×
Friday 21st of August 2026

இராமாயணத்தில் வாலி வதம் – ஒரு புதிய கண்ணோட்டம்


ramayanathil-vaali-vadham

எழுதியவர் – பாகவத சிரோன்மணி திருவையாறு ப்ரம்மஸ்ரீ பிரேம்நாத் பாகவதர்

இராமாயணத்தில் இராவணனுக்கு இணையான வலிமை கொண்டவன் வாலி. அப்படிப்பட்ட வாலி இராமரால் வதம் செய்யப்பட்டதைப் பற்றி நாம் அறிவோம்.இதைப்பற்றி பல விவாதங்களில், பட்டிமன்றங்களில், காரசாரமாக ஸ்ரீராமன் வாலியைப் கொன்றது தர்மநீதியை அனுசரித்தேஎன்றும், ஸ்ரீராமன் வாலியைக் கொன்றது தர்ம நீதிக்கு புறம்பானது என்றும் விவாதங்கள் அன்றும்,இன்றும் நடந்துவருகின்றன.ஸ்ரீவால்மீகி வர்ணிக்கும் போது ஸ்ரீராமன் பரப்ரஹ்ம ஸ்வருபம் என்றும் ஸ்ரீராமன், தர்மமே மூர்த்திகரித்து இருப்பவன் என்றும் தர்மதெய்வமாகக் கருதும்போது அவரின் வார்த்தைகள் சத்தியமாகத்தான் இருக்கும்.

வாலியை ராமர் மறைந்திருந்து கொன்றதாய்ச் சொல்லப் படுவது முதன்முதலில் கம்பராமாயணத்திலே தீர்மானிக்கப் பட்டதாகவே காணப்படுகிறது.

துளசிதாசர், ராமனை ஒரு கடவுளாகவே சித்திரிக்கின்றபடியால், ராமன் மறைந்திருந்து வாலியைக் கொன்றதாய் அவர் சித்தரித்திருந்திருந்தாலும், வாலியோ ராமனை ஒரு அவதாரம் எனவும், கடவுள் எனவும் உணர்ந்ததாயும், எத்தனை பிறவி எடுத்தாலும் ராமன் பாதங்களை மறவாத வரம் வேண்டும் என்று கேட்பதாயும் வரும். ஆனால் கம்பரோ, சுக்ரீவன் இறுதி முறையாக அடையாளம் காணக் கூடிய மாலை அணிந்து போருக்குச் செல்லும்போதே, ராமனும், சுக்ரீவனும் திட்டம் போட்டுக் கொண்டதாய்க் காட்டுகின்றார். வாலியோடு சுக்ரீவன் சண்டை போடும்போது ராமன், மற்றொரு இடத்தில் இருந்து அம்பு தொடுப்பதாய் சுக்ரீவனிடம் சொல்லுவது போல் வருகின்றது. அம்பானது வாலியின் மார்பில் தைத்து, அதில் ராமனின் பெயரைப் பார்த்துவிட்டே வாலி கண்டு பிடிப்பதாயும் வரும். அதில் ராமனைப் பற்றி வாலி நினைப்பதாய்க் கம்பர் இவ்வாறு கூறுகின்றார்:

இல்லறம் துறந்த நம்பி எம்மனோர்க்காகத் தங்கள்
வில் அறம் துறந்த வீரன் தோன்றலால் வேத நல் நூல்
சொல் அறம் துறந்திலாத சூரியன் மரபும் தொல்லை
நல் அறம் துறந்தது என்னா நகை வர நாண் உட்கொண்டான்.

மனைவியோடு சந்தோஷமாய் அனுபவிக்க வேண்டிய இல்வாழ்வைத் துறந்து காட்டுக்கு வந்த ஆண்மகன் ஆகியவனும், தங்கள் குலப் பரம்பரையில் வந்த விற்போர் முறையை, எம் போன்ற வானரங்களைக் கொல்வதற்காகக் கைவிட்ட வீரனும் ஆன இந்த ராமன் தோன்றியதால், வேதங்களின் அறங்களையும் அவற்றில் சொல்லப் பட்ட தர்மங்களையும் கடைப்பிடிக்கும் அவன் பிறந்த சூரியகுலம் தன் அறத்தை இழந்து பாழ்பட்டது என எண்ணி ஏளனத்துடன் வாலி நகைத்தானாம். பின்னர் வாலி ராமனைக் கேட்கும் கேள்விகளும் அதற்கான வால்மீகியின் பதில்களை ஒட்டிய கம்பரின் பதில்களும் வருகின்றன. ஆனால் மேலே கடைசியில் வாலி ராமனை நீ ஒரு வேடன் போல் என்னை மறைந்திருந்து ஏன் கொன்றாய் எனக் கேட்டதாயும், அதற்கு லட்சுமணன், சொல்வதாய் இவ்வாறு கம்பர் கூறுகின்றார்:

“உன் தம்பியாகிய சுக்ரீவன் என் அண்ணனை முதலில் சரணடைந்து “அபயம்” எனக் கேட்டுவிட்டான். நீயும் சரியான விதிமுறைகளைக் கடைப்பிடிக்கவில்லை என உறுதியாய்த் தெரிந்ததால் அண்ணனும் அபயம் அளித்தார். இப்போது சண்டையில் ஒரு வேளை உன்னைக் காத்துக்கொள்ள நீயும் அபயம் என வந்துவிட்டால் என்ன செய்வது என்பதாலேயே மறைந்திருந்து கொல்ல நேரிட்டது.” 

என்று லட்சுமணன் கூறுவதாய்க் கம்பர் சொல்கின்றார். வாதம் செய்வதற்கும், செய்ததை நியாயப் படுத்துவதற்கும் வேண்டுமானால் மேற்கண்ட மேற்கோளை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் உண்மையில் நடந்ததை, நடந்தபடியே வால்மீகி விவரிக்கின்றாரே?

இது இப்படியே இருக்கட்டும். ஆனால் முதல் தோன்றியது வால்மீகியின் ராமாயணமே என்பதில் யாருக்கும் ஐயம் இல்லை. அதில் இவ்வாறு சொல்லப் படவில்லை. ஏன் எனில் நடந்ததை நடந்தபடிக்கே எழுதி இருக்கின்றார் வால்மீகி. ஒரு அரசன் கடைப்பிடிக்கவேண்டிய தர்மத்தில் இருந்து ராமன் சற்றும் பிறழ்ந்ததாய் எங்கும் சொல்லவில்லை. சுக்ரீவன், அனுமன், ராமன், லட்சுமணன் உட்பட அனைவரும் கூட்டமாகவே கிஷ்கிந்தைக்குச் சென்று, காட்டில் மறைந்து நிற்கின்றனர். பின்னர் வாலிக்கு சுக்ரீவன் அறைகூவல் விடுத்துக் கூப்பிட்டுச் சண்டை நடக்கின்றது. சண்டையின் போது ராமர் மறைந்து இருந்ததாய் வால்மீகி எங்கும் குறிப்பிடவில்லை. சண்டையின்போது சுக்ரீவன் தனக்கு உதவிக்கு யாரும் வருகின்றார்களா எனச் சுற்றும் முற்றும் பார்த்ததாயும் அதை ராமன் பார்த்ததாயும் குறிப்பிடுகின்றார்.

கிஷ்கிந்தா காண்டம் அத் 16.ஸ்லோ.31

हीयमानमथोऽपश्यत्सुग्रीवं वानरेश्वरम्।वीक्षमाणं दिशश्चैव राघवस्स मुहुर्मुहुः ||

பொருள்: அப்போது ராகவனான ராமன், குரங்குகளுக்கு அரசனான சுக்கிரீவன் வாலியால் தாக்கப்பட்டுச் சக்தி குன்றித் தளர்ந்து போவதைக் கண்டான். மேலும் சுக்கிரீவன் உதவிக்காகத் திசைகளை நோக்கியும், ராமனின் உதவியை எதிர்பார்த்தும் மீண்டும் மீண்டும் சுழன்று பார்ப்பதை உற்றுப் பார்த்தான்.

அதன் பின்னரே ராமன் சுக்ரீவன் உதவிக்குப் போகின்றார். ராமர் நேரிடையாக வாலியுடன் சண்டை போட்டதாய் எங்கும் சொல்லவில்லைதான். அதே சமயம் மறைந்திருந்து சண்டை போட்டதாயும் எங்கும் சொல்லவில்லையே?

கிஷ்கிந்தா காண்டம் அத் 17.ஸ்லோ.21

मामन्येन संरब्धं प्रमत्तं वेद्धुमर्हसि । इति मे बुद्धिरुत्पन्ना बभूवादर्शने तव ॥ 

நான் உன்னுடன் சண்டை போடாமல், உன்னைக் கவனிக்கக் கூட இல்லாமல் சுக்ரீவனுடன் போரிடுவதிலேயே கவனமாய் இருந்தபோது என்னை நீ வீழ்த்தி விட்டாய். உன்னுடன் நேருக்கு நேர் மோதாத என்னை நீ எப்படி வீழ்த்தலாம் என்றே வாலி கேட்கின்றான் ராமனை. மேலும் பலவகையிலும் ராமனை இகழ்ந்து வாலி பேசியபின்னரே, ராமர் தனது கடமையையும், குல தர்மத்தையும், ஒரு அரசனானவன், வானரங்களைக் கொல்வது தவறில்லை எனவும் சொல்கின்றார். அதிலும் தம்பி மனைவியை அவள் இஷ்டம் இல்லாமல் வலுக்கட்டாயமாய் அபகரித்ததே அவனைக் கொல்ல முக்கியக் காரணம் என்றும் சொல்கின்றார். மேலும் ராமர் வில்லை எடுக்கும்போதும், அம்பைப் பொருத்தும் போதும், அம்பை விடுவிக்கும்போதும் ஏற்பட்ட சப்தத்தைக் கம்பரும் விவரித்திருக்கின்றார். வால்மீகியும் சொல்கின்றார். பறவைகளும், மான்களும், காட்டு மிருகங்களும் சிதறிப் பதறி ஓடி இருக்கும்போது வாலிக்குத் தெரியாமல் ராமன் வாலியைக் கொன்றது எப்படி? சிந்திப்போம் இனியாவது!

கிஷ்கிந்தா காண்டம் அத் 16.ஸ்லோ.33

ततो धनुषि सन्धाय शरमाशीविषोपमम् । पूरयामास तच्चापं कालचक्रमिवान्तकः ॥

அப்போது ஸ்ரீ ராமர் விஷமுள்ள பாம்பைப் போன்ற பயங்கரமான அம்பினைத் தனது வில்லில் பூட்டி, எமன் ஊழிக்காலத்தில் காலச்சக்கரத்தை இயக்குவதைப் போல அந்த வில்லை நன்றாக வளைத்தார்.

இராமன் தனது வில்லின் நாணைப் பிடித்து இழுத்து ஒலியெழுப்பிய போது, அந்தப் பெரு ஒலிக்குப் பயந்து பறவைகளும் விலங்குகளும் பிரளயக் காலம் வந்தது போல நிலை தளர்ந்து திசையெங்கும் ஓடின.

கிஷ்கிந்தா காண்டம் அத் 16.ஸ்லோ.35

मुक्तस्तु वज्रनिर्घोषः प्रदीप्ताशनिसन्निभः ।राघवेण महाबाणो वालिवक्षसि पातितः ॥

அந்த அம்பு வில்லில் இருந்து புறப்பட்ட போது, இந்திரனின் வஜ்ராயுதம் உண்டாக்கும் இடியைப் போன்ற மகா பயங்கரமான ஒலியை எழுப்பியது. மேலும், அது வானில் பற்றி எரியும் மின்னலைப் போலக் கொழுந்துவிட்டுப் பிரகாசித்துக் கொண்டு வந்து, வாலியின் மார்பில் பலமாகப் பாய்ந்து அவனைத் தாக்கியது மேலும் சுக்ரீவனோ, மற்ற வானரங்களோ கூட ராமன் மறைந்திருந்து வாலியைக் கொன்றதாய்க் கூறவில்லை. வாலியின் ஆயுதங்கள் ஆன மரங்களையும், பாறைகளையும் ராமன் பொடிப்பொடியாக்கி விட்டதாகவே கூறுகின்றனர். மேலும் ஒரு மனித தர்மத்திற்கு உட்பட்டே ராமன் நடந்து கொண்டார் எனவும் கொள்ளவேண்டும்.

ராமன் வாலியின் எதிரே வந்து சண்டை போட்டிருந்தார் எனில், ஒன்று வாலி சரணடைந்திருக்கலாம், அப்போது சுக்ரீவனுக்கு ராமன் கொடுத்த வாக்கைக்காப்பாற்ற முடியாது. கொடுத்த வாக்கைக் காப்பது அரசனுக்கு முக்கியக் கடமை. அதிலும் அபயம் என்று வரும் அரசர்கள், சிற்றரசர்களுக்கு உதவி செய்வதும் அரச தர்மம். அல்லது ராமன் நேரில் சண்டைக்கு வருகின்றான் என்ற காரணத்தினால் ஏற்கெனவே ராவணனை வென்றிருக்கும் வாலி, அவனுக்குத் துணைக்கும் போயிருக்கலாம், அல்லது வாலியினிடம் இருந்த சுக்ரீவன் மனைவி ருமைக்கு ஆபத்து நேரிட்டிருக்கலாம். இவை அனைத்தையும் யோசித்தே, அரச தர்மம் இது என உணர்ந்து ராமன் செயல்பட்டிருக்கின்றான் என்றே நாம் கொள்ளவேண்டும்.

நாம் ராமனை அவதாரமாகவே நினைப்பதால் வரும் தவறான கருத்தே இது. ராமனுக்கு அந்தக் கட்டாயம் ஏதும் இல்லை. அவன் தான் மனிதனா? அவதாரமா? என்ற கேள்விகளுக்குள் போகவே இல்லை. அவனுக்குச் சிலமுறை சுட்டிக் காட்டப் பட்டும் அவன் தான் யார் எனத் தெரியாமலேயே சாதாரண மனித தர்மத்திற்கும், மனித குணங்களுக்கும் உட்பட்டே அநேக காரியங்களைப் புரிந்து வந்திருக்கின்றான். இன்னும் சொல்லப் போனால் இவை இரண்டுக்கும் நடுவில் இருந்து கொண்டு தன் விதியானது தன்னை எங்கே கொண்டு சேர்க்கப் போகின்றது என்பதைக் கூட அறியாதவனாயும் இருக்கின்றான். அதன் வழியில் அது இழுத்த இழுப்பின் போகவேண்டிய கட்டாயத்துக்கும் ஆளாகின்றான். ஒரு அவதாரம் என்றால் அவனால் முடியாது என்ன? சற்றே யோசிக்கலாம். அப்படி அவனுக்குத் தான் ஒரு அவதாரம் என்பதும், தன்னால் முடிக்கவேண்டிய காரியம் ராவண வதம் என்றும், அதை நோக்கியே விதி தன்னை இழுத்துச் செல்கின்றது என்பதும் முன்பே தெரிந்து கொண்டிருந்தானால், கதை எப்படி இருந்திருக்கும்? கதையின் போக்கே மாறி இருக்கும் அல்லவா? இனி மேற்கொண்டு என்ன நடந்தது என்பதைப் பார்ப்போம்.

வாலி சுக்ரீவனைக் கொல்ல முற்படுகையில், இராமபாணம் வாலியின் மார்பில் குத்தியது. மேரு மலையை ஒத்த வாலி பூமியில் வீழ்ந்தான். அவன் தன் மேல் அம்பு விட்டது யார்? என ஐயமுற்றான். தேவர்கள் இச்செயலைச் செய்தார்களோ? என எண்ணினான். பின் பாற்கடலைக் கடைந்து அமுதம் எடுக்க தேவர்களுக்கு தான் உதவியிருப்பதால், அவர்கள் இச்செயலினைச் செய்ய மாட்டார்கள் எனத் தெளிந்தான்.

பின் வாலி ”இதனைச் செய்தது யார்?” என்னும் ஐயத்தோடு தன் மார்பில் பாய்ந்த அம்பினை எடுத்தான். வாலி மார்பில் இருந்த அம்பினை எடுத்தவுடன் வெள்ளமென இரத்தம் பெருகி ஓடியது. வாலியின் நிலையைக் கண்ட சுக்ரீவன் உடன்பிறப்பென்னும் பாசத்தால் கண்ணீர் வடித்தான். 

தன் மார்பில் இருந்த அம்பினை கையில் எடுத்த வாலி, அதில் இராமனது பெயர் பொறிக்கப்பட்டிருப்பதனைப் பார்த்தான்.

மும்மை சால் உலகுக்கு எல்லாம் மூல மந்திரத்தை, முற்றும்
தம்மையே தமர்க்கு நல்கும் தனிப் பெரும் பதத்தை, தானே
இம்மையே, எழுமை நோய்க்கும் மருந்தினை, ‘இராமன்’ என்னும்
செம்மை சேர் நாமம் தன்னை, கண்களின் தெரியக் கண்டான்.

அப்பொழுது இராமன் அவ்விடம் வந்தான். பின் வாலி இராமனிடம் இராமா! இது தான் உன் தருமமா? தந்தையின் வாக்கிற்காக அரச பதவியைத் துறந்து கானகம் வந்து தவ வாழ்வு வாழும் நீ, இப்பொழுது வில்லறம் துறந்து என் மேல் அம்பு எய்தாய். உனக்கும் எனக்கும் என்ன பகை இராமா? இருவர் போரிடும் போது ஒருவர் மேல் மறைந்து நின்று அம்பு எய்துதல் எவ்வகையில் அறமாகும்?

இருவர் போர் எதிருங்காலை இருவரும் நல்லுற்றாரே!
ஒருவர் மேல் கருணை தூண்ட
ஒருவர் மேல் ஒளித்து நின்று வரிசிலை குழைய வாங்கி வாயம்பு
மருமத்து எய்தல்தருமமோ? பிறிதொன் றாமோ? தக்கிலது என்னும் பக்கம்

இராமா! நீயே இவ்வாறு முறை தவறி நடந்தால், பின் இழிந்தவர்கள் நிலைமை என்னவாகும்? இராவணன் செய்தது தவறென்றால் நீ செய்தது சரியாகுமா? சீதையை மீட்பதற்காகவா இதனைச் செய்தாய்? என்னிடம் கூறியிருந்தால் நான் இராவணனை அழித்து சீதையை மீட்டு உன்னிடம் அளித்திருப்பேனே! இராவணனை அழிக்க புயல் போன்ற என்னை விடுத்து முயல் போன்ற சுக்ரீவனின் துணைக் கொண்டாயே. இவ்வாறு வாலி பலவாகப் புலம்பினான்.

வாலி பலவாகப் பேசினாலும், அவற்றினைப் பொறுமையாகக் கேட்ட இராமன் பின் பதில் அளித்தான். இராமன் ”வாலி, நீ சுக்ரீவன் மனைவியைக் கவர்ந்து சென்றது அறமில்லாத செயல். பிறன் மனை நயத்தல் கொடிய குற்றமாகும். மேலும் சுக்ரீவன் முதலில் என்னிடம் வந்து அபயம் எனக் கேட்டதனால் நான் அவனுக்கு உதவி செய்தேன். நானும் சுக்ரீவனும் நண்பர்களாக நட்பு பிரமாணம் செய்து கொண்டோம். சுக்ரீவன் உன்னிடம் நாட்டினை அளித்து, தான் செய்தது தவறு என மன்னிப்புக் கேட்டும் நீ அவனைக் கொல்ல துரத்தினாய். நீங்கள் இருவரும் போரிடும் போது நான் உங்கள் முன் வந்தால், நீயும் என்னிடம் சரணடைந்தால், என்னால் சுக்ரீவனுக்குக் கொடுத்த வாக்கினை நிறைவேற்ற முடியாது. எனவே மறைந்து நின்று அம்பெய்தேன்” என்றான்.

இனையது ஆதலின், எக்குலத்து யாவர்க்கும்,
வினையினால் வரும் மேன்மையும் கீழ்மையும்
அனைய தன்மை அறிந்தும், அழித்தனன்,
மனையின் மாட்சி என்றான், மனு நீதிமான்

இராமனின் விடையால், வாலி தன் குற்றங்களை உணர்ந்தான். தவற்றினை உணர்ந்த வாலி, இராமன் பெருமைகளையும் உணர்ந்ததனால், தான் என்னும் செருக்கற்று அடங்கினான்.

வாலி இராமனிடம் ”இராமா! எல்லா உயிர்களிடமும் அன்பு காட்டி அருள் செய்பவன் நீ. அறமும், நடு நிலையும், நற்குண அறிவும் உடையன். நாய் போலும் இழிந்த என்னை மன்னித்து, என் குற்றங்களைப் பொறுத்தருள்வாயாக.

இராமன் வாலியைக் கொன்றதற்கான தர்ம நியாயங்கள் (இராமாயணம்)

இராமன் மரத்தின் பின்னால் மறைந்து நின்று வாலியைக் கொன்றது ஏன் என்பதற்குப் பல ஆன்மீக மற்றும் தர்ம விளக்கங்கள் அளிக்கப்படுகின்றன:

வரத்தின் பலம்: வாலியின் நேருக்கு நேர் நின்றால் எதிரியின் பலத்தில் பாதி அவனுக்குச் சென்றுவிடும். இராமன் அவனது வரத்திற்கு மதிப்பளித்து, நேருக்கு நேர் போரிடாமல் மறைந்து நின்றார்.

தம்பி மனைவியைக் கவர்தல்: சுக்ரீவனை நாட்டை விட்டுத் துரத்தியதோடு மட்டுமன்றி, அவன் மனைவி ருமா வாலி தனதாக்கிக் கொண்டான். தம்பி மனைவி மகளுக்குச் சமம் என்பதால், வாலி செய்த இந்த அதர்மத்திற்காக அவனுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது.

மிருக தர்மம்: வாலி ஒரு வானரம் (குரங்கு). விலங்குகளை வேட்டையாடும் போது வேடன் மறைந்து நின்று அம்பு எய்வது தர்மத்திற்குப் புறம்பானது அல்ல என்ற வாதமும் முன்வைக்கப்படுகிறது.

சரணாகதி தர்மம்: சுக்ரீவன் முன்னரே இராமனிடம் அடைக்கலம் புகுந்துவிட்டான். சரணடைந்தவரைக் காப்பது இராமனின் கடமை என்பதால் சுக்ரீவனின் எதிரியான வாலியை இராமன் வீழ்த்தினார்.

வாலி வதம் – ஒர் புதிய கண்ணோட்டம் 

வாலியின் நேருக்கு நேர் நின்றால் எதிரியின் பலத்தில் பாதி அவனுக்குச் சென்றுவிடும். இந்திரனிடமிருந்து அவன் பெற்ற வரத்திற்கு மதிப்பளித்து,இராமன்,நேருக்கு நேர் போரிடாமல் மறைந்து நின்றார்.

மேலும் ஸ்ரீராமர் வாலியுடன் நேருக்கு நேர் போர்புரிந்தால் ஸ்ரீராமனின் பாதி பலம் வாலிக்குப்போயிருக்கும்.ஸ்ரீராமன் பரப்ரஹ்ம ஸ்வருபமானவர்.

“ஓம் பூர்ணமத பூர்ணமிதம்” என்பது யஜுர்வேதத்தின் பிரஹதாரண்யக உபநிஷதத்தில் உள்ள புகழ்பெற்ற சாந்தி மந்திரமாகும். இது பரம்பொருளின் முழுமைத் தன்மையையும், பிரபஞ்சத்தின் தன்மையையும் விளக்குகிறது. கடவுள் முழுமையானவர், அவரிடமிருந்து தோன்றும் இந்த உலகமும் முழுமையானது. முழுமையிலிருந்து முழுமையை எடுத்தாலும் முழுமையே மிஞ்சும் என்ற அத்வைத தத்துவத்தை இது குறிக்கிறது.

ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात्पुर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते ॥

ஓம் பூர்ணமத: பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ண முதச்யதேபூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமேவாவசிஷ்யதே ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:

பூர்ணம்அத: (அது): காணப்படுவதற்கும் அப்பாற்பட்ட பரம்பொருள் அல்லது இறைவன் பூரணமானவர் (நிறைவானவர்).

