள்.) இப்படி கொண்டு செல்லப்படும் தீர்த்தம் கோவிலில் அம்மன் சிலை முன்பு வைக்கப்பட்டு மறுநாள் அபிசேகம் மற்றும் இதர பூஜைகள் செய்யப்படுகின்றன.

இது போல் ஒரு சில ஊர்களில் சவுடேஸ்வரி அம்மன் கோவில்களில் மூன்று வருடங்களுக்கு ஒருமுறை பெரிய கும்பிடு என்றும், பன்னிரண்டு வருடங்களுக்கு ஒரு முறை மகா கும்பிடு என்றும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. இந்த விழாக்களின் போது அம்மன் அழைப்பிற்கு “சக்தி நிறுத்துதல்” எனும் முறை கடைப்பிடிக்கப்படுகிறது. இம்முறைக்காக ஒவ்வொரு கோவிலிலும் இதற்கென தனி கத்தி ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இதற்கென விரதமிருந்த பக்தர்கள் இந்தக் கத்தியை மட்டும் குதிரையின் மேல் வைத்துக் கொண்டு வருகின்றனர். இந்த சக்தி நிறுத்துதலிற்கு இருபுறமும் சிறுமிகளும், வயதான பெண்களும் சேர்ந்து ஊறவைத்த அரிசி, வெல்லம் போன்றவைகளை இடித்து தண்ணீர் சேர்க்காமல் உருட்டிய மாவில் தீபமேற்றி வழிபாடு செய்யப்படுகிறது. அதன் பின்பு குறிப்பிட்ட நேரத்தில் அந்தக் கத்தியை அம்மனின் வடிவமாகக் கருதி சக்தி நிறுத்தம் செய்கின்றனர்.

இதற்காகத் தனியாக வைக்கப்பட்டிருக்கும் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தண்ணீர் நிரப்பிய மண் கலயத்தின் விளிம்பின் நுனியில் கத்தியை நூலால் பிடித்து நிறுத்துகின்றனர். இப்படி நிறுத்தப்படும் நேரத்தில் கத்தி நிற்காத நிலையில் பக்தர்கள் தல வரலாற்றில் சொல்லியபடி தங்கள் உடலில் மார்புப் பகுதியில் கத்தியைக் கொண்டு கீறிக் கொள்கிறார்கள். இப்படி கத்தியால் உடலைக் கீறிக் கொள்ளும் பக்தர்கள் “சவுடம்மா வேசுக்கோ… தீசுக்கோ…” (சவுடம்மா வாங்கிக்கொள்… ஏற்றுக்கொள்…) என்று கன்னட மொழியில் பக்தியுடன் கத்தி போடுகிறார்கள்.

கத்தி நிற்கும் வரை பக்தர்கள் கத்தி போடும் நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெறுகிறது. இந்த சக்தி நிறுத்தல் நிகழ்வின் போது பெண்கள், குழந்தைகள் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவதில்லை. இப்படி நிறுத்தப்பட்ட கத்தி இருபத்து நான்கு மணி நேரத்திற்குப் பின்பு கலயத்திலிருந்து வெளியே தாவி விழுந்து விடுமாம். இப்படி விழும் சக்தி வடிவமான கத்தி தங்கள் மடியில் விழுந்தால் நல்லது என்கிற எண்ணத்தில் அந்த சமுதாயத்தைச் சேர்ந்த முக்கியமானவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் அதைச் சூழ்ந்து அமர்ந்து கொள்வார்களாம். இந்த 24 மணி நேரத்தில் சவுடேஸ்வரி அம்மனுக்குச் செய்யப்படும் அனைத்து சிறப்பு வழிபாடுகளும் செய்யப்படுகின்றன.

ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் முக்கியமான சில தலங்கள்

தேவாங்கர் சமுதாயத்தினர் அதிகமாக வசிக்கும் அனைத்து ஊர்களிலும் இந்த ஸ்ரீ ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில்கள் இருக்கின்றன. இருப்பினும் கீழ்காணும் ஊர்களில் உள்ள கோவில்களில் வருடந்தோறும் சிறப்புத் திருவிழாக்கள் நடைபெறுகின்றன.

ramalinga sowdeswari amman

1. கோயம்புத்தூரில் பூ மார்க்கெட் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ மது ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில். (இக்கோவிலில் ஆண்டுதோறும் நவராத்திரி விழாவின் போது 10 நாட்கள் விழா நடைபெறுகிறது. இத்திருவிழா தமிழகம் முழுவதும் பிரபலமடைந்து இருக்கிறது.)

2. கோயம்புத்தூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகிலுள்ள கணக்கன்பாளையம் எனும் ஊரில் அமைந்துள்ள ஸ்ரீ மது ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில்.

3. திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியில் உள்ள ஸ்ரீ மது ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில்.

4. தேனி அருகிலுள்ள பழனிசெட்டிபட்டியில் உள்ள ஸ்ரீ மது ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில்.

5. தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ஸ்ரீ மது ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில்.

6. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஸ்ரீ மது ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில்.


 


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

thiruvanthipuram-devanathaswamy-temple-gopurams
  • ஜூன் 14, 2025
அருள்மிகு தேவநாத பெருமாள் திருக்கோவில், திருவகிந்திபுரம்
srisailam-sri-bhramaramba-mallikarjuna-swamy
  • ஜூன் 1, 2025
அருள்மிகு ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனர் திருக்கோவில், ஆந்திரப் பிரதேசம்
melakadambur-amirthakadeswarar-temple-entrance
  • மே 4, 2025
அருள்மிகு மேலக்கடம்பூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில்