- அக்டோபர் 12, 2025
Last updated on செப்டம்பர் 18, 2025
புதுக்கோட்டை மாவட்டத்தில், அறந்தாங்கியில் அமைந்துள்ள வீரமாகாளி அம்மன் ஆலயம், அறந்தாங்கியைச் சுற்றியுள்ள பதினாறு கிராமங்களின் காவல் தெய்வமாக போற்றப்படுகிறது.
இந்த ஆலயம் திருமண விருப்பம் நிறைவேற வேண்டி பொட்டுத் தாலி காணிக்கை செலுத்தப்படும் சிறப்பு தலம். வருடம் முழுவதும் பக்தர்கள் வந்து வழிபடும் இவ்வாலயத்தில், முப்பது நாட்கள் நீடிக்கும் பிரம்மோற்சவம் பெருமையாக நடைபெறுகிறது.

அறந்தாங்கி மூக்குடி கிராம மக்களின் குலதெய்வமாகவும், காவல் தெய்வமாகவும் விளங்கும் இந்த அம்மன், முதலில் சிறிய கல் வடிவில் சுயம்புவாகத் தோன்றியதாக கூறப்படுகிறது.
சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு, கிராம மக்கள் அவருக்கு ஒரு திருவுருவச் சிலை செய்ய எண்ணினர். நான்கு கரங்களுடன் உருவாக்கப்பட்ட சிலையின் வலது மேல் கரத்தில் ஒரு விரல் பின்னமாக வந்ததால், மக்கள் மனவருத்தமடைந்தனர்.
அதே இரவு, கோவில் அர்ச்சகரின் கனவில் அம்மன் தோன்றி, “நான் பூமியில் மறைந்து இருந்தேன். வெளிப்படும் நேரம் வந்துவிட்டது. என்னை தேடிச் சென்று காணுங்கள். என் ஆலயத்தில் இருந்து ஒரு ஆட்டை விடுங்கள். அது எங்கு நின்று அமருகிறதோ அங்கே தோண்டுங்கள் – நான் கிடைப்பேன்.” என்று கூறினாள்.
அர்ச்சகர் அந்தக் கனவை கிராம மக்களிடம் கூறினார். அவர்கள் ஆட்டை நடக்கவிட்டனர்; அது ஒரு இடத்தில் அமர்ந்ததும், அங்கு தோண்டினர். சில அடி ஆழத்தில், எட்டு கரங்களுடன், அசுரனை அழிக்கும் கோலத்தில் அம்மனின் பிரம்மாண்ட சிலை கிடைத்தது. அதிசயமாக, அந்தச் சிலையின் வலது மேல்கரத்தில் ஒரே விரல் பின்னமாக இருந்தது!
மக்களுக்கு ஐயம் எழுந்தது – இதனை வழிபாடு செய்யலாமா என. அதே இரவு மீண்டும் அர்ச்சகரின் கனவில் அம்மன் தோன்றி, “உங்கள் வீட்டில் ஒருவருக்கு குறை இருந்தால் அவரை விட்டுவிடுவீர்களா? நான் உங்களை காக்க வந்த அன்னை. தயக்கமின்றி என்னை நிறுவி வழிபடுங்கள்.” என்று அருள் மொழி கூறினாள்.
அதன்பின் அந்தச் சிலை ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அன்று முதல் இன்று வரை, வீரமாகாளி அம்மன் ஊர் மக்களின் காவல் தெய்வமாக இருந்து அருள்பாலித்து வருகிறார்.
கோவில் வடக்கு நோக்கிய வாசலுடன் அமைந்துள்ளது. முன் மண்டபத்தில் கருப்பசாமி, விநாயகர் ஆகிய தெய்வங்கள் அருள்பாலிக்கின்றன.
கருவறை வாசலில் கல்லால் வடிக்கப்பட்ட பெரிய துவாரபாலகியர்கள் காக்கின்றனர்.
கருவறையின் இடதுபுறத்தில் பழங்கால விநாயகர், பெருச்சாளி வாகனம் உள்ளிட்ட சிறிய தெய்வ சிலைகள் உள்ளன.
கருவறைக்குள் நுழைந்ததும், அன்னை வீரமாகாளி எட்டுக் கரங்களுடன், பிரம்மாண்ட வடிவில், சாந்தமாக அருள்காட்சி அளிக்கிறார்.
அவர் வடக்கு நோக்கி அமர்ந்திருக்கிறார். சிரசில் மகுடம், வலது காதில் நாகாபரணம், இடது காதில் பாம்படம் போன்ற ஆபரணங்களுடன் சிவசக்தி சொரூபமாக காட்சி தருகிறார்.
வலது கரங்களில் சூலம், வாள், உடுக்கை, வேதாளம்; இடது கரங்களில் கேடயம், அங்குசம், மணி, வரத ஹஸ்தம் ஆகியவற்றுடன் அழகாக காட்சியளிக்கிறார்.
காளிக்குரிய கபாலம் மட்டும் இல்லை என்பது இங்குள்ள சிலையின் தனிச்சிறப்பு.
அன்னையின் வலது கால் மடக்கி, இடது காலால் அசுரனின் தலையை அழுத்தியும், சூலத்தால் குத்தியும் இருக்கும் கோலம் மிகவும் அபூர்வமானது.

காலை 06:00 மணி முதல் நண்பகல் 12:00 மணி வரையிலும், மாலை 05:00 மணி முதல் இரவு 09:00 மணி வரையிலும் ஆலயம் தரிசனம் செய்யலாம்.
44, Veeramakaali Amman Kovil St, Aranthangi, Tamil Nadu 614616
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டத்தில் அமைந்துள்ள, அறந்தாங்கி நகரில் இவ்வாலயம் அமைந்துள்ளது. புதுக்கோட்டையில் இருந்து 33 கி.மீ., திருச்சிராப்பள்ளியில் இருந்து 90 கி.மீ. தொலைவிலும், அறந்தாங்கி பேருந்து நிலையத்தில் இருந்து மேற்கே அரை கி.மீ. தொலைவிலும் இவ்வாலயம் அமைந்துள்ளது.