பூர்ணமிதம் (இது): கண்முன்னே தோன்றும் இந்த பிரபஞ்சமும் உலகமும் அந்த இறைவனால் பூரணமாகப் படைக்கப்பட்டதே.

பூர்ணாத் பூர்ணமுதச்யதே: அந்தப் பூரணமான பரம்பொருளிடம் இருந்துதான் இந்த பூரணமான பிரபஞ்சம் வெளிப்படுகிறது.

பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமேவாவசிஷ்யதே: அந்தப் பூரணத்திலிருந்து இந்தப் பூரணத்தை நீக்கினாலும் (பிரித்தாலும்), மீதியிருப்பதும் அந்தப் பூரணமே ஆகும். 

ஸ்ரீராமன் வாலியுடன் நேருக்கு நேர் நின்று போரிட்டிருந்தால் இந்த தத்வத்தின் அடிப்படையில் பரப்ரஹ்மமான ஸ்ரீராமரின் பாதி பலம் இல்லாது முழு பலமும் வாலிக்குப்போயிருக்கும். ஏனெனில்,பூரணமான பரம்பொருளிடமிருந்து பாதி வாலிக்கு செல்வது இல்லாமல் பூரணமாகவே அவர் பலம் வாலிக்குப்போயிருக்கும்.

அப்போது வாலியும் பரிபூரணமாக ஏன் பரம்பொருளாகவே மாறியிருப்பான். 

மேலும்,அந்தப் பூரணத்திலிருந்து இந்தப் பூரணத்தை நீக்கினாலும் (பிரித்தாலும்), மீதியிருப்பதும் அந்தப் பூரணமே ஆகும்.அதாவது

ஸ்ரீராமனாகிற பரம்பொருள் எவ்வித குறைபாடும், மாற்றமும் இன்றி பூரணமான பரம்பொருளாகவே இருக்கும்.

இந்த சந்தர்பத்தில், வாலியும் பரம்பொருள், ஸ்ரீராமனும் பரம் பொருள் என்கிற நிலையில், அவர்களுக்குள் சண்டையும், மற்ற வேறுபாடும் இருக்காது.அதனால் வாலி தானே, தன் தம்பி சுக்ரீவனுக்கு ராஜ்யத்தைக் கொடுத்திருப்பான்.

மேலும் ராவணனை கட்டி இழுத்துக் கொண்டு ராமரின் முன் நிறுத்தியிருப்பான். சண்டையில்லாமலே சீதாப்பிராட்டியை மீட்டுஇருக்கலாம்.

மேலும் ப்ரஹ்மா உள்ளிட்டு தன்னிடம் சரணாகதியடைந்த தேவர்களுக்கு தான் அளித்தவாக்கை நிறைவேற்றமுடியாமல் போயிருக்கும்.தன் அவதார கார்யமான இராவணன், மற்றும் இதர அஸூரர்களின் வதத்தை ஸ்ரீராமர் செய்திருக்கமுடியாது.

எனவே எதிரியுடன் நேருக்கு நேர் நின்று சண்டையிடுவதுதான் யுத்த தர்மம் என்ற நியதி இருப்பினும்,  ஸ்ரீராமர்  இக் காரணத்தைக் கருத்தில் கொண்டே, மறைந்திருந்து வாலியை வதம் செய்திருக்கலாம் என்று தோன்றுகிறது.எப்படியும் ஜீவாத்மாவான வாலியின் ஆத்மா பரமாத்மாவான ஸ்ரீராமரிடம்தான் லயம்ஆகியிருக்கும் என்பதில் என்ன சந்தேகம்?

வாலிவதத்தில், இராமன் நடந்து கொண்டது சரியா? அல்லது தவறா? இராமன் நடந்துகொண்டது தவறுதான் என்றும், சிலர்தவறில்லை என்றும் கூறுகிறார்கள்.நமக்கு மேலும் தெளிவு வேண்டின் ராமாயணத்தின் நூறுகோடி ஸ்லோகங்களும் ( சரிதம் ரகுநாதஸ்ய சத கோடி ப்ரவிஸ்த்தரம்)கிடைக்கப்பெற்றால் அதில் இக்கட்டத்திற்கான விளக்கங்கள் இருந்திருக்கலாம்.என்னசெய்வது? மூன்றில் ஒரு பாகமே  பூலோகவாசிகளுக்கு கிட்டியுள்ளது.மற்ற இரண்டு பாகமும் தேவர்களிடமும் நாகர்களிடம் உள்ளது.

எந்த ஒரு நிகழ்வுக்கும் ஒரு காரணம் உண்டு காரியமில்லாமல் காரணமில்லை, காரணமில்லாமல் காரியம் இல்லைஇப்படியெல்லாம் நியாயங்கள் இருந்தாலும் ராமவதாரத்தில் தொடங்கிய இந்த செயலின் பலன்க்ருஷ்ணாவதாரத்திலும் தொடர்கிறது என்று அறியும்போது கர்மாவின் பாதிப்பு எவ்வளவு தூரத்திற்குப் போகும் என்று உணரும்போது விந்தையாக இருக்கிறது.

