- நவம்பர் 26, 2025

உ
ஸ்ரீ குருப்யோ நம: ஹரி: ஓம்
எழுதியவர்: பாகவத ஸிரோன்மணி திருவையாறு ப்ரஹ்மஶ்ரீ ப்ரேம் நாத் பாகவதர்.
ஸத்வ குணம் எனப்படுவது மற்ற குணங்களாகிற – ரஜோ,தமோ குணங்களிலிருந்து- முற்றிலும் விடுபட்டு ஶுத்தமானதாக இருக்கிறது.
வேதவ்யாஸர் தன்னுடைய பல புராணங்களின் வாயிலாக, பரப்ரஹ்மமும், மாயையும் சேர்ந்து ஶ்ருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம் என்ற முத்தொழிலைச் செய்ய, பலரூபங்களை ஏற்றுக்கொண்டு, பல நாமங்களால் அழைக்கப்பட்டு, குணங்களிலிருந்து வேறுபட்டு, ஶுத்த ஸத்வ ஸ்வரூபத்துடன்,அவதாரம் என்ற தொழிலை ஏற்றுக்கொள்கிறது என்று தெரியப்படுத்தி உள்ளார்.
மேலும், ப்ரஹ்ம ஸ்துதியில் (ஸ்ரீமத் பாகவதம் ஸ்க,10 அத்யா,2 ஶ்லோ,35-37)
பகவானுடைய அவதார தத்வத்தை விளக்குங்கால், ஸ்ரீ வ்யாஸ பகவான் கீழ்க்கண்டவாறு விளக்குகிறார்.
”அனைத்து ஜீவராசிகளிலும் அந்தர்யாமியாக, ஒளியாகப் ப்ரகாசிப்பவனே ப்ரகிருதிவசத்தால் மறைக்கப்பட்ட ஜீவாத்மாக்கள் அந்த ஒளியான ப்ரகாசத்தினாலேயே, தங்களுடைய மனோ, வாக், காயங்களால், உலக அனுபவத்தை அடைகின்றன என்று அறிவதில்லை. அந்த மாயையை உன் வசத்தில் வைத்துக்கொண்டு, மேலும் “ஸத்வம் விஶுத்தம்” (ரஜோ, தமோ குணங்கள் கலக்காத) உன் ஶுத்த ஸத்வரூபத்தோடு, அதர்மத்தை அழிக்க அவ்வப்போது தோற்றம் அடைகிறீர். அந்த அவதார தத்துவத்தையும் நாம, ரூப, குணங்களையும் விவரிக்க இயலாது. அவை, ப்ரத்யக்ஷம், அனுமானம் முதலிய ப்ரமாணங்களால் அறியக்கூடியவை அல்ல. ஆயினும் அனன்ய பக்தியாலும், இடைவிடா முயற்சியால் அடையப் பெற்ற ஶுத்த மனத்தில் நின் அருளால்,அந்த நாமரூப குணங்களை ஜீவர்களுக்கு அனுபவபூர்வமாய் உணர்த்துகிறீர்கள்.”
இந்த ஸ்துதியினால் வ்யாஸ பகவான், நமக்கு பக்திமார்கமே ஞானத்தை அளித்து மோக்ஷத்தை அளிக்க வல்லது என்று விளக்குகிறார். பக்தியற்ற ஞானம், மேல் உலகங்களில் தாற்காலிகமாக, ஶுகத்தையளித்து திரும்பவும் மறுபிறப்பையும் அளிக்குமே தவிர ஸம்ஸார ஸாகர சுழலிலிருந்து விடுவிக்காது என்று அறுதியிட்டு கூறுகிறார்.
ப்ரஹ்ம ஸ்வரூபம்
ஸ்ரீமத் பாகவதத்தில் கூறிய ப்ரஹ்ம விவரணையைக் காண்போம் ஸ்கந்தம் 1 அத் 1 ஸ்லோ.1
जन्माद्यस्य यतोऽन्वयादितरतश्चार्थेष्वभिज्ञ: स्वराट्
तेने ब्रह्म हृदा य आदिकवये मुह्यन्ति यत्सूरय: ।
तेजोवारिमृदां यथा विनिमयो यत्र त्रिसर्गोऽमृषा
धाम्ना स्वेन सदा निरस्तकुहकं सत्यं परं धीमहि ॥ १ ॥
“ஜன்மாத்யஸ்ய யத:” என்பது ப்ரஹ்ம ஸூத்ரத்தில் இரண்டாவது ஸூத்ரம் ஆகும் .முதல் சூத்திரத்தில் “அதா தோ ப்ரஹ்ம ஜிக்ஞாஸா” என்று ப்ரம்மத்தை பற்றி அறிய முற்படுகையில் இந்த சூத்திரம் அதைப்பற்றி தெரிவிக்கிறது இதன் பொருள் என்னவென்றால் எதனிடமிருந்து ஜன்மாதி அதாவது இந்த பிரபஞ்சத்தின் பிறப்பு முதலியவை- (பிறப்பு இறப்பு அழிவு ஏற்படுகிறது) அதுதான் ப்ரஹ்மம் என்று பொருள். இதற்கு மூலம் தைத்திரீய உபநிஷத் ப்ருகுவல்லி.
यतो वा इमानि भूतानि जायन्ते, येन जातानि जीवन्ति, यत् प्रयान्ति अभिसंविशन्ति, तद् विजिज्ञासास्व तद् ब्रह्म।
எதிலிருந்து இந்த உயிர்கள் எல்லாம் தோன்றினவோ எதனால் இவை உயிர் வாழ்கின்றனவோ, இதில் போய் முடிவில் ஐக்கியம் ஆகின்றதோ அதை தெரிந்து கொள்ள வேண்டும் அதுதான் ப்ரம்மம் என்று பொருள்படுகிறது இதைத்தான் பாகவதத்தின் ஆரம்ப ஶ்லோகம் சொல்கிறது.
ப்ரஹ்மமே பரம ஸத்யம் உண்மையான பரம்பொருள் அதை தீமஹி- தியானிப்போம் என்று கூறுகிறது.
இந்த ப்ரஹ்மத்தை, அன்வயம் மூலமும் , வ்யதிரேகம் மூலமும் தெரிந்து கொள்ளலாம் என்பது முதல் வரியின் அர்த்தம். அன்வயம் என்பது உடன்பாடு .ஜீவனும் ப்ரஹ்மமும் ஒன்று என்று கூறும் வேத வாக்கியங்கள் “ஸர்வம் கலு, இதம் ப்ரம்மா” இவை எல்லாம் ப்ரஹ்மம் என்று கூறுபவை.
வ்யதிரேகம் ,என்பது எதிர்மறை. ப்ரம்மம் இல்லாதது எதுவும் இல்லை என்பது ஸத்யம், தாம, பரம். இவை ஸத்யம் ஞானம், அனந்தம், ப்ரம்ம என்ற வேதவாக்கியத்தை குறிக்கின்றன. இந்த மங்கள ஶ்லோகம் ,இந்த பாகவதப் புராணத்தின் ஸாராம்சம். நாராயணன் பரப்பிரஹ்மமே என்பதே வலியுறுத்துகிறது.
பஞ்சபூதங்களில் பூமி, அப்பு (ஜலம்) தேஜஸ் (அக்னி) ஆகிய மூன்றும்” ஸத்” என்று வேதங்களில்,குறிப்பிட்டபடி, இந்த மூன்றிலும் உறைபவர் தாங்களே. “த்யத்” என்ற வேதங்களில் குறிப்பிட்ட, ஆகாஶம், வாயு என்ற பூதங்களில் வியாபித்து இருப்பதால் காரண ரூபியாகவும் இருப்பவர் ஆகிறீர். “ஸத்” “த்யத்” இரண்டும் சேர்த்து (வெளிப்படையாகக் கண்களுக்குத் தெரிகின்ற ப்ருத்வி, அப்பு, தேஜஸ் என்பதும் கண்களால் பார்க்க முடியாமல், மறைமுகமாக இருந்து ஸூக்ஷ்மமாக உணரப்படுவதுமான ஆகாசம், வாயு தத்துவங்கள் என்பதும்) “ஸத்யம் “என்று உருவெடுக்கிறது மேலும் பூதம், பவ்யம், பவிஷ்யம் என்ற கடந்த காலம், நிகழ் காலம், வரும் காலம் என்ற முக்காலச் ஸ்வருபியாகவும், அவற்றையும் கடந்த பரம் தத்துவமாகவும் இருக்கிறீர்.
இவற்றையே நமது அத்வைத சித்தாந்தம் வ்யாவஹாரிக ஸத்யம்,
பிரதிபாதிக ஸத்யம், பாரமார்த்திக ஸத்யம் என்று விவரிக்கிறது.
ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாமத்திலும் – “மூர்த்தா அமூர்த்தா அநித்ய திருப்தா” என்ற நாமாவில் இதுவே கூறப்பட்டுள்ளது.
இவ்விதம் ஜீவன்கள் ஆத்ம ஞானம் அடைந்து தனக்குள்ளேயே ப்ரஹ்மம் இருக்கிறது – அஹம் ப்ரஹ்மாஸ்மி – நானே ப்ரஹ்மமாக இருக்கின்றேன்
என்ற உணர்வு கிடைப்பது என்பது மிகவும் கடினமானது.
ஏனெனில் ப்ரஹ்மா ஜீவன்களைப் படைக்கும் போது ,தங்களின் உண்மையான ஆத்ம ஸ்வரூபத்தை அறிய முடியாதபடி, ஶ்ருஷ்டியிலேயே, தன் நிழலில் இருந்து ப்ரஹ்மாவானவர் ஐந்து விதமான அக்ஞானங்களைத் தோற்றுவித்தார் .(ஸ்ரீமத் பாகவதம் ஸகந்தம்3, அத்தியாயம் 20, ஶ்லோகம் 18) நிழல் வெளிச்சத்தை மறைப்பது போல அக்ஞானம் பூர்ணமான ,ஸத்தான, சித்தான, ஆனந்தமயமான ப்ரம்ஹத்தை மறைக்கிறது .
ससर्ज च्छाययाविद्यां पञ्चपर्वाणमग्रत: । तामिस्रमन्धतामिस्रं तमो मोहो महातम: ॥ १८ ŚB 3.20.18
அந்த ஐந்து வித அஜ்ஞானங்கள் தமஸ், மோஹம், மகாமோஹம், தாமிஸ்ரம், அந்த தாமிஸ்ரம் என்று ஐந்து வகைப்படும் (3.12.2)
ससर्जाग्रेऽन्धतामिस्रमथ तामिस्रमादिकृत् । महामोहं च मोहं च तमश्चाज्ञानवृत्तय: ॥ २ ŚB 3.12.2
தமஸ் என்பது ஜீவன் தான் என்ற நினைவுடன் ஸம்ஸாரத்தில் கட்டுண்டவன் என்று பாவனையை செய்வது . இது முதல் அக்ஞானம்.
மோஹம் என்பது ஜீவன் தன்னை பஞ்ச பூதாத்மக ஸ்தூல ஶரீரத்தில் அடைப்பட்டு இருக்கிறவனாக அபிமானிப்பது. இது இரண்டாவது அக்ஞானம்.
மகாமோஹம் என்பது இந்த தவறான அக்ஞானத்தின் (ஆசையின்) விளைவாக இந்திரிய சுகங்களை தேடி அடைவது தான். இது மூன்றாவது அக்ஞானம்.
தாமிஸ்ரம் என்பது ஜீவன் தன் ஆசைகள் பூர்த்தியாகாமல் மனம் கொந்தளித்துக் கோபம் கொள்வது. இது நாலாவது அக்ஞானம்.
அந்ததாமிஸ்ரம் என்பது ஜீவனானது தன் தேகத்தின் வியோகமே (இந்த ஸ்தூல சரீரத்தைத் துறப்பது) தன்னுடைய முடிவு என்ற பயபீதிக்கு உள்ளாவது. இது ஐந்தாவது அக்ஞானம்.
இந்த அக்ஞானங்களைக் களைவது அவ்வளவு ஸுலபம் அல்ல.
ஸ்ரீபகவத்கீதையில் 6 வது அத்யாயத்தில் ஶ்லோ 34 ல் வருகிறது
चञ्चलं हि मन: कृष्ण प्रमाथि बलवद्दृढम् । तस्याहं निग्रहं मन्ये वायोरिव सुदुष्करम् ॥ ३४ ॥
“ஓ க்ருஷ்ணா, இந்த மனம் மிகவும் சஞ்சலமானது, அமைதியற்றது, கொந்தளிப்பானது, மிகவும் வலிமையானது மற்றும் பிடிவாதமானது. இந்தக் காற்றை அடக்குவது எவ்வளவு கடினமோ, அதைவிடக் கடினமாக மனதைக் கட்டுப்படுத்துவது எனக்குத் தோன்றுகிறது”.
ஆச்சார்யாளும் தன் ஶிவானந்தலஹரி ஶ்லோகம் 20ல்
सदा मोहाटव्यां चरति युवतीनां कुचगिरौनटत्याशाशाखास्वटति झटिति स्वैरमभितः |
कपालिन् भिक्षो मे हृदयकपिमत्यन्तचपलंदृढं भक्त्या बद्ध्वा शिव भवदधीनं कुरु विभो || २० ||
ஶிவனே! எங்கும் நிறைந்தவனே! எனது மனமெனும் குரங்கு மயக்கமெனும் பெருங்காட்டில் இடைவிடாது அலைகிறது. பருவ நங்கைகளது நகில்களாகிய மலையில் நடனமாடுகிறது. துராசைகளாகிய கிளைகளில் வேகமாக தாவித் திரிகிறது. நீர் கபாலத்தை கையிலேந்தி பிச்சை எடுப்பவர். ஆகவே அங்கு மிங்கும் ஓடும் எனது மனதாகிய குரங்கை, உன்னிடம் உள்ள பக்தி என்னும் கயிற்றைக் கொண்டு உறுதியாகக் கட்டி உனக்குட்பட்டதாக செய்து கொள்வாயாக. (வெறுமே மண்டையோட்டை நீட்டி பிச்சைக் கேளாமல் என் மனக் குரங்கை ஆட்டும் குரங்காட்டியாக இருப்பாயாக!)
[இவ்வாறு ஸ்ரீ ஸ்ரீ ஆதி ஶங்கரர் பகவானை வேண்டும் போது, நாமெல்லாம் எம்மாத்திரம்?]
ஆதி சங்கரரின் விவேக சூடாமணி 76-வது ஶ்லோகம் புலன்களின் ஆபத்தை ஐந்து விலங்குகளின் உதாரணத்துடன் விளக்குகிறது .
शब्दादिभिः पञ्चभिरेव पञ्च पञ्चत्वमापुः स्वगुणेन बद्धाः ।
कुरङ्गमातङ्गपतङ्गमीन भृङ्गा नरः पञ्चभिरञ्चितः किम् ॥ ७६ ॥
மான், யானை, விட்டில் பூச்சி, மீன், வண்டு ஆகிய ஐந்து உயிரினங்களும், தங்கள் ஐம்புலன்களில் ஒவ்வொன்றின் கவர்ச்சியால் (ஒலி, ஊறு, ரூபம், ரசம், கந்தம்) கட்டுப்பட்டு தங்கள் இன்னுயிரை இழக்கின்றன. அப்படியிருக்க, அந்த ஐம்புலன்களின் பிடியிலும் சிக்கித் தவிக்கும் மனிதனின் நிலைமை எப்படி இருக்கும்? விளக்கம்:
மான் : ஓசையினால் (இசை) ஈர்க்கப்பட்டு வேடனின் வலையில் வீழ்கிறது.
யானை : ஸ்பரிச சுகத்தால் (பெண் யானையின் மீதுள்ள ஆசை) மயங்கி குழியில் விழுகிறது.
விட்டில்பூச்சி: ரூபத்தால் (ஒளியின் அழகு) ஈர்க்கப்பட்டு நெருப்பில் கருகி மடிகிறது.
மீன் : சுவைக்காக (தூண்டில் முள்ளில் உள்ள இரையை) நம்பி தன் உயிரை இழக்கிறது.
வண்டு : வாசனையில் (மலர் மீதுள்ள பற்று) மயங்கி, சூரியன் மறைந்ததும் தாமரை மலருக்குள் சிக்கி இறக்கிறது. ஒவ்வொரு விலங்கும் ஒரே ஒரு புலனின் இன்பத்திற்கு அடிமையாகி அழிகிறது.
இப்படி இருக்கையில் இந்த ஐந்து புலன்களின் இன்பங்களிலும் ஆசை கொண்டு உழலும் மனிதன், புலன்களின் நஞ்சால் எவ்வளவு பெரிய அழிவைச் சந்திக்க நேரிடும் என்பதை இப்பாடல் எச்சரிக்கிறது.
ஆதி ஶங்கர ஆச்சார்யாளே, இவ்வாறு கூறும்போது நம்மைப் போன்ற பரம அக்ஞானிகளுக்கு புலன்களைக் கட்டுப்படுத்தி, மனதைக் அடக்கி, ப்ரஹ்ம ஞானம் கிட்ட பக்தி மார்க்கமே சிறந்த எளிதான மார்க்கம்.
ஸ்ரீநாராயண பட்டத்திரி அருளிச் செய்த ஸ்ரீமன் நாராயணீயத்தில் இரண்டாவது தஶகத்தில் பக்தி மாரக்கமே மிகச் சிறந்தது என்று கூறுகிறார்.
एवंभूततया हि भक्त्यभिहितो योगस्स योगद्वयात्
कर्मज्ञानमयात् भृशोत्तमतरो योगीश्वरैर्गीयते ।
सौन्दर्यैकरसात्मके त्वयि खलु प्रेमप्रकर्षात्मिका
भक्तिर्निश्रममेव विश्वपुरुषैर्लभ्या रमावल्लभ ॥७॥
யோகங்களில் சிறந்தது பக்தி யோகம். கர்ம-ஞான யோகங்களை விட பக்தி யோகமே சிறந்தது என யோகிகள் கூறுகின்றனர். அத்தகைய பக்தி யோகம், அழகுருவான உம்மிடத்தில் எளிதாக அடையக்கூடியதாய் இருக்கின்றது.
निष्कामं नियतस्वधर्मचरणं यत् कर्मयोगाभिधं
तद्दूरेत्यफलं यदौपनिषदज्ञानोपलभ्यं पुन: ।
तत्त्वव्यक्ततया सुदुर्गमतरं चित्तस्य तस्माद्विभो
त्वत्प्रेमात्मकभक्तिरेव सततं स्वादीयसी श्रेयसी ॥८॥
செய்யவேண்டிய கர்மாக்களை பற்றற்று செய்வதும், அதனால் உண்டாகும் ஞானமும், கர்ம-ஞான யோகமாகும். இது காலம் கடந்தே பலனளிக்கும். ஞானத்தால் உண்டாகும் அதன் பலனோவெனில் இந்திரியங்களுக்குப் புலப்படாதது. சுலபத்தில் மனதிற்கு எட்டாதது. உன்னிடத்தில் செலுத்தும் பக்தியே நிரந்தரமான இன்பத்தை அளிப்பதாக இருக்கிறது.
अत्यायासकराणि कर्मपटलान्याचर्य निर्यन्मला
बोधे भक्तिपथेऽथवाऽप्युचिततामायान्ति किं तावता ।
क्लिष्ट्वा तर्कपथे परं तव वपुर्ब्रह्माख्यमन्ये पुन-
श्चित्तार्द्रत्वमृते विचिन्त्य बहुभिस्सिद्ध्यन्ति जन्मान्तरै: ॥९॥
மிகவும் சிரமப்பட்டு கர்மாக்களைச் செய்து, அதனால் வைராக்கியம் பெற்றால் ,ஞானயோகத்திலும், இல்லையேல் பக்தி யோகத்திலும் மக்கள் செல்கிறார்கள். அதனால் என்ன பயன்? மற்ற சிலரோ வேதாந்தமார்க்கத்தில் மிகவும் சிரமப்பட்டு, “ப்ரஹ்மம்” என்ற உன்னைத் தியானித்து, பல ஜன்மங்களுக்குப்பின் முக்தி அடைகிறார்கள்.
त्वद्भक्तिस्तु कथारसामृतझरीनिर्मज्जनेन स्वयं
सिद्ध्यन्ती विमलप्रबोधपदवीमक्लेशतस्तन्वती ।
सद्यस्सिद्धिकरी जयत्ययि विभो सैवास्तु मे त्वत्पद-
प्रेमप्रौढिरसार्द्रता द्रुततरं वातालयाधीश्वर ॥१०॥
பிரபுவே! உன்னிடம் கொண்ட பக்தியோவேனில், உன் கதைகளில் பெருகும் அம்ருத வெள்ளத்தில் மூழ்குவதால் தானாகவே மோக்ஷத்தை அளிக்கவல்லது. உடனேயே பலனைத் தருகிறது. சிரமமின்றி ப்ரம்ம ஞானத்தை அளிக்கிறது. உன் திருப்பாதங்களில் ஏற்பட்ட அன்பினால், இடைவிடாமல் உன்னிடம் பக்தி செய்ய எனக்கு அருள வேண்டும்.
அப்படிப்பட்ட ஸச்சிதானந்தப் பரம்பொருளை விட்டகலாத க்ருஷ்ண பக்தியே ராஸலீலையில் கோபிகைகள் ஸ்ரீக்ருஷ்ணனோடு அனுபவித்த பரமானந்தம், அதுவே பக்தன் பகவானுடன் அனுபவிக்கும் பரமானந்தம். அதுவே முக்தனுடன் சேர்ந்து முமுஷுக்கள் அனுபவிக்கும் ப்ரஹ்மானந்தம்.
பக்தி முக்கியமான மார்க்கம் என்று ஏன் சொல்லப்படுகிறது? இது யாவராலும் பின்பற்றக்கூடியது. எளிமையானது. ஞான மார்கத்திற்கு தேவையான ஶாஸ்த்ர ஞானம் ,யோகாப்யாசம் இவை எல்லோராலும் அனுஷ்டிக்க முடியாதவை. பக்தி செய்ய எந்த தகுதியும் தேவை இல்லை. நம்பிக்கையின் விளைவாக ஏற்பட்ட அன்பு ஒன்றே போதுமானது. அதனால்தான் கீதையில் , என் பக்தர்கள் எவ்வர்ணத்தாராக இருந்தாலும், அவர்கள் என்னையே பற்றி மேலான கதியை அடைகிறார்கள். என்கிறார்.
(அத:) பக்தியைப் பற்றி விரிவாக சொல்கிறேன், ‘பக்திம் வ்யாக்யாஸ்யாமி என்கிறார் நாரதர்.
ஸூத்ரம் 2
२. सा त्वस्मिन् परप्रेमरूपा। २- १.०२ – ஸா து அஸ்மின் பரப்ரேம ரூபா
ஸா து- அந்த பக்தியோவேன்றால்
அஸ்மின்- இறைவனிடத்தில்
பரப்ரேமரூபா- எல்லை அற்ற அன்பு என்பது.
அப்படி என்றால் பராபக்தி என்பது என்ன? சாதாரணமாக ஒருவர் பக்திமான் என்று கருதப்படுவது இந்த வெளிப்படையான செயல்களால்தான். இதற்கு மேல் உள்ளது பராபக்தி. அதற்கு உதாரணம் வ்ரஜ கோபிகள், மீரா, ஆண்டாள், ஆழ்வார்கள் முதலானோர்
அதாவது தைல தாரையைப் போல் இடையறாத பகவத்யானம். கோபாலபூர்வதாபினி உபநிஷத்தில் அது பின்வருமாறு சொல்லப்படுகிறது. ‘
भक्तिरस्य भजनम् | तदिहामुत्रोपाधिनैरास्येनामुष्मिन्मनःकल्पनम् | एतदेव च नैष्कर्म्यम् ||
இம்மையிலோ மறுமையிலோ எந்த எதிர்பார்ப்பும் இன்றி அவன் மேல் ஈடுபாட்டுடன் பக்தி செய்வது.
இதைத்தான் தொண்டரடிப்பொடி ஆழ்வார் ‘இச்சுவை தவிர யான் போய் இந்திரலோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்க மாநகருளானே” என்று பாடினார்.
பாகவதத்தில் கிருஷ்ணர் கோபியரின் அன்பைப் பற்றி உத்தவரிடம் கூறுகிறார் (பாக.11.12.12)
ता नाविदन् मय्यनुषङ्गबद्धधिय: स्वमात्मानमदस्तथेदम् ।
यथा समाधौ मुनयोऽब्धितोये नद्य: प्रविष्टा इव नामरूपे ॥१२॥
“எண்ணங்கள் என்னிடம் லயிக்க அவர்கள் தங்கள் உடலையோ காலதேசத்தையோ உணர்ந்தாரில்லை. அவர் நிலை, யோகிகள் ஸமாதி நிலையை ஒத்தது. எவ்வாறு நதிகள் கடலை அடைந்த பின் தங்கள் நாமரூபத்தை இழக்கின்றனவோ அதுபோல.”
ஹனுமானிடம், ஸ்ரீராமர் தன்னைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்க, ஹனுமான் கூறுகிறார்,
देहबुद्ध्या त्वद्दासोऽहं जीवबुद्ध्या त्वदंशकः। आत्मबुद्ध्या त्वमेवाहम् इति मे निश्चिता मतिः॥
நான் தேஹம் என்ற பாவனையில் உன்னுடைய தாசன்., நான் ஜீவன் நீ என் அந்தராத்மா என்ற நிலையில் நான் உன் அம்சம். நான் தான் ஆத்மா என்ற பாவனையில் நீயே நான்.
இதுவே பராபக்தி.,
நாரத பக்தி சூத்ரம் 5 ல்
यत्प्राप्य न किञ्चिद् वाञ्छति न शोचति न द्वेष्टि न रमते नोत्साही भवति॥
இந்த பராபக்தியை அடைந்த ஒருவன் எதுவும் வேண்டுவதில்லை, துக்கப்படுவதில்லை , வெறுப்பை அடைவதில்லை , எதையும் அனுபவிக்க ஆசைப் படுவது இல்லை தன்னலமாக எதிலும் ஈடுபடுவதில்லை.
கீதையில் சொல்லப்பட்ட ஸ்திதபிரக்ஞனின் நிலை இது.
दुःखेष्वनुद्विग्नमनाः सुखेषु विगतस्पृहः। वीतरागभयक्रोधः स्थितधीर्मुनिरुच्यते।।
श्रीमद्भगवद्गीता – 2.56।।
அப்படிப்பட்ட ஒருவன் – துக்கேஷு அனுத்விக்ன மனா: – கஷ்டம் வந்தபோது அயர்வுறுவதில்லை.
ஸுகேஷு விகதஸ்ப்ருஹ: – சுகம் வந்தபோது அதில் பற்றுக் கொள்வதில்லை . ஏனென்றால் அவன்
வீதராகபயக்ரோத: – இச்சை த்வேஷம் பயம் இவையற்றவன். என்று கூறுகிறான் கண்ணன கீதையில்.
இந்த நிலை பராபக்தியின் மூலம் வருகிறது.
கீதையில் பன்னிரண்டாவது அத்தியாயத்தில் ஒரு பக்தன் எவ்வாறு உள்ளான் என்று கண்ணன் விவரிக்கிறான்.
यो न हृष्यति न द्वेष्टि न शोचति न काङ्क्षति । शुभाशुभपरित्यागी भक्तिमान्य: स मे प्रिय: ॥
श्रीमद्भगवद्गीता 12- 17 ॥
மய்யர்பித மனோபுத்தி:, – என்னிடத்தில் ஆழ்ந்த பக்தியை உடையவன் ,
ந ஹ்ருஷ்யதி ந த்வேஷ்டி, – வேறு எதிலும் விருப்பு வெறுப்பற்றவன் ஆகிறான் . அதனால்
ந சோசதி ந காங்க்க்ஷதி, – அவனுக்கு வருத்தமும் இல்லை ஆசையும் இல்லை.
ஸ்ரீமத் பாகவதத்தில் தன் பக்தனின் இந்த மனோ நிலை பற்றி ஸ்கந்தம் 11.அத்.14 ஸ்லோ.14 பகவான் சொல்கிறார்.
न पारमेष्ठ्यं न महेन्द्रधिष्ण्यं न सार्वभौमं न रसाधिपत्यम् ।
न योगसिद्धीरपुनर्भवं वा मय्यर्पितात्मेच्छति मद्विनान्यत् ॥ १४ ॥
என் மீது தனது மனதை முழுமையாகச் செலுத்திய ஒரு தூய பக்தன் (அகிஞ்சன பக்தன்) எதையும் எதிர்பார்ப்பதில்லை . அவன் பின்வரும் எவற்றையும் விரும்புவதில்லை.
ப்ரஹ்மதேவரின் பதவியையோ அல்லது அவரது லோகத்தையோ (ஸத்யலோகம்), இந்திரனின் பதவியையோ அல்லது சொர்க்க லோகத்தையோ, பூமண்டலம் முழுவதையும் ஆளும் பேரரசு பதவியையோ .
பாதாள லோகங்களின் மீதான அதிபதி உரிமையையோ . யோகத்தால் பெறப்படும் அஷ்டமா சித்திகளையோ (எட்டு வகையான யோக சக்திகள்) .
பிறப்பு-இறப்பு சுழற்சியில் இருந்து கிடைக்கும் முக்தியையோ (அபுனர்-பவம்) .
இவை எதையுமே அவன் நாடுவதில்லை. தன்னை முழுமையாக இறைவனிடம் ஒப்படைத்த பக்தன், இறைவனைத் (கிருஷ்ணனை) தவிர வேறு எதையுமே விரும்புவதில்லை .
இதைத்தான் சங்கரர் பஜகோவிந்தத்தில் ,
योगरतोवा भोगरतोवा सङ्गरतो वा सङ्गवीहिनः।
यस्य ब्रह्मणि रमते चित्तं नन्दति नन्दति नन्दत्येव॥
என்ன செய்தாலும் எங்கிருந்தாலும் தனியாகவோ மற்றவர்களுடனோ எவ்வாறிருப்பினும் இறைவனிடம் யாருடைய சித்தம் லயிக்கிறதோ அவன் எப்போதும் உடலாலும் உள்ளத்தாலும் புத்தி பூர்வமாகவும் ஆனந்தத்தில் திளைக்கிறான் என்றார்.
ஶங்கரர் இங்கு சொல்வது போல, அப்படிபட்டவன் “நந்ததி நந்ததி நந்ததி ஏவ” எப்போதும் உடல் ரீதியாகவும் மனோரீதியாகவும் புத்தி பூர்வமாகவும் எப்போதும் ஆனந்தத்தில் ஆழ்கிறான். இதைத்தான் இந்த சூத்ரம் ‘நகிஞ்சித் வாஞ்சதி ,’ அவனுக்கு வேண்டுவது ஒன்றும் இல்லை என்று குறிப்பிடுகிறது. ஆசை இல்லாமையால் துக்கம் இல்லை . இது தான் ந சோசதி என்பதன் பொருள்.
பக்தன் எங்கும் இறைவனையே காண்கிறான். ‘பருகும் நீர் உண்ணும் சோறு தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன்,; என்ற மனோபாவத்தில் இருப்பதால் எதனிடமும் எவரிடமும் வெறுப்பு ஏற்படுவதில்லை. அதுதான் ந த்வேஷ்டி என்பது உணர்த்துகிறது, பக்தனுக்கு உலகம் முழுவதும் உறவாகவே தெரிகிறது.
நான் எனது என்ற எண்ணம் இல்லாததால் எங்கும் ஸமத்ருஷ்டி ஏற்படுகிறது.
ந ரமதே என்ற சொல்லுக்கு அவனுக்கு ஒருவித இன்ப அனுபவமும் கிடையாது என்பதல்ல அர்த்தம். எப்போதும் அவன் மனம் ஆனந்தம் நிரம்பி இருப்பதால் எந்த சுகானுபவமும் தனியாக ஏற்படுவதில்லை.
ந உத்சாஹீ பவதி என்பதற்குப் பொருள் என்னவென்றால் சுயநலத்திற்காக அவன் எந்தச் செயலையும் மேற்கொள்வதில்லை. இதைத்தான் கீதையில் , பக்தி யோகத்தைப் பற்றி சொல்லும்போது ‘ஸர்வாரம்ப பரித்யாகீ ,; என்று கண்ணன் குறிப்பிடுகிறான். (BG 12 -16)
अनपेक्ष: शुचिर्दक्ष उदासीनो गतव्यथ: । सर्वारम्भपरित्यागी यो मद्भक्त: स मे प्रिय: ॥ 16॥
அதனால் ஒரு பக்தன் ஒன்றுமே செய்யாமல் வெட்டியாக காலத்தைக் கழிக்கிறான் என்பதல்ல பொருள்.
அவன் செய்ய வேண்டியதெல்லாம் செய்கிறான் ஆனால் இறைவனின் கருவியே தான் என்ற எண்ணத்துடன் செய்கிறான். அதனால் அவனுக்கு கர்மம் செய்தாலும் கர்மப் பயன் ஒட்டுவதில்லை அதன்மூலம் அந்த பலனை அனுபவிக்க மீண்டும் மீண்டும் பிறப்பெடுக்க வேண்டுவதில்லை. அவன் செய்யும் செயல் யாவும் பகவதாராதனையாக ஆகிறது.
ஸ்ரீஶுக மஹரிஷி கூறுகிறார் (ஸ்கந் 6 அத்.12. ஸ்லோ. 22)
यस्य भक्तिर्भगवति हरौ नि:श्रेयसेश्वरे । विक्रीडतोऽमृताम्भोधौ किं क्षुद्रै: खातकोदकै: ॥ 22
பகவான் ஸ்ரீஹரியின் (திருமாலின்) திருவடிகளில் உண்மையான பக்தி கொண்ட ஒரு பக்தன், பேரானந்தமான அமிர்த ஸமுத்திரத்தில் நீந்தி மகிழ்கிறான்.
அப்படிப்பட்ட அமிர்தக் கடலில் விளையாடுபவனுக்கு, கால்வாய்களிலும் சிறு பள்ளங்களிலும் இருக்கும் அற்பமான தண்ணீர் எதற்கு? (அதாவது, இறைவனின் பேரானந்தத்தை அனுபவிக்கும் பக்தனுக்கு, உலகியல் சிற்றின்பங்களும் பிற தேவர்களின் பதவிகளும் தேவையில்லை).
இப்படி பக்தியின் ஸூத்திரங்களை விவரித்த ஸ்ரீநாரதர் இப்போது வ்ரஜ கோபிகளின் பக்தியைப் பாராட்டி ஸூத்ரம் 21ல்
“யதா வ்ரஜகோபிகானாம்” – என்று சொல்கிறார்
பின்னர் கீதையில் கண்ணன் சொல்லபோகும் பக்தியோகத்திற்கு உதாரணமாகத் திகழ்ந்தவர்கள் கோபியர்.
முனிவர்களுக்கும் யோகிகளுக்கும் சிரமமாக இருந்த தன்னை மறந்து பகவானையே நினைத்தல் என்பது கோபியருக்கு சுலபமாக இருந்தது. முனிவர்களின் கடும் பயிற்சி ஒன்றும் இல்லாமலேயே தூய அன்பினால் மட்டுமே பகவானை அடையலாம் என்று கோபியரின் பக்தி காட்டுகிறது.
கிருஷ்ணனையே நினைந்த அவர்களுக்கு ராஸ லீலை என்கிற பெரும் அனுபவம் கிடைத்தது. அவர்கள் எல்லாவிதமான் ரஸங்களையும் கிருஷ்ணனிடமே அனுபவித்தனர். கோபிகைகள் என்ற ஜீவன்களுக்கு ஒரே புருஷன் பரமாத்மா கிருஷ்ணனே.
ஸ்ரீகிருஷ்ணர் மதுராவிற்குச் சென்ற பிறகு, அங்குள்ள பிரிவின் வேதனையால் வருந்தும் கோபிகைகளுக்கு ஆறுதல் கூற உத்தவரை பிருந்தாவனத்திற்கு அனுப்பினார்.
கோபிகைகளின் பக்தி எவ்வளவு உயர்ந்தது என்பதை நேரில் கண்ட உத்தவர், உயர்ந்த ஞானியரான முனிவர்கள் கூட அடைய முடியாத அந்த தூய அன்பை கோபிகைகளிடம் காண்கிறார் .
வேதங்கள், சாஸ்திரங்கள் தேடி அலையும் முகுந்தனின் (கிருஷ்ணனின்) திருவடித் தாமரைகளை, கோபிகைகள் எப்போதும் தங்கள் இதயத்தில் இருத்தி அனுபவிக்கின்றனர்.
எனவே, அந்த கோபிகைகளின் பாத தூசியைத் தன் தலையில் சூடிக்கொள்ள தான் தகுதியற்றவன் என்றாலும், அந்த கோபிகைகளின் தூய நாம சங்கீர்த்தனம் அகில உலகத்தையே தூய்மைப்படுத்துகிறது என உத்தவர் சரணடைந்து போற்றுகிறார் .
பாகவதம் ஸ்கந்த 10. அத் 47. ஶ்லோ 63
वन्दे नन्दव्रजस्त्रीणां पादरेणुमभीक्ष्णश: । यासां हरिकथोद्गीतं पुनाति भुवनत्रयम् ॥ ६३
நந்த கோபரின் பசு மந்தை வாழும் பிருந்தாவனத்து மங்கையரின் (கோபிகைகளின்) பாத தூசியை நான் எப்போதும் வணங்குகிறேன் . அவர்கள் பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் திருநாமங்களைப் பாடும்போது, அந்த சங்கீர்த்தனையானது மூன்று உலகங்களையும் (ஸ்வர்க்க, பூமி, பாதாள) தூய்மைப்படுத்துகிறது.
அதனால் தான் நாம ஸங்கீர்த்தனம் ஆரம்பம் செய்யும் போது, முதல் புண்டரீகமாக –
கோபிகா: ஜீவனஸ்மரணம் – கோவிந்த கோவிந்த – என்று சொல்ல வேண்டும் என்று பெரியவர்கள் சொல்வார்கள்.
விவேகானந்தர் ராஸலீலையை பக்தியின் உச்ச கட்டமாகச் சொல்கிறார். அதில் தனித்தன்மை போய் ஒன்றாகக் கலத்தல் நேர்கிறது. இதை விகல்பமாக பார்ப்பது அறியாமை. பரீக்ஷித் கூட இதை முதலில் அறியவில்லை.
அவனுடைய சந்தேகம் என்னவென்றால் கிருஷ்ணனை காதலனாகக் கருதியவர்கள் எப்படி பக்தியின் உன்னத நிலையை அடைந்தார்கள் என்பது. சுக ப்ரஹ்மம் பகவானை முழு மனதுடன் வேறு சிந்தனை இன்றி எப்படி நினைத்து அன்பு செலுத்தினாலும் அவனை அடையலாம் என்கிறார்.
கிருஷ்ணனே இதை பாகவதத்தில் உறுதி செய்கிறான்.(பாக10.22.26)
न मय्यावेशितधियां काम: कामाय कल्पते । भर्जिता क्वथिता धाना: प्रायो बीजाय नेशते ॥ २६
‘என்னிடத்தில் சித்தத்தை வைத்தவர்களுடைய காமமானது பிறவிப்பிணியை வளர்க்கும் காமமாக இருக்காது. வறுக்கப்பட்ட விதைகள் மீண்டும் முளைப்பதில்லை “
சுவாமி விவேகானந்தர் கோபியரின் பக்தியை அறிவதற்கு தூய உள்ளம் வேண்டும் என்கிறார்.
அப்படிபட்ட பக்தி ஸாகரத்தின் ப்ரஹ்மானந்தத்தில் மூழ்கி திளைத்த மஹான்கள் பலருண்டு.அவர்களில் பாகவதஸமுதாயம், என்றென்றும் மறக்காமல் ஆராதித்துவரும் பல மஹான்களில், வரஹூர் ஸ்ரீமன் நாராயண தீர்த்தரும் முக்கியமானவர் ஆவார்.
அவர்கள் அப்பரம்பொருளை அறிந்து, தான், தனது என்ற பாவம் ஒழிந்து, அதனுடன் இரண்டறக் கலந்து பரிபூரண ஆனந்தத்தை அனுபவித்தனர். “ஏகம் ஸ்வாது ந புஞ்ஜீத” என்ற கூற்றுப்படி, தான் அனுபவித்த அந்த பரமானந்தத்தை, மற்ற பாமரமக்களும் அனுபவித்து மோக்ஷ சாம்ராஜ்யத்தை அடையவேண்டும் என்ற பரமகருணையால் தங்களுடைய ஆனந்த அனுபவங்களை, தங்களின் தெய்வீகப் பாடல்கள் வாயிலாக வெளிப்படுத்தி நம்முடன் பகிர்ந்துகொண்டுள்ளனர்.
நாம் இப்பாடல்களைப் பாடும் போதும்,மற்றவர்கள் பாடி கேட்கும் போதும், நம்மை மறந்த நிலையில், பரவசமாகி, ஆனந்தக் கண்ணீர் வடிப்பதும்,இதற்கு தக்க ப்ரமாணமாகும் எனபதில் ஐயமே இல்லை,
ஏனெனில் அவர்கள் பக்திப் பரவசத்தில் தங்களை மறந்து “அஹம் ப்ரஹ்மாஸ்மி” என்று உணர்ந்து எழுதிய பாடல்கள் அவை.அவர்களின் பரவச உணர்வலைகளை (Frequency) நம் பக்தி உணர்வு அலைகள் சந்திக்கும் போது நாமும் பரவசமடைகிறோம். பக்தி மேலீட்டால் கண்ணீர் வடிக்கிறோம்.
சுற்றம் சூழலை மறந்து பரமானந்தத்தில் திளைக்கிறோம்.
பரமாத்மாவின் ஶக்தியாகிய மாயையிலிருந்து உலகம் தோன்றியது. ப்ரளயகாலத்தில் உலகம் மாயையிலேயே ஒடுங்குகிறது.
பரமாத்மா நித்யமானவர் (தோற்றமும் மறைவுமில்லாதவர்).
தோன்றி மறைகின்ற உலகம் அநித்யமானது. நித்யமானதின் மேல் அநித்யமானது தோன்றி மறைகிறது. அநித்யமான அனைத்துள்ளும் நித்யமானது இருக்கிறது.
ஞானத்தினால் கடவுள் காட்சி!
மெய்ப்பொருள் காண்பது அறிவு – அறிவு ஒன்றே மெய்ப்பொருளைக் காட்டக்கூடியது – திருக்குறள்.
கண்களாலும் வாக்கினாலும் மற்றவைகளாலும் அவன் அறியப்படுகிறானில்லை. நற்கருமங்களினாலும், தபஸினாலும், சுத்தமான ஸத்வ குணம் பொருந்திய மனதுடையவனும் இடையறாது தியானம் செய்கிறவனுமான மனிதன் ஞானத்தினால் அவனைப் பார்க்கிறான்- முண்டக உபநிஷத்.
ஞானம் கல்வி கேள்விகளால் வரும்.
கற்றனைத் தூறும் அறிவு – திருக்குறள்.
ஞான ப்ரமாணங்கள் (ஞான ஸாதனங்கள் – அறிவைத் தரும் கருவிகள்)
உள்ளதை உள்ளவாறு அறிந்து கொள்வதற்கு ஸாதனம் – கருவி – எதுவோ அது பிரமாணம் எனப்படும்.
பிரமா கரணம் பிரமாணம். பிரமா என்றால் அறிவு. கரணம் என்றால் கருவி. அறிவைத் தரும் கருவி பிரமாணம்.
அவை பிரத்யக்ஷம், அனுமானம், ஆப்தவாக்யம் என்ற ப்ரமாணங்கள்.
1. பிரத்யக்ஷப் பிரமாணம்
அக்ஷம் என்றால் புலன்கள். புலன்வழி உண்டாகும் ஞானம் பிரத்யக்ஷ ஞானம். அது ஏற்படுவதற்கு கருவியாக இருக்கக்கூடிய மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய புலன்கள் பிரத்யக்ஷ பிரமாணம் எனப்படும். இந்தக் காட்சி அளவை என்று தமிழில் சொல்வர். சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற ஐந்து அறிவுகளும் புலன்கள் வழி நமக்கு ஏற்படுகின்றன. ஆறாம் அறிவான சிந்திக்கும் அறிவிற்கு முந்திய ஐந்து அறிவுகள் இவையே.
சுவைஒளி ஊறுஓசை நாற்றமென் றைந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு – திருக்குறள்.
யோகிகள், பக்தர்களுக்கு நேரில் பிரத்யட்சமாகவே காட்சி கொடுத்திருக்கிறார் கடவுள்.
உதாரணம்: துருவன், ப்ரஹ்லாதன் போன்றவர்கள்.
(ஸகுண ப்ரஹ்மம் ப்ரத்யக்ஷ பிரமாணத்தினாலும் அறியத்தக்கது)
2. அனுமானப் பிரமாணம்
பிரத்யக்ஷ பிரமாணத்தை அடிப்படையாகக்கொண்டு யூகித்து (அநுமானித்து) அறியும் அறிவு அநுமான ஞானம் ஆகும். இந்த அறிவுக்கு ஸாதனமாக இருக்கக்கூடிய ஊகமே அநுமான ப்ரமாணமாகும்.
உதாரணம் – புகையை வைத்து நெருப்பு இருப்பதை அனுமானித்தல்-அறிதல்.
காரியமான உலகை வைத்து இதைச் செய்த காரணமாக கடவுள் இருக்கின்றார் என்பது அனுமான அறிவு.
3. ஶப்தப் பிரமாணம்
ஆப்த வாக்யம் – ஆன்றோர் வாக்கு – ஶப்த ப்ரமாணம்.
ஆப்தர் யார்?
உள்ளதை உள்ளவாறு அறிகின்ற ஶக்தி உடையவனும், தான் அறிந்ததை ஒளிக்காமல் உள்ளவாறு சொல்லுகின்ற நேர்மை உள்ளவனான மனிதன் ஆப்தன். அவனுடைய சொல் ஆப்த வாக்கியம் எனப்படும். ஆப்த வாக்கியமே ஶப்த பிரமாணம். ஏனெனில் அது உண்மையானதாக இருக்கும். அதுவும் நமக்கு அறிவைத் தருகின்ற ஸாதனமாக இருப்பதனால் ப்ரமாணமாகிறது. அறியாமை, ஐயம், திரிபு இல்லாத வாக்கியங்கள் பிரமாண வாக்கியங்கள்.
உதாரணம்: அம்மாவிடமிருந்து கற்பவை. நாம், நமது தந்தையை, அம்மாவின் வார்த்தைகளிலிருந்தே தெரிந்து கொள்கிறோம்
அடுத்ததாக, நமது குருவின் மூலமாக ஞானத்தைப் பெறுகிறோம். அந்த குருவே நமக்கு ஞானஒளிகாட்டி ப்ரஹ்மஞானத்தை அருளுகிறார் .
குரு உபதேசம்.
எல்லா குருமார்களுக்கும் பரமகுருவாக இருக்கக் கூடியவர் இறைவன். कृष्णं वन्दे जगद्गुरुम् – இறைவனுடைய வாக்கு வேதங்கள், ஆகமங்கள்.
அறிவிக்கிறது வேதம். வேதப்பொருளை வருவித்துக் கொடுப்பது ஆகமம்.
பிரத்யக்ஷ, அநுமானங்களால் அறியமுடியாததை அறிவிப்பது வேதங்கள். அதாவது நம் கண்ணுக்கும் கருத்துக்கும் எட்டாத விஷயங்களை பற்றிய அறிவைத் தருபவை வேதங்கள். அத்தகைய (பல பிறவிகள், பல உலகங்கள், புண்ணிய பாபம், சொர்க்க நரகம் போன்ற) விஷயங்களுக்கு வேதங்களே பிரமாணம்.
ஆகவே, வேதங்கள் ஶப்த பிரமாணம் எனப்படுகின்றன.
ராமாயணத்தில் ஒரு அருமையான ஸன்நிவேஶம் வருகிறது. குழந்தை இராமன் பற்றியது.
ஸ்ரீராமன் குழந்தையாக இருக்கும் பொழுது தாயார் கௌசலை ஒரு தங்க கிண்ணத்தில் உணவை எடுத்து ராமனுக்கு நிலாச்சோறு ஊட்டுகிறார். அப்பொழுது கோசலை ராமனிடம் நிலா நிலா வா வா என்று நிலாவை பார்த்து அழைத்து ராமனையும் அவ்வாறே நிலாவை அழைக்கும் படி சொல்கிறாள் குழந்தை ராமனும் அந்த நிலாவை தன் அருகில் வருமாறு அழைக்கிறான். அவன் அழைக்கும் பொழுது நிலா அவனிடம் வரவில்லை.
அப்பொழுது ராமன் கெஞ்சுகிறார் நிலாவே நீ வா அருகில் வா என்கிறான். அப்படியும் அந்த நிலா வரவில்லை. ராமன் சிறிது கோபம் கொண்டு ஹூம் என்ற சப்தத்துடன் அந்த நிலாவை மிரட்டி தன்னிடம் வருமாறு சொல்கிறார் சந்திரனும் ராமருடைய கோபத்தை பார்த்து பயந்து ,அவர் அருகே சென்று விடுவோமா, ஒரு பரப்பிரஹ்மம் நம்மை அழைக்கிறதே என்று ராமன் அருகில் செல்ல முயல்கிறான்.
ஏனெனில் भीषाऽस्माद्वातः पवते। भीषोदेति सूर्यः। भीषाऽस्मादग्निश्चेन्द्रश्च। मृत्युर्धावति पञ्चम इति॥ என்பது வேத வாக்யம்.
அப்பொழுது, அவன் மனைவி ரோகிணி சந்திரனின் கையைப் பிடித்து – நீங்கள் அங்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இராமன் தன் அவதார காரியத்திற்காக அந்த மாதிரி நடிக்கிறார் என்று சொல்ல, சந்திரனும் தான் இருக்கும் இடத்தில் இருந்து இந்த ராமன் நடத்தும் நாடகத்தை ரசித்து கொண்டு இருக்கிறார்.
எவ்வளவு சொல்லியும் ,நிலா அருகில் வராத காரணத்தால் குழந்தை ராமன் அழத் தொடங்குகிறான். அந்த நிலாவை சுட்டிக்காட்டி காட்டி அழுகிறான் .இவன் அழுதவுடன் கோசலையும் அவனை சமாதானப்படுத்த எவ்வளவோ முயற்சி செய்கிறாள், முடியவில்லை. மேலும் ராமன் அழுதவுடன் ,அவன் தம்பிகள் பரதன் லக்ஷ்மணன் ஶத்ருக்னன் -அந்தக் குழந்தைகளும் அழத் தொடங்குகிறார்கள்
இந்த சமயத்தில் அந்த தசரத மாளிகையே கூச்சலும் அழுகையுமாக இருக்கிறது இந்த சமயம் அங்கு வந்த தசரதன் கோசலையை பார்த்து “என்ன ஆச்சு ஏன் குழந்தைகள் எல்லாம் அழறா” அப்படின்னு அவர் கேட்க , கோசலை,அந்த சமயம் தான் நிலாச்சோறு ஊட்டியதும், அந்த நிலாவை கூப்பிட்டு அவன் அருகில் வராத காரணத்தினால், ராமன் அழுகிறான். ராமன் அழுதவுடன் மற்ற தம்பிகளும் அழுகிறார்கள். இதுதான் நடந்தது என்று சொல்லுகிறாள் பலவிதமான உபாயங்களைக் கையாண்டு குழந்தையின் அழுகையை நிறுத்த முயல்கிறார்கள். அப்படியும் அழுகை நிற்கவில்லை. இதனால் தசரதன் அங்குள்ள சேடிப் பெண்களிடம் யாராவது ஒருவராவது இந்து அழுகையை நிறுத்துவதற்கு ஒரு உபாயம் கண்டுபிடிங்கள் என்று சொல்லுகிறார். ஒரு புத்திசாலியான சேடி ,ஒரு தங்கத் தாம்பாளத்தில் தண்ணீர் நிறைய விட்டுக் கொண்டு வந்து ராமன் பக்கத்தில் வந்து, அந்த நிலாவின் பிரதி பிம்பம் அந்த தாம்பாளத்தில் உள்ள தண்ணீரில் விழுமாறு செய்கிறாள். அந்த நிலாவின் பிரதி பிம்பம் அந்தத் தங்கத் தாம்பாளத்தில் உள்ள தண்ணீரில் பிரதிபலிக்கும் போது ராமனிடம் அந்த சேடி கூறுகிறாள் “இதோ அந்த நிலாவை நான் உன் அருகில் கொண்டு வந்து விட்டேன்” என்று. இதைப் பார்த்த ராமன் தன் அழுகையை நிறுத்தி ,சிரிக்கிறான். இதுதான் உபன்யாஸகர்கள் சொல்லும் ஒரு ருசிகரமான ஸன்நிவேஶம்.
இந்த சமயத்தில் நாம் ஒன்று கவனிக்க வேண்டும் எங்கேயோ இருக்கும் சந்திரனை அருகில் வரவழைக்க அந்த தாம்பாளத்தில் உள்ள தண்ணி எப்படி உபயோகப்படுகிறது. அது போல யார் கண்ணுக்கும் புலப்படாத அந்தப் பரமாத்மாவை, பரப்ரஹ்மத்தை நம் குரு தான் நமக்கு காண்பித்துக் கொடுக்கிறார் அந்த தாம்பாளத் தண்ணீரில் உள்ள பிரதிபிம்பம் தான் நம் குரு. அவரின் உபதேஶமே ஆப்த வாச்யம். அந்த குருவே தான் ஸ்ரீநாராயண தீர்த்தர் போன்ற மகான்கள்.
ஸ்ரீநாராயண தீர்த்தர், தன்னுடைய கிருஷ்ண லீலா தரங்கிணி மற்றும் தான் எழுதிய மற்ற நூல்களிலும் இந்த பரப்ப்ரஹ்ம தத்துவத்தை மிகவும் அழகாக வர்ணித்து உள்ளார். அந்த வரிகளைப் படிக்கும் பொழுது நமக்குள்ளே அந்த ப்ரஹ்ம உணர்வு ஏற்பட்டு அந்த ப்ரஹ்மத்தைத் தொடுவது போல உணர்கிறோம் அந்த ப்ரஹ்ம ஸ்பர்சம் அந்த வார்த்தைகளில் இருக்கிறது ஏனென்றால் ஸ்ரீ நாராயண தீர்த்தரும் அந்த ப்ரஹ்மானந்தத்தில் லயித்து அதனின் உணர்வு வெளிப்பாடுதான் அவரின் வரிகள். அந்த வரிகளை நாம் பாடும் போதும், கேட்கும்போதும், நாமும் அந்த ப்ரஹ்ம உணர்வையே அடைகிறோம் ப்ரஹ்மத்தின் அருகில் நெருங்குகிறோம். ஸ்பர்ஸிக்கிறோம் அதனால் ஆனந்த பாஷ்பம் கண்களில் பெருகுகிறது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
கி.பி 17ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்து வந்த ஸ்ரீ ராமானந்த சுவாமிகளின்” ரத்னப் ப்ரபை” என்னும் நூலில் கூறப்பட்ட அத்யாஸ லக்ஷணத்தை ஸ்ரீ நாராயண தீர்த்தர் “ஸுபோதினி” என்ற தன் நூலில் குறிப்பிட்டு இருக்கிறார். கி.பி 16ஆம் நூற்றாண்டில் தஞ்சையில் அரசாட்சி புரிந்த அச்யுதப்ப நாயக்கனால் தானமாக கொடுக்கப்பட்ட அச்சுதபுரம் எனப்படும் “மெலட்டூரில்” கோயில் கொண்டிருக்கும் வரதராஜப் பெருமாளை, அங்கு சில ஆண்டுகள் வாழ்ந்து ,”பாரிஜாதாபஹரணம்” என்று தான் இயற்றிய ஸங்கீத நாடகத்தில் “அச்யுதபுர நிவாஸா” “வரதராஜ ப்ரபோ” என்று குறிப்பிட்டு உள்ளார்.
கி.பி 18ம் நூற்றாண்டில் தஞ்சையை ஆண்டு வந்த “துலஜா” என்ற வேந்தனுடைய காலத்தில் தஞ்சை ஸரஸ்வதி மகாலில் சேகரித்து வைக்கப்பட்ட “பஞ்ச கோஶ மஞ்ஜரீ” என்னும் ஓலைச்சுவடியில், அதன் நூலாசிரியர் ஸ்ரீ நாராயண தீர்த்தரை தன்னுடைய குருவாகக் கூறியுள்ளார். ஆகையால் ஸ்ரீ நாராயண தீர்த்தர் கிபி 17 ஆம் நூற்றாண்டின் நடுவிலும், கி.பி 18 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் (1650 – 1750 A.D) வாழ்ந்து வந்தார் என்று தெரிகிறது.
(ஆதாரம்- வரஹூர் ப்ரஹ்மஸ்ரீ குருஸ்வாமி சாஸ்த்திரிகளின் ஸ்ரீகிருஷ்ண லீலாதரங்கிணி உரையுடன் கூடிய புஸ்தகம்- 1986)
ஸ்ரீநாராயணதீர்த்தர் கிபி 17ம் நூற்றாண்டில் ஆந்திர ப்ரதேசத்தில் உள்ள குண்டூர் மாவட்டத்தில் விளத்தூர் என்ற கிராமத்தில் அவதரித்ததாகச் சொல்லப்படுகிறது. பூர்வாஶ்ரமத்தில் அவருடைய பெயர் மாதவன் என்றும் கோவிந்த சாஸ்திரி என்றும் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. அவர், தன் இளம் வயதிலேயே பகவத் பக்தியில் ஈடுபட்டு, பல க்ஷேத்திரங்களுக்குச் சென்று, பகவத் தரிஶனம் செய்தார் என்றும் அவர் வேதாத்திரியைச் சேர்ந்த பெண்ணை மணந்து இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டார் என்றும், கர்ண பரம்பரை வாயிலாகத் தெரிகிறது. அவர் இளமையிலேயே வேத ஶாஸ்த்திரங்கள், ஸங்கீத ஸாஹித்யங்களில் விற்பன்னராக இருந்தார் என்றும் தெரிகிறது.
ஒரு சமயம் கிருஷ்ணாநதியின் அக்கரையிலுள்ள தன் மாமனார் வாழ்ந்த வேதாத்திரி கிராமத்தை அடைய நீந்திச் செல்கையில் நதியில் திடீரென்று வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு வெள்ளம் அவரை உருட்டி சென்றுவிட்டது. அவர் உயிருக்கு பேரபாயம் ஏற்பட்ட சூழ்நிலையில், அவர் தான் க்ருஹஸ்தாஶ்ரமத்தை துறந்து, ஸந்யாஸ மார்கத்தை தழுவுகிறேன் என்று ப்ரதிக்ஞையை எடுத்துக்கொண்டார். வெள்ளமும் வடிந்து அக்கரையிலுள்ள மாமனாரின் வீட்டையடைந்தார். அவரைப் பார்த்த அவரின் மனைவி அவரிடம் ஒரு ஸந்யாஸியின் காந்தி வீசுவதை உணர்ந்தார். அவரிடம் விசாரித்தபோது நடந்தவற்றை அறிந்தாள். பின் தன் மனைவிடம் அனுமதி பெற்று இல்லற வாழ்வைத் துறந்து காஶி க்ஷேத்ரம் சென்று ஸ்ரீ ஸ்ரீசிவராம தீர்த்தர் என்ற மஹானிடம் முறைப்படி ஸந்யாஸம் பெற்றார் என்று சொல்லப்படுகிறது. கிருஷ்ணா நதி வெள்ளம் ஸ்ரீதீர்த்தரை ஸந்யாஸி ஆக்கியது, ஸ்ரீகிருஷ்ண மஹாஸாகரம் அவரை ப்ரஹ்மஞானி ஆக்கியது போலும். இது ஆதிசங்கரர், முதலை, தன் காலைப் பிடித்துக்கொண்டதை வ்யாஜ்யமாகக் கொண்டு, ஸந்யாஸம் வாங்கிக் கொண்டதை நினைவு படுத்துகிறது.
