×
Wednesday 25th of March 2026

அருள்மிகு கந்தழீஸ்வரர் திருக்கோவில், குன்றத்தூர்


Last updated on டிசம்பர் 29, 2025

kundrathur-kandhazheeswarar-temple-entrance-gopuram

குன்றத்தூர் கந்தழீஸ்வரர் கோவில் [கந்தழீச்சரம்]

குன்றத்தூர் அருள்மிகு நகைமுகவல்லி உடனுறை கந்தழீஸ்வரர் சுவாமி

மூலவர் கந்தழீஸ்வரர்
அம்மன்/தாயார் நகைமுகைவல்லி
ஊர் குன்றத்தூர்
மாவட்டம் சென்னை

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

கந்தழீச்சரம் கோவில் வரலாறு

தேவர்களைத் துன்புறுத்திய தாரகாசுரனை வதம் செய்வதற்காக, முருகப்பெருமான் தனது படைகளுடன் போருக்குப் புறப்பட்டார். திருப்போரூரில் நடைபெற்ற கடும் போரில் அசுரனை அழித்த பிறகு, தன் மனம் அமைதியடைய வேண்டி திருத்தணி நோக்கிப் பயணித்தார்.

அப்பயணத்தின் வழியில் குன்றத்தூர் மலையில் தங்கிய முருகப்பெருமான், அங்கேயே ஒரு சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து சிவனை வழிபட்டார். முருகனால் (கந்தனால்) உருவாக்கப்பட்ட அந்த ஈசன், இன்று குன்றத்தூர் மலை அடிவாரத்தில் ‘கந்தழீஸ்வரர்‘ என்னும் திருநாமத்தோடு தனித் திருத்தலத்தில் அருள்பாலித்து வருகிறார்.

kundrathur-kandhazheeswarar-temple-inside

பெரிய புராணம் எனும் மகத்தான நூலை அருளிய சேக்கிழார் வைகை நதிக்கரைத் தெய்வங்களை வணங்கிவிட்டு, காவிரிக்கரையில் உள்ள கடவுளர்களை தரிசித்துவிட்டு, பாலாற்றங்கரையில் அருளும் இறைமூர்த்தங்களையும் பிரார்த்தித்துவிட்டு, குசஸ்தலை நதி பாயும் ஊரை நெருங்கினார். வழியில், அற்புதமான சிவாலயத்தைக் கண்டார். அது சோழ மன்னனால் கட்டப்பட்ட கோவில். வாழையும் தென்னையும் அதிகம் பயிராகும் பூமி அது. மலையும், குளிரும் கைகோர்த்த மண்டலம் அது. மலையின் அடிவாரத்தில் உள்ள இறைவனைத் தரிசித்து, அங்கேயே சில காலம் தங்கி தவம் செய்வது என்று முடிவு செய்தார் அந்தச் சிவனடியார். பிரமாண்டமான சிவலிங்கமூர்த்தத்தின் சாந்நித்தியத்தில் தன்னை இழந்தார். தனது சிந்தனைகள் முழுவதையும் சிவபாதத்துள் குவித்து சமர்ப்பித்தார். தன்னையே சிவனாரிடம் ஒப்படைத்தார். இதைத்தான் சரணாகதி என்கின்றனர்.

ஒரு நாள் அந்த அடியாருக்கு அற்புத தரிசனம் அளித்தார் சிவபெருமான். அந்தக் கணமே தனது மொத்த கர்வமும் தொலைந்ததை உணர்ந்த அடியவர், மெய்சிலிர்த்துப் போனார். என் கர்வத்தையும் செருக்கையும் அழித்த கந்தழீஸ்வரா என்று நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கினார். பரவசத்தில் திளைத்தார். “கந்துதல்” என்றால் “பற்றுதல்” என்று அர்த்தம். புகழையும் பெயரையும் பற்றிக்கொண்டிருந்த தனது பற்றுகளை நீக்கியதால், சிவனாருக்கு “கந்தழீஸ்வரர்” எனத் திருநாமம் சூட்டி மகிழ்ந்தார்.

kundrathur-kandhazheeswarar-temple-amman

கி.பி. 1241-ஆம் ஆண்டு, திரிபுவனச் சக்கரவர்த்தி ஸ்ரீராஜராஜனின் ஆட்சியில், இந்த ஆலயத்துக்குச் செய்த திருப்பணி விவரங்கள் கல்வெட்டில் உள்ளன. பல்லவ மன்னனும் ஸ்ரீகிருஷ்ண தேவராயரும் கூட இந்தக் கோவிலுக்கு திருப்பணிகள் செய்துள்ளனர். பிரகாரத்தில் நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, துர்கை, 63 நாயன்மார்கள், ரிஷபாரூடர் போன்றோர் உள்ளனர். பிரகாரத்தின் சுவற்றில் தனது காலை லிங்கத்தின் மீது தூக்கி வைத்து தனது கண்ணை பிடுங்கும் கோலத்தில் கண்ணப்ப நாயனார் ஓவியம் உள்ளது.

தலச்சிறப்பு: சதுரவடிவ ஆவுடையாரில் பிரமாண்டமாக லிங்கதிருமேனியராக அருள்பாலிப்பது சிறப்பு. இக்கோவில் சோழர்களால் கட்டப்பட்டது.

தலபெருமை: இக்கோவில் அருகே சேக்கிழாருக்கென தனிக்கோவில் உள்ளது. சென்னை பல்லாவரத்தில் இருந்து பம்மல், அனகாபுத்தூர் வழியாகச் சென்றால், குன்றத்தூர் எனும் அழகிய ஊரை அடையலாம். சிறிய மலை மீது கோவில் கொண்டிருக்கிறார் முருகப் பெருமான். மலையடிவாரத்துக்கு அருகிலேயே கந்தனின் மாமனான திருமால், ஊரகப்பெருமாள் என்ற திருநாமத்துடன் கோவில் கொண்டுள்ளார். அதையடுத்து சிவபெருமானின் கந்தழீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.

kundrathur-kandhazheeswarar

நேர்த்திக்கடன்: இங்குள்ள சுவாமிக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்து, புது வஸ்திரம் அணிவித்து நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.

பிரார்த்தனை: இங்குள்ள அம்மனை வழிபட்டால் தங்களது வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

திருவிழா: சிவராத்திரி, பிரதோஷம்.

கந்தழீஸ்வரர் கோவில் திறக்கும் நேரம்

காலை 06:00 மணி முதல் 10:00 மணி வரை, மாலை 05:00 மணி முதல் இரவு 08:00 மணி வரை கந்தழீஸ்வரர் கோவில் திறந்திருக்கும்.

Kandhazheeswarar Temple Address

Kundrathur Kandhazheeswarar Temple,
Sikkarayapuram, Tamil Nadu 600069

 

இதைப் பதிவேற்றியவர்..

Dineshgandhi

நான் தினேஷ், Aanmeegam.org வலைத்தளத்தின் நிறுவனர். 2018 ஆம் ஆண்டு Blogger மூலம் ஆரம்பித்து 2020 இல் WordPress-க்கு மாறினேன். ACCET, காரைக்குடியில் MCA முடித்துள்ளேன். 10 ஆண்டுகளுக்கும் மேல் அனுபவம் வாய்ந்த SEO நிபுணராகவும், ஆன்மிக பதிவாளராகவும் செயல்படுகிறேன்.

Read full bio →


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

thiruverkadu-vedapureeswarar-temple-entrance-gopuram
  • மார்ச் 14, 2026
அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோவில், திருவேற்காடு
thiruverkadu-devi-karumariamman-temple-gopuram
  • மார்ச் 5, 2026
அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோவில், திருவேற்காடு
thirukokarnam-gokarneswarar-pragadambal-temple
  • பிப்ரவரி 19, 2026
அருள்மிகு பிரகதாம்பாள் உடனுறை கோகர்ணேஸ்வரர் திருக்கோவில், திருக்கோகர்ணம்
×

🔕 விளம்பரமில்லா ஆன்மீக அனுபவம்

விளம்பரங்கள் இல்லாமல் ஆன்மீக உள்ளடக்கங்களை வாசிக்க விரும்புகிறீர்களா?

₹949 1 Year
₹649 6 Months
₹349 3 Months
₹149 1 Month
WhatsApp மூலம் Subscribe செய்யவும்
🔕