தர்மம்,கர்மம் ஆகியவற்றின் பலன்களை ஆராயும்போது கீழ்க்கண்ட ஸ்லோகம் நினைவிற்கு வருகிறது.

धर्मकारी धर्ममश्नुते पापकारी च पापमश्नुते

தர்மகாரி-தர்மத்தை கடைப்பிடிப்பவன் தர்மம்அஷ்னுதே-தர்மத்தின்பலன்களையே அடைந்து இஹலோக பரலோக சுகங்களை அனுபவிக்கிறான்.

பாபகாரி -அதர்மத்தைக் கடைப்பிடித்து பாபங்களைச் செய்பவன்.

பாபம் அஷ்னுதே – பாவத்தின் பலனை( துக்கங்களையும்,நரகத்தையும்) அனுபவிக்கிறான்.

கர்மத்தின் ஸித்தாந்தமாக (Law of Karma) இதுகருதப்படுகிறது

மேலும்,

 नाभुक्तं क्षीयते कर्म, कल्पकोटिशतैरपि।

अवश्यमेव भोक्तव्यं, कृतं कर्म शुभाशुभम् ।।

நூறுகோடி வருஷங்கள்கடந்தாலும்,கர்மவினை, அனுபவிக்காமல் அழியாது, குறையாது. சுபம், அசுபமான, கர்மவினைகளை, நாம் அவஸ்யம் அனுபவித்தே தீரவேண்டும். கர்மபலன்களை நாம் அனுபவித்தே தீரவேண்டும். 

இவை மனிதனுக்கு மட்டுமல்லாமல் தெய்வங்களுக்கும் பொருந்துமோ!

கிருஷ்ணாவதாரத்தின் முடிவிலே   குறைக் கொள்ளியாய் போகக் கடவது என்று காந்தாரி அளித்த சாபத்தின் பலனை  கிருஷ்ணனும் அனுபவித்தான். யமுனா நதிக்கரையிலே, ஸ்ரீகிருஷ்ணனின் மகன் சாம்பன் பெண் வேடமிட்டு கர்பஸ்த்ரீயாய் நடித்து ஒரு முனிவரை அவமதித்ததால் அவர் இட்ட சாபப்படி அந்த ஆணுக்கு உலக்கை பிறந்தது. அந்த உலக்கையால் யது குலமே அழியும் என்று சாபமிட்டார் அந்த முனிவர்.அந்த உலக்கையை அழிக்க யதுகுலத்தினர்  அதை சிறு சிறு துகள்களாகச் சிதைத்து, அதனை எரித்து, சாம்பலை யமுனை நதிக்கரையில் தூவினார்கள், அந்த தூவல் அனைத்தும் கோரைப் புற்களாக வளர்ந்து, யது குலத்தவர் அனைவரும்  அதனாலேயே அடித்துக்கொண்டு அனைவரும் மடிந்தனர்.ப்ராஹ்மண சாபம் எவ்வளவு கொடியது என்பதை உணரமுடிகிறது.

இது இப்படியே இருக்கட்டும்.

மஹாபாரத யுத்தமெலாம் முடிந்து கிருஷ்ணாவதாரமும் முடியும் வேளை நெருங்கியது.கிருஷ்ணன் காட்டிலே வந்து கொண்டிருக்கின்றான் கிருஷ்ணன் களைத்தான்.

கிருஷ்ணனுக்கும் களைப்பு உண்டோ!ஆமாம் களைத்துப் போன கிருஷ்ணன் ஒரு மரத்தின் மேலே ஓய்வாக அமர்ந்தான்

கிருஷ்ணனின் பாதம் மட்டும் இலைகளினூடே தெரிய, அதை ஒரு பறவை என்று எண்ணி, தூரத்தில் இருந்து ஒரு வேடன்  அம்பால் அடித்தான் அந்த அம்பு கிருஷ்ணனின் கால் மேல் பட்டுகிருஷ்ணனின் முடிவுக்கு காரணமானது.அருகே வந்த வேடன்  கிருஷ்ணன் அடிபட்டதைப் பார்த்து மனம் பதறி அவன் ஸ்ரீகிருஷ்ணனிடம் மன்னிப்பு கேட்டான்.

அதற்கு கிருஷ்ணன் “உன் மேல் தவறில்லை ,ராமாவதாரத்தில் நீ வாலி , உன்னை நான் மறைந்திருந்து அடித்தேன்.  அதைத்தானே இப்போது  நீ செய்திருக்கிறாய்”என்று சமாதானப் படுத்தி அனுப்பினான் கிருஷ்ணன் என்று கூறுவர்.

அது மட்டுமல்ல அந்த வேடன் அடித்த அம்பின் கூர் முனை யதுகுலத்தவன் ஒருவனுக்கு பிறந்த உலக்கையை எரித்தது எஞ்சியிருந்த பாகமே.