அதற்கு பிறகு, அவர் தன் குருவின் ஆக்ஞைப்படி தீர்த்தயாத்ரை மேற்கொண்டு காசி, ப்ரயாகை, மதுரா. பூரி போன்ற க்ஷேத்திரங்களுக்குச் சென்று வழிபாடு செய்தார், காசியில் பல வருடங்கள் தங்கி ப்ரஹ்மோபாசனையில் ஈடுபட்டார். பிறகு காவேரிக்கரையிலுள்ள பலக்ஷேத்திரங்களுக்குச் சென்று வழிபாடு செய்து வரும் போது அவருக்கு தீராத வயிற்றுவலி வந்து மிகவும் சிரமப்பட்டார்,
இப்படியாக திருவையாறு வந்தடைந்தார். அவ்வூரின் தெற்கே உள்ள நடுக்காவேரி எனும் கிராமத்தை அடைந்தபோது, அவரின் வயிற்றுவலி மிக அதிகமாகி அங்குள்ள வினாயகர் கோயிலில் இரவு படுத்துறங்கினார். அவர் கனவில் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் தோன்றி “நீ காலையில் விழித்தெழும்போது முதலில் எந்த மிருகத்தைப் பார்க்கிறாயோ, அதைத் தொடர்ந்து செல், உன் வயிற்றுவலி நீங்கும்” என்று சொல்லி அருளினார்.
அது போலவே மறுநாள் காலையில் கண்விழித்தபோது, ஒரு வெள்ளைப் பன்றியைக் கண்ணுற்றார். காலையில் கண்விழிக்கும்போது பன்றியைப் பார்ப்பது அபசகுனம் என்று மனத்தில் தோன்றினாலும் ஸ்ரீகிருஷ்ணனின் ஆக்ஞையை சிரமேற்கொண்டு அப் பன்றியைப் பின்பற்றிச் சென்றார்,சுமார் 4 கி.மீ தொலைவு வரைத் அதனைத் தொடர்ந்து சென்றபின், மிகவும் களைப்புற்றார்.
அத்தருணம், அப்பன்றி ,அருகாமையில் உள்ள ஒரு கோயிலினுள் சென்று மறைந்தது.அச்சமயம் ஆகாசவாணியின் குரலைக் கேட்கலுற்றார். ”என்னைத் தேடாதே.உன்னை இங்கு வரவழைக்கவே நான் இவ்வாறு செய்தேன்” எனற குரலொலி கேட்டது. அதைக்கேட்ட அவர் மெய் சிலிர்த்து ,ஆனந்த பரவசம்அடைந்தார். அந்த க்ஷணமே அவருடைய தீராத வயிற்றுவலியும் மறைந்தது, பூபதிராஜபுரம் என்ற பெயர் பெற்ற அக்கிராமம், அன்று முதல் வராஹபுரி என்ற சிறப்புப் பெயரைப் பெற்றது. வராஹம் என்ற ஸம்ஸ்க்ருதசொல்லுக்கு பன்றி என்று பொருள்,
ஸ்ரீ தீர்த்தர் அந்த இடத்தின் மஹிமையை உணர்ந்து கிராம ஜனங்களின் உதவியுடன் அந்த பூமியை அகழ்ந்து பார்த்ததில் ஸ்ரீ வேங்கடேஶ ப்பெருமாள் தேவியை அணைத்தவாறு உள்ள ஸ்வயம்பு ஶிலாமூர்த்தியைக் கண்டெடுத்து அந்த இடத்தில் ஒரு கோயிலை, பக்தர்களின் ஸஹாயத்துடன் நிர்மாணித்து, பகவானைப் ப்ரதிஷ்டை செய்து, பூஜா வழிபாடுகள் தினமும் நடக்க ஏற்பாடுகள் செய்தார்,
அவர் தம் வாழ்நாள் முழுவதும் அந்த புண்ணிய வராஹ க்ஷேத்ரத்திலேயே தங்கி உலகப்புகழ் பெற்ற ஸ்ரீகிருஷ்ணலீலா தரங்கிணி என்ற பக்தி சுவை சொட்டும் பாடல்கள் நிரம்பிய காவ்யத்தை அருளிச் செய்தார். அவர் ஸங்கீதத்திலும், நடன சாஸ்த்திரத்திலும் வல்லுநராக இருந்ததால் தன் இஷ்ட தேவதையான ஸ்ரீகிருஷ்ணபரமாத்மாவிடம் உள்ளத்தின் ஒருமைப் பாட்டை வெளிப்படுத்தவதற்காக ஸங்கீதத்தையும் நாட்யத்தையும் தன் பாடல்களில் சேர்த்து இந்த காவியத்தை Opera என்று சொல்லப்படும் நாட்டிய நாடகமாக எழுதியுள்ளார். இந்த காவ்யத்தின் தனிச்சிறப்பு என்னவென்றால் அந்த பெருமாள் ஸன்னதியில் அவர் எழுதிய அத்தனைப் பாடல்களுக்கும் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் உருவத்தில், ஸ்ரீருக்மிணி தேவியுடன் நடனமாடி தன் அங்கீகாரத்தை வழங்கினார் என்றும் அவர்களின் சலங்கை ஒலியை மட்டும் ஸ்ரீநாராயணதீர்த்தர் கேட்டார் என்றும் சொல்லப்படுகிறது. மேலும் அங்கே கம்பத்தில் உள்ள ஒரு ஆஞ்சனேயரும் இவர் பாட்டுக்கு தாளம் போட்டதால், அவருக்கு தாளம் கொட்டி ஆஞ்சனேயர் என்றே பெயர்.
இங்கு, குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணன், ஸ்ரீநாராயண பட்டத்திரியின் ஸ்ரீநாராயணீயம் முழுவதற்கும் அங்கீகாரம் வழங்கியதை நினைவு கூறுவோம்.
ஸ்ரீமன் நாராயணீயத்தை விட சிறிது ஏற்றமாக, பகவான் ஸ்ரீ க்ருஷ்ணனும் பாகவதனான ஆஞ்சனேயனும் அங்கீகாரம் செய்த காவியமே – ஸ்ரீ க்ருஷ்ண லீலா தரங்கிணி என்றால் அது மிகையல்ல.
வடமொழியில் தரங்கிணி என்ற சொல், அலைகளுடன் கூடிய ஆற்றை குறிப்பதாகும். ஸ்ரீகிருஷ்ணனுடைய லீலைகள் ஆகிற அலைகளை 12 தரங்க பிரிவுகளுடன் கொண்டுள்ளதால், இந்நூலுக்கு ஸ்ரீகிருஷ்ணலீலா தரங்கிணி என்ற பெயர் ஏற்பட்டது. இந்த நூலில் 303 ஶ்லோகங்கள், 153 கீதங்கள், 31 சூர்ணிகைகள் அடங்கியுள்ளன. இந்த 153 கீதங்களில் தரு என்று சொல்லப்படும் 33 சிறிய 2 வரி, 4 வரி, 8 வரி பாடல்களும் அடக்கம்.
ஸ்ரீநாராயணதீர்த்தர் கடினமான சொற்களைத் தவிர்த்து லலிதமான சொற்களாலேயே தன் கத்யங்களையும், பத்யங்களையும் சுலபமாக புரிந்து கொள்ளும் வகையில் அமைத்துள்ளார். ஶ்லோகங்களையும் சூர்ணிகைகளையும் கீதங்களிடையே ஸந்தர்பத்துக்கேற்ப அழகுபட பொருத்தியுள்ளார்.
ஶ்லோகங்கள் அழகிய பல விருத்தங்களிலும், கீதங்களை 34 மனம் கவரும் ராகங்களிலும், கேட்போரை நடனம் ஆட வைக்கும் 10 தாளங்களிலும் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த நூலில் ஸ்ரீமத் பாகவதம் தஶம ஸ்கந்தம் 1 முதல் 58 வரையுள்ள அத்யாயங்களில் கூறப்பட்ட, ஸ்ரீகிருஷ்ணனின் அவதாரம், பாலலீலைகள், கன்றுகளை மேய்த்தல், கோபீ வஸ்த்ராபஹரணம், கோவர்தனகிரி உத்தாரணம், ராஸக்கிரீடை, கம்ஸன் முதலிய துஷ்டர்களை அழித்தல், கடலின் நடுவே துவாரகையை நிர்மாணித்து அதனுள் ப்ரவேசித்தல், ஸ்ரீகிருஷ்ண ருக்மிணி விவாஹத்தை வர்ணிப்பதோடு அஷ்டமஹிஷிகளுடன் விவாஹமும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு தரங்கத்திலும் இன்ன இன்ன லீலைகள்அபிநயிக்கப்பட்டுள்ளன, இந்த இந்த பாத்திரங்கள் வருகின்றனர் என்று கூறி, ஶ்லோகம், கீதம், சூர்ணிகை இவைகளால் அந்த அந்த லீலைகளை அந்த தங்கத்தின் ஆரம்பத்தில் விளக்கியுள்ளார், முன்பு சொன்னது போல Opera என்று சொல்லப்படும் நாட்டிய நாடகம் என்ற முறையைத் தழுவியே ஸ்ரீ கிருஷ்ண லீலைகளை அபிநயம் செய்தல், என்பதை மையமாக வைத்து, இந்த நூலானது படைக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீநாராயணதீர்த்தர், ஸ்ரீ க்ருஷ்ண லீலைகளை இதில் சொல்வது போன்று தோன்றினாலும், ஊன்று கவனித்தால், இந்த க்ரந்தத்தில், வேதாந்தங்களில் விசாரம் செய்து நிர்ணயித்தவாறு, ஜாதி, குணம், கிரியை, இவைகளற்றதும், ஆனந்தம், ப்ரகாஶம், ஸத்து (எப்போதும், எங்கும், எல்லாமுமாக இருப்பது) ஆகிய லக்ஷணங்களைக் கொண்ட பரம்பொருளை எப்போதும் உள்ளத்தில் இருத்தி ஆராதித்திருக்கிறார். . ஆயினும் அத்தகைய நிர்குணமான பரம்பொருளை அடைவதற்கு அதன் ராம,கிருஷ்ண வடிவங்களை உபாஸிக்க வேண்டும். இந்த ஸகுண வழிபாடே நாளடைவில் தனக்குத்தானே நிர்குண பரப்ப்ரஹ்ம உபாஸனையாக மாறும். உதாரணமாக ஜீவன்முக்தரான ஸ்ரீ ஶுகப் ப்ரஹ்மம் நிர்குண பரப்ப்ரஹ்ம உபாஸனையில் தீவிரமாக ஈடுபட்டவராயினும், ராஜா பரீக்ஷீத்திற்கு பாகவதத்தை- கிருஷ்ணலீலைகளை -உபதேஸித்தார், ஒவ்வொரு லீலையிலும் தன் உள்ளத்திலுள்ள பரப்ப்ரஹ்மத்தை நினைவுகூறுகிறார். ஸ்ரீ ஶுகப் ப்ரஹ்மத்தைப் போலவே ஸ்ரீநாராயணதீர்த்தரும் அந்தப் பரப்ரஹ்மத்தை நினைவு கூர்ந்தே பரம்பொருளின் ஸகுண வடிவங்களைத் துதித்து தன் பாடல்கள் மூலம் வழிபட்டுள்ளார். ஸ்ரீகிருஷ்ண லீலைகளை வர்ணிக்கும்போதே மற்ற தேவதைகளையும் துதிப்பது இதன் தனிச்சிறப்பு.
