- செப்டம்பர் 28, 2025
சென்னை – தமிழ்நாட்டின் தலைநகரம் மட்டுமல்ல, ஆன்மீக மரபுகளின் பொக்கிஷமும் ஆகும். கடற்கரையில் விளங்கும் இந்த மாநகரம், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக சிவபெருமான், விஷ்ணு, முருகன், அம்மன் மற்றும் விநாயகர் ஆலயங்களின் நம்பிக்கையை தாங்கி நிற்கிறது. பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் தவறாமல் தரிசிக்க வேண்டிய சென்னைக்கு அருகிலுள்ள பிரபல கோவில்கள் பட்டியலை இங்கே தொகுத்துள்ளோம்.
நீங்கள் சென்னையில் இருந்தாலும், ஆன்மிக யாத்திரை செல்ல விரும்பினாலும், திருவல்லீஸ்வரர் கோவில் ஒரு அற்புதமான தலம்! இது தேவாரப் பாடல் பெற்ற 276 சிவத்தலங்களில் தொண்டை நாட்டிலுள்ள 21-வது தலமாக விளங்குகிறது. இக்கோவில், குரு தோஷம் நீக்கும் பரிகார தலமாகவும், திருமண தடை நீக்கும் சிறப்பு தலமாகவும் பிரசித்தி பெற்றது. சுயம்பு லிங்கமாக எழுந்தருளிய இறைவன், பக்தர்களுக்கு முக்தி அளிக்கும் பூலோக கயிலாயம் போன்றது.
காளிகாம்பாள் ஆலயம் 3000 ஆண்டு பழமையானது. மட்டுமின்றி வரலாற்று சிறப்புடையதாகவும் திகழ்கிறது. தற்போதுள்ள ஆலயம் 1639-ம் ஆண்டு விஸ்வகர்மா குலத்தவரால் கட்டப்பட்டு, இன்றும் சீரும், சிறப்புமாக பரிபாலனம் செய்யப்பட்டு வருகிறது. இத்தலத்தில் ஒவ்வொரு சனிக்கிழமையும் மாலை 5 மணிக்கும், ஞாயிறு தோறும் காலை 10 மணிக்கும் சிறுவர்களுக்கான நீதி போதனை மற்றம் ஆன்மீக வகுப்பு இலவசமாக நடைபெறும். இத்தலத்தில் வெள்ளிக்கிழமை தோறும் கன்னி பூஜை, கோ பூஜை, திருவிளக்கு பூஜை நடத்தப்படுகிறது. இத்தலத்தில் நடைபெறும் சுவாசினி பூஜை சிறப்பு மிக்கது. இந்த பூஜை சுமங்கலிகளுக்கு விசேஷ அருள் தருவதாகும்.
1974ம் வருடம் மைலாப்பூர் சமஸ்கிருத கல்லூரி அருகில் இருக்கும் நாட்டு சுப்பராய முதலி தெருவில் வசித்து வந்த ஒரு பள்ளிக்கூட வாத்தியாரின் கனவில் இந்த நங்க நல்லூர் க்ஷேத்திரத்திற்கான வித்து தோன்றியது. திருமணம், வேலை வாய்ப்பு, ஆரோக்கியம் போன்றவற்றிற்காக பக்தர்கள் வந்து ஜபம் செய்கிறார்கள். ஒரு மாதத்திற்கு குறைந்தது ஒரு லட்சம் பக்தர்கள் விஜயம் செய்யும் ஸ்தலமாக விளங்குகிறது. இந்தக் கோவில் இந்தியா முழுவதும் உள்ள ஆஞ்சநேய பகதர்களுக்கு ஒரு புண்ணிய ஸ்தலமாக விளங்குகிறது.
பெசன்ட் நகர் கடற்கரைக்கு அருகில் உள்ள அஷ்டலட்சுமி கோவில் – ஆதிலட்சுமி, தான்யலட்சுமி, தைரிய லட்சுமி, சந்தான லட்சுமி, விஜயலட்சுமி, வித்யா லட்சுமி, கஜலட்சுமி, தனலட்சுமி என எட்டு லட்சுமிகளை கொண்ட கோவில் இது. திருமண தோஷம் போக லட்சுமி நாராயணனுக்கு திருக்கல்யாண உற்சவம் செய்து திருமண யோகம் பெறுகின்றனர். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் சந்தான லட்சுமிக்கும், நோய் குணமாக ஆதிலட்சுமிக்கும், செல்வம் வேண்டி தனலட்சுமிக்கும், கல்வி செல்வம் பெற வித்யாலட்சுமிக்கும், மனத்தைரியம் பெற தைரியலட்சுமிக்கும் பூஜை செய்து அம்மனின் அருள் பெறுகின்றனர்.
சென்னை மாநகரின் மேற்குப் பகுதியில், திருமுல்லைவாயில் என்ற அமைதியான ஊரில், மாசிலாமணீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இத்தலம், முல்லைக்கொடி சிவபெருமானை வழிபட்ட புண்ணிய பூமியாகவும், சுயம்பு லிங்கமாக மாசிலாமணீஸ்வரர் எழுந்தருளியிருக்கும் ஆன்மீகப் பொக்கிஷமாகவும் விளங்குகிறது. அமைதியும், பக்தியும் நிறைந்த இக்கோவில், சென்னை வாழ் மக்களின் ஆன்மீகத் தேவையைப் பூர்த்தி செய்யும் முக்கியத் தலமாக திகழ்கிறது.
அகஸ்தீஸ்வரர் கோவில் முனிவர் அகஸ்தியர் வழிபட்ட இடமாகும். திருமண மற்றும் குடும்ப நலனுக்காக சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது. இத்தலம், சூரிய பகவானுக்குரிய சென்னையில் உள்ள நவக்கிரக ஸ்தலங்களில் ஒன்றாகப் போற்றப்படுவதுடன், பல்வேறு மகத்துவங்களையும், ஆன்மீகச் சிறப்புகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது.
தமிழ்நாட்டின் எழில்மிகு கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்திருக்கும் திருவிடந்தை, தெய்வீக சங்கமத்தின் தினசரி கொண்டாட்டமாகத் திகழும் ஒரு ஆன்மிகப் புகலிடமாகும். அருள்மிகு நித்ய கல்யாணப் பெருமாள் கோவில், குறிப்பாக திருமணம் கைகூடவும், இல்லற உறவுகளில் இணக்கம் செழிக்கவும் அருள்புரியும் ஒரு நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக ஓங்கி நிற்கிறது. 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகப் போற்றப்படும் இக்கோவில், தொன்மையான மரபுகளை எடுத்துரைப்பதுடன், மனதைக் கவரும் புராணக் கதைகள் மற்றும் தனித்துவமான தினசரி சடங்குகளால் நிரம்பிய ஓர் ஆழமான ஆன்மிக அனுபவத்தை வழங்குகிறது.
சென்னை மாநகரில், கடற்கரையோரம் அமைந்துள்ள திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில், ஆன்மீகப் பயணிகளின் இதயத்தில் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளது. இறைவன் மருந்தீஸ்வரராகவும், இறைவி திரிபுரசுந்தரியாகவும் அருள்பாலிக்கும் இத்தலம், புராண மகத்துவமும், வரலாற்றுச் சிறப்பும், கட்டடக் கலை அழகும் கொண்டு பக்தர்களை ஈர்க்கிறது. சென்னை மாநகரின் கடற்கரையோரம் அமைந்துள்ள சிறந்த ஸ்தலம். இங்கு வழிபடுவோர் உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றிலும் புத்துணர்ச்சி பெறுகின்றனர். சென்னையில் இருக்கும் அனைவரும் இந்தத் தலத்தை தரிசித்து, இறைவனின் அருளைப் பெற வேண்டும்.
திருமுருகன் திருத்தலங்களுள் தொன்மைவாய்ந்த தென்பழனியில் பழநியாண்டியாகவும், அவரே சென்னையம்பதியில் கோடம்பாக்கம் வடபழநியில் வடபழநியாண்டியாகவும், வேண்டுவோர்க்கு வேண்டும் வரங்களை அளித்து கலியுக வரதனாகவும் எழுந்தளியிருப்பவர் அருள்மிகு வடபழநி ஆண்டவர். இங்குள்ள வடபழநி ஆண்டவரை வழிபட்டால் குடும்ப ஐஸ்வர்யம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்க, வியாபாரம் விருத்தியடைய இத்தலத்து முருகனை வேண்டிக் கொள்ளலாம். கல்யாண வரம், குழந்தை வரம் ஆகியவற்றுக்காகவும் பக்தர்கள் பெருமளவில் வருகிறார்கள்.
84 படிகள் கொண்ட குன்றின் மீது அமைந்த கோவில் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில். இக்கோவிலில் முருகன் சன்னதிக்கு நேரே நின்று பார்த்தால், முருகன் மட்டுமே தெரிவார். வள்ளி, தெய்வானையைக் காண முடியாது. சன்னதிக்கு இடப்புறம் அல்லது வலப்புறம் நின்று முருகனை பார்த்தால், வள்ளி அல்லது தெய்வானை ஆகிய இருவரில் ஒருவருடன் சேர்ந்திருக்கும்படிதான் தரிசிக்க முடியும் வகையில் சன்னதி அமைக்கப்பட்டிருக்கிறது. திருமணத்தடை உள்ளவர்கள் இங்கு அதிகளவில் வேண்டிக் கொள்கிறார்கள். முருகனுக்கு திருக்கல்யாணம் செய்து வைத்தும், வஸ்திரம் அணிவித்து, அபிஷேகம் செய்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றுகிறார்கள்.
உயர்ந்த பக்தி மற்றும் தெய்வீக தவங்களால் ஈர்க்கப்பட்ட மகா விஷ்ணு, ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன், சௌனக மகரிஷி முன் தோன்றி அவரை ஆசீர்வதித்தார். சௌனக மகரிஷி, மகாவிஷ்ணுவிடம் மனதாரப் பிரார்த்தனை செய்து, ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் தனது பக்தர்களின் துக்கங்களைப் போக்க இறைவனை எப்போதும் செருமனஞ்சேரி கிராமத்தில் இருக்குமாறு வேண்டினார். இந்தச் செருமனஞ்சேரி கிராமம் இப்போது செம்மஞ்சேரி என்று அழைக்கப்படுகிறது. ஸ்ரீநிவாச பகவான் இக்கோவிலில் குறை தீர்க்கும் கோவிந்தனாக, தம் பக்தர்களை ஆசிர்வதித்து, அவர்களின் துக்கங்களை நீக்கி, அவர்களின் விருப்பங்களை இறைவனே சௌனக மகரிஷியிடம் ஒப்படைத்தபடி நிறைவேற்றுகிறார்!
சைதாப்பேட்டை அருள்மிகு காரணீசுவரர் கோவில் இக்கோவில் திருக்காரணீசுவரம் என்றும் அறியப்பெறுகிறது. இச்சிவாலயத்தின் மூலவர் காரணீஸ்வரர், தாயார் சொர்ணாம்பிகை. சுற்றுபிரகாரத்தில் சௌந்திரஸ்வரர் மற்றும் திரிபுரசுந்தரி சந்நிதியும் உள்ளது. காரணீஸ்வரர் கோவில் திருமண மற்றும் சந்ததி ப்ரார்த்தனைக்கு மிகவும் பிரபலமானது.
பார்த்தசாரதி கோவில் பஞ்சரங்க ஸ்தலங்களில் ஒன்றாகும். தருமத்தை நிலைநாட்ட வேண்டி நிகழ்ந்த மகாபாரதப் போரில் பீஷ்மர் எய்த அம்புகளை பார்த்தனுக்குத் தேரோட்டியாக நின்று தாமே தாங்கியதால் ஏற்பட்ட வடுக்களை உற்சவர் திருமுகத்தில் இன்றும் தரிசிக்கலாம். இந்த ஐதீகத்தின் அடிப்படையில் பெருமாள் ஸ்ரீ பார்த்தசாரதி என்றழைக்கப்படுகிறார். அழகாக பிறக்கவில்லையே என வருந்துபவர்கள், திருமாலின் இந்த கோலத்தை தரிசித்தால் அழகு அழியும் தன்மையுடையது என்ற தத்துவத்தை உணர்வர்.இத்தலத்து பெருமாளை மனமுருக வேண்டினால் கல்யாண வரம், குழந்தை வரம் மற்றும் குடும்ப ஐஸ்வர்யம் ஆகியவை கிடைக்கும்.
சென்னை பல்லாவரதிலிருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் மேற்கே உள்ளது. மாமலையாவது திருநீர்மலையே என்று திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற பெருமாள் திருக்கோவில் இது. இத்தலத்தின் குளத்தில் நீராடி, பெருமாளை வழிபட்டால் நோய் விலகி நலம் உண்டாகும். அத்துடன் சித்தம் தெளிந்து சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இங்குள்ள மரத்தில் தொட்டில் கட்டியும், திருமணத்தடை நீங்க பெண்கள் கிரிவலம் செய்தும் வழிபடுகின்றனர்.
சென்னையின் இதயத்தில் விளங்கும் கபாலீஸ்வரர் கோவில்இறைவன் மேற்கு பார்த்து அருள்பாலிப்பது சிறப்பு. இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இங்குள்ள ஈசனை வழிபடுவோர்க்கு மனநிம்மதி கிடைக்கும். அம்பிகை மயில் வடிவில் பூஜித்த தலமென்பதால், “மயிலாப்பூர்” என்ற பெயர் ஏற்பட்டது. தேவலோகத்து கற்பக மரம், கேட்டதை கொடுப்பதைப்போல, இத்தலத்து அம்பிகையும் கேட்கும் வரங்களை தருவதால் “கற்பகாம்பிகை” எனப்பட்டாள். உடல் சம்பந்தப்பட்ட எந்த நோயானாலும் இத்தலத்து அம்பாளை வணங்கினால் விரைவில் குணமடைகிறது. கல்யாண வரம், குழந்தை வரம் மற்றும் குடும்ப ஐஸ்வர்யம் ஆகியவை கிடைக்கும்.
சென்னை பல்லாவரத்தில் இருந்து பம்மல், அனகாபுத்தூர் வழியாகச் சென்றால், குன்றத்தூர் எனும் அழகிய ஊரை அடையலாம். சிறிய மலை மீது கோவில் கொண்டிருக்கிறார் முருகப் பெருமான். மலையடிவாரத்துக்கு அருகிலேயே கந்தனின் மாமனான திருமால், ஊரகப்பெருமாள் என்ற திருநாமத்துடன் கோவில் கொண்டுள்ளார். அதையடுத்து சிவபெருமானின் கந்தழீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.
அரச மரத்திலிருந்து ஆனைமுகத்தோன் சுயம்புவாகத் தோன்றியது சிறப்பு. இன்று, பால விநாயகரோடு, அரச மரத்தில் தோன்றிய இருபத்தொரு விநாயகர்கள், துர்க்கை, தென்முகக் கடவுள், லட்சுமி நாராயணன், அனுமன் ஆகியோர் தரிசனம் தருகின்றனர் இங்கே. இருபுறமும் கண்ணாடிகள் பதித்த வித்தியாசமான அமைப்புள்ள சக்கர வியூக சன்னதியில் தேவியர் இருவருடன் சுப்ரமண்யன் இருக்கிறான். தரிசிக்க நெருங்கினால் கண்ணாடிகளின் பிரதிபலிப்பில் ஆறுமுகன், நூறுமுகங்கள் காட்டி சிலிர்க்கச் செய்கிறான்.
சென்னையிலிருந்து தெற்கில் 56 கிலோ மீட்டர் தொலைவில் செங்கல்பட்டு மாவட்டத்தில் வங்காள விரிகுடா கடற்கரையில் மாமல்லபுரம் அமைந்துள்ளது. மாமல்லபுரம் என்றாள் அனைவரது நினைவுக்கும் வருவது மாமல்லபுரத்து குகைக் கோவில் சிற்பங்கள். மகேந்திர வர்மன் & நரசிம்ம பல்லவனால் கட்டப்பட்ட கற்சிற்பங்கள், குகைக் கோவில்கள், ஒற்றைக்கல் ரதம் மற்றும் கடற்கரை கோவில் ஆகியவை மாமல்லபுரத்தின் சிறப்பம்சங்களாகும். மாமல்லபுரத்து சிற்பங்கள் புராண கதைகள், இதிகாச போர்கள், ராட்சஸர்கள், மற்றும் விலங்குகள் உள்ளது உள்ளபடி தத்ரூபமாக உலகம் வியக்கும் வண்ணம் அமைந்துள்ளன. மக்கள் அனைவரும் பார்த்து வியக்கும் மகிஷாசுரமர்த்தினி சிற்பத் தொகுதி இங்குதான் உள்ளது. இவற்றுக்கான உலகம் முழுவதிலுமிருந்து பல லட்சக்கணக்கான மக்கள் வருடம் முழுவதும் வந்து செல்கின்றனர். யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளம்.
கிருஷ்ணர் சிறுவயதில் குறும்புக்காரனாக இருந்ததால், யசோதை அவரை கட்டுப்படுத்த முடியவில்லை. ஒருநாள் அவர் வெளியே செல்லாமல் இருக்க, இடுப்பில் கயிறு கட்டி உரலில் கட்டினார். ஆனாலும் கிருஷ்ணர் உரலையும் இழுத்துச் சென்று இரண்டு அசுரர்களுக்கு விமோசனம் அளித்தார். கயிறு இடுப்பை அழுத்தியதால் தழும்பு ஏற்பட்டது; அதனால் இவர் “தாமோதரன்” (தாமம் – கயிறு, உதரம் – வயிறு) என அழைக்கப்பட்டார். இதன் நினைவாக இத்தலத்தில் தாமோதரருக்குக் கோவில் கட்டப்பட்டது; புன்னகையுடன் காட்சியளிப்பதால் இவர் “சௌம்ய தாமோதரர்” என்றும் அழைக்கப்படுகிறார். சௌம்ய தாமோதரரிடம் வேண்டிக்கொள்ள அறிவான குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை.
வல்லக்கோட்டை ஆலயம் சென்னை நகரின் புறப் பகுதியான தாம்பரத்தில் இருந்து 24 கிலோமீட்டர் தொலைவிலும், ஸ்ரீ பெரம்பத்தூரின் தெற்குப் பகுதியில் இருந்து சுமார் பன்னிரண்டு கிலோ தொலைவில் ஸ்ரீபெரம்பத்தூர் – செங்கல்பட்டு வழித் தடத்தில் உள்ளது. அருணகிரிநாதர் இந்த ஆலயத்தைப் பற்றி பல பெயர்களில் எழுதி இருந்தாலும் அந்த ஆலயத்தை வல்லக்கோட்டை என்றே தற்போது அழைக்கின்றார்கள். சென்னையில் இருந்தும் அதை சுற்றி உள்ளப் பகுதியில் இருந்தும் ஆயிரக்கணக்கானவர்கள் விடுமுறை நாட்களிலும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் அங்கு வருகிறார்கள். இத்தல இறைவனை வழிபட வரும் பக்தர்கள் இந்த தீர்த்தத்தில் நீராடி முருகனை வழிபட்டால் வினைகள் நீங்கும் என்பது ஐதீகம்.
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் இத்தனை பிரபல கோவில்கள் உள்ளதை அறிந்து பக்தர்கள் பெருமிதம் கொள்வார்கள். ஒரு நாளிலோ அல்லது ஒரு வார இறுதியிலோ இந்த கோவில்களை தரிசிக்க ஒரு ஆன்மீக யாத்திரை திட்டமிடுங்கள். பக்தி, சாந்தி மற்றும் ஆனந்தம் நிரம்பிய ஒரு அனுபவமாக இது மாறும். இங்கு பட்டியலிடப்பட்ட தளங்களைத் தவிர மேலும் பல கோவில்கள் சென்னைக்கு அருகில் இருக்கின்றன. அப்படி நீங்கள் தரிசித்த கோவிலைப் பற்றி கீழே கமெண்டில் சொல்லவும்.