ஆக காரணமில்லாமல் காரியம் இல்லை காரியம் இல்லாமல் காரணம் இல்லை.

மஹரிஷி வால்மீகி,கம்பநாட்டாழ்வார் இருவரும் மஹாஞானிகள்.பரப்ப்ரஹ்ம அனுபவமுள்ளவர்கள். அவர்கள் வாக்கு பொய்யாகாது. மேலும் ராமாயணத்தை ஸ்ரீவால்மீகி எழுத ஆரம்பிக்கும் முன் ப்ரஹ்மாவினுடைய தூண்டுதலின் பேரில் சரஸ்வதி தேவி அவர்  நாவில் அமர்ந்து ஸ்ரீவால்மீகி எழுதிய இதிஹாஸம். (பாலகாண்டம் அத்.2)

ஸ்ரீசீதா,லக்ஷ்மண,பரத சத்ருக்ன,ஹனூமத் ஸமேத ஸ்ரீராமசந்திர ஸ்வாமியை நேரில்சந்தித்தவர்.அவர் வாக்குபொய்யாகாது.ஸ்ரீராமர் வாலியை மறைந்திருந்து தாக்கியது சரியே என்பது என் சிற்றறிவிற்கு தோன்றுகிறது.

ராமாயணத்திலோ, மஹாபாரதத்திலோ ஒரு பாத்திரப் படைப்பு கூட வீணாகப் படைக்கப் படவில்லை.

புலன்களையும் மனத்தையும் பொறுத்தவரையில் உயிருணர்வு மறைந்திருக்கும் மறைபொருள். பார்வைக்குப் புலப்படாதது; மனத்தால் கிரகிக்க முடியாதது. மனமும் புலன்களும் இணைந்து உருவாக்கும் ‘உலகம்’ என்னும் அனுபவத்தைத்தான் ‘மாயை’ என்று சொல்கிறார்கள். மாயை உயிருணர்வை, சுத்தப்பிரக்ஞையை (Pure Consciousness) மறைக்கிறது; இந்த மறைபொருள் புரியும்போது மாயை மறைந்துபோகிறது.

மாயை மறைக்க மறையும் மறைபொருள்
மாயை மறைய வெளிப்படும் அப்பொருள்
மாயை மறைய மறைய வல்லார்க்குக்
காயமும் இல்லை கருத்தில்லைதானே

– என்கிறார் திருமூலர்.

சுத்தப்பிரக்ஞை வெளிப் படும்போது, உடலும் உடல் சார்ந்த புலன்களும், மனமும் மனம் சார்ந்த கருத்துகளும் அனுபவத்தின் பின்னணிக்குப் போய்விடுகின்றன, அறிவுணர்வின் கவனம்கொண்டு, அந்த வெளிச்சத்தில் படிவங்களைப் பார்க்கும்போது, படிவங்களில் பொதிந்திருக்கும் சக்தியை அறிவுணர்வு கிரகித்துகொண்டு விடுகிறது. மறைந்திருக்கும் அந்தத் தத்துவத்தின் துணைகொண்டுதான், நம் முயற்சியின் வலிமையைத் தான் கிரகித்துக்கொண்டுவிடும் ஆழ்மனப் படிவங்களின் பிடியிலிருந்து நம்மை நாம் விடுவித்துக்கொள்ள முடியும். இந்த உண்மையைத்தான் வாலியின் வதம் குறிக்கிறது.

வாலி ஆழ்மனப்படிவங்களின் அடையாளம். புலப்படாமல் மறைந்திருக்கும் ‘நான்’ என்னும் ஆன்ம சக்தியைத்தான் ராமன் என்னும் தத்துவம் பிரதிநிதித்துவப்படுத்துகிறது.

ஸ்ரீசீதா,லக்ஷ்மண,பரத சத்ருக்ன,ஹனூமத் ஸமேத ஸ்ரீராமசந்திர ஸ்வாமி பாதாரவிந்தங்களை வணங்கி சரணம் அடைகிறேன்.

ஸ்ரீராம ஜயராம ஜய ஜய ராம்

எழுதியவர் – பாகவத சிரோன்மணி திருவையாறு ப்ரம்மஸ்ரீ பிரேம்நாத் பாகவதர்

இதைப் பதிவேற்றியவர்..

Dineshgandhi

I'm Dinesh, founder of Aanmeegam.org...


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

Valmiki Kannadasan
  • ஆகஸ்ட் 6, 2026
ஸ்ரீமத் வால்மீகி ராமாயணமும், கவிப்பேரரசு கண்ணதாஸனும்
narayana-teertha-krishna-leela-tarangini
  • ஜூலை 27, 2026
ஸ்ரீ நாராயணதீர்த்தரும் பக்தி மார்க்கமும்
paal-abhishekam
  • நவம்பர் 26, 2025
பால் அபிஷேகம்: புனிதமான பாரம்பரியத்தின் அரிய அனுபவம்