ஸ்ரீமத் பாகவதத்தில் வியாஸர் கிருஷ்ணர், ராமர், ந்ருஸிம்ஹ அவதாரங்களைக் குறிப்பிடும்போது ஸ்ரீமன் நாராயணன் எல்லையற்ற கருணையினாலேயே அவதாரங்களை எடுத்தார் என்று வலியுறுத்த ஒவ்வொரு அவதாரத்தைக் கூறும்போதும் “அத்புத” என்ற அடைமொழியைச் சேர்த்து இருக்கிறார். இவ்விஷயத்தையே ஸ்ரீ தீர்த்தர் “மங்களாலய மாமவ தேவ என்று தொடங்கும்” முதல்தரங்கம் கீதம்10-ல் “அதிகருணா வித்ருத அத்புத ரூபா” என்ற சொற்றொடரால் விளக்கியுள்ளார். இதையே ஸ்ரீ ஜயதேவர் முதல் அஷ்டபதியில் ஓவ்வொரு அவதாரத்தை பற்றி சொல்லும் போதும் “கேஶவா த்ருத” -கேஶவன் தரித்த- என்று கூறி அந்த அந்த அவதாரத்தை வர்ணிப்பதன்முலம் ஸ்ரீ கிருஷ்ணன் பூர்ண பரமாத்மா என்று எடுத்துக்காட்டுகிறார்.
இவ்வாறே ஸ்ரீ தீர்த்தரும் தன் நூல் முழுவதிலும் ஶ்லோகத்திலும், சூர்ணிகையிலும், கீதத்திலும் ஸ்ரீகிருஷ்ணன் பிறப்பு இறப்பு அற்றவன், எங்கும் நிறைந்திருப்பவன், ப்ரஹ்மாண்டங்களைத் தாங்கி நிற்பவன், நிலையான ஆனந்தவடிவு உடையவன், தன் அடியார்களைக் காப்பாற்ற மாயையால் பலஅவதாரங்களைச் செய்தவன், அஹம் ப்ரஹ்மாஸ்மி, தத்வமஸி, என்ற மஹாவாக்யங்களால் ஏற்படும் ஞானத்தால் உணரப்பட்டவன் என்ற கருத்தை “ஸகலநிகமாந்த ஜனிதாந்தமதி விதிதம்” என்று கூறியுள்ளார் (தரங்கம் -3, கீதம்-34ல் 7வது சரணம்). ஸ்ரீமத் பாகவதமும் இதே கருத்தை, “பெரிய நீர் தேக்கத்திலிருந்து எப்படி சிறிய கால்வாய்கள் ஆயிரம் தோன்றுகின்றதோ, அது போல மத்ஸ்யம் முதல் கல்கி அவதாரங்கள் அனைத்தும் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவிடமிருந்து தோன்றியவைகளே. ஸ்ரீ கிருஷ்ணபரமாத்மா பரிபூரண தத்வம். மற்ற அவதாரங்கள் அவருடைய அம்ஶங்களே.” என்று கூறுகின்றது .
பாகவதம் ஸ்க. 1- அத்யா. 3 – ஶ்லோ.26- 28
अवतारा ह्यसङ्ख्येया हरे: सत्त्वनिधेर्द्विजा:। यथाविदासिन: कुल्या: सरस: स्यु: सहस्रश: ॥ २६ ॥
ऋषयो मनवो देवा मनुपुत्रा महौजस: । कला: सर्वे हरेरेव सप्रजापतय: स्मृता: ॥ २७ ॥
एते चांशकला: पुंस: कृष्णस्तु भगवान् स्वयम् । इन्द्रारिव्याकुलं लोकं मृडयन्ति युगे युगे ॥ २८ ॥
“பங்க்தி” எனப்படும் சந்தஸ் (விருத்தம்) ஒரடிக்கு ஐந்து எழுத்துள்ளதாகும். அவ்விதம் ஐந்து பொருட்கள் அடங்கிய கூட்டங்கள் சேர்ந்த இவ்வுலகம் “பாங்க்தம்” என்று அழைக்கப்படுகிறது. இவை உலக பாங்க்தம்,தெய்வ பாங்க்தம், பூத பாங்க்தம், வாயு பாங்க்தம், இந்திரிய பாங்க்தம், தாது பாங்க்தம், என ஆறுவகைப்படும். இவ்வித ஆறு பாங்க்தங்களும் சேர்ந்தே உள்ளிலும், வெளியிலுமுள்ள உலகமாகும். இதை, ப்ரஹ்மமாக உபாஸிப்பவன், பரம்பொருளாகவே ஆகின்றான் என்று தைத்திரீய உபநிஷத் சிக்ஷாவல்லி, 7ம் அனுவாகத்தில் ”பாங்க்தம்வா இதகும் ஸர்வம், பாங்தேனைவ பாங்க்தக் ஸ்ப்ருணோதேதி ஓம் இதிப்ப்ரஹ்மா ஓம்இதீதகும் ஸர்வம்” எனபதின் கருத்தையே ஸ்ரீ தீர்த்தர் 2வதுதரங்கம் ஶ்லோ.44ல் “பாங்க்த கர்ம க்ரமேண வேத்யம்” எனக் கூறுகிறார்,
2வதுதரங்கம், சூர்ணிகை17ல், ஸ்ரீ தீர்த்தர் ,”ஆருருக்ஷூநிவ ஆரூடயோகி” என்ற சொற்றொடரைப் ப்ரயோகப் படுத்தியுள்ளார். எல்லாம் அறிந்த கண்ணன் உயரத்தில் உள்ள உரிகளில் வைக்கப்பட்டிருக்கும் தயிர்,பால்,வெண்ணைய் முதலியவைகளை எடுப்பதற்கு வழி தெரியாத கோப குழந்தைகளுக்கு, உபாயங்களைக் கற்றுக்கொடுத்தான் என்பது பொருள் ”ஆருருக்ஷூநிவ ஆரூடயோகி”- நிஷ்காம கர்மாக்களினால் சித்த ஸுத்தி அடைந்தவன் ஆரூட யோகி.அதைப் பெற விரும்புபவன் ”ஆருருக்ஷு யோகி. என்று ஶாஸ்த்திரங்கள் கூறுகின்றன. முன்னவர் பின்னவருக்கு வழிகாட்டுபவர். ”ஆருருக்ஷோர் முனேர் யோகம்” என்று தொடங்கும் பகவத்கீதை அத்.6, ஶ்லோ.3 லும் இக்கருத்தே கூறப்படுகிறது.
आरुरुक्षोर्मुनेर्योगं कर्म कारणमुच्यते । योगारूढस्य तस्यैव शम: कारणमुच्यते ॥ 3॥
வராஹபுரி புண்ணிய க்ஷேத்ரத்தில் ஸ்ரீநாராயணதீர்த்தரால் ஆரம்பிக்கபட்டதும், பக்தர்களால் இன்றுவரை பக்தி ஶ்ரத்தையுடன் நடத்தப்பட்டுவரும் உறியடி தத்வத்தை விளக்குவது இந்த இடத்தில் பொருத்தமாக இருக்கும் என தோன்றுகிறது, மனிதன் தன்னுள்ளேயே இருக்கும் ப்ரஹ்மத்தை உணர்ந்து, தானும் அதுவாகவே ஆகி பேரானந்தத்தை அனுபவிக்க அக்ஞானம் (அறியாமை) தடையாக உள்ளது. வாழ்கையில் பல்வேறு இடர்கள் மனிதனை அவன் லக்ஷியத்தை அடையமுடியாமல் குறுக்கிடுகின்றன இவற்றை ஶ்ரவணம், கீர்த்தனம், ஸ்மரணம், பாதஸேவனம் .அர்ச்சனம், வந்தனம், தாஸ்யம், ஸக்யம், ஆத்மநிவேதனம் ஆகிற ஒன்பது வகைப்பட்ட பக்தியில் ஈடுபவதால் ஏற்படும் ஞானத்தால், இடர்களை தகர்த்து, பகவதனுகரஹத்தாலும், ஞானிகளின் துணைகொண்டும், ப்ரஹ்மத்துடன் இரண்டறக்கலந்து, ப்ரஹ்மானந்தம் அடைவதையே விளக்குவது போல், உறியடி உத்ஸவம் அமைந்துள்ளது
மூங்கில் குச்சிகளால் பின்னப்பட்ட உறியடிப் பெட்டியும், வழுக்குமரத்தில் பூசப்பட்டிருக்கும் பசை முதலியவையும் அக்ஞானமாகும், பலவிதமான இடையூறுகளுக்கிடையில் தடிகளால் உறியை அடித்தும், கைளால் பிடித்து பெட்டியை உடைப்பதும், வழுக்கு மரத்தின் மீது பூசப்பட்ட அக்ஞானமாகிற பாசபந்தங்களைக் களைந்தும் படிப்படியாக மேலே ஏறுவதும், ஶ்ரவணம் முதலிய ஸாதனங்களால் உண்டாகிற அறிவாகும். வழுக்குமரத்தின் அடியில் ஸ்திரமாக நின்று மேலே ஏறிச் செல்பவர்களுக்கு உதவுபவர்கள் ஆரூடயோகி -க்கும், மேலே ஏறிச் செல்பவர்கள் ஆருருக்ஷுவிற்கும் ஸமமானவர்களே, இத்தத்துவமே உறியடித் தத்துவம். உறியிலும்,வழுக்கு மரத்தின் மேலும் தொங்கும் ப்ரஸாதத்தை, பகவத் ப்ரஸாதமாக ஏற்று, பக்தர்கள் பகிர்ந்து கொள்வது, பகவத் அனுக்ரஹத்தினாலேயே, பரப்ரஹ்ம ஞானம் கிட்டி பூர்ணானந்தம் கிட்டும் என்பதைக் காட்டுகிறது.
2வதுதரங்கம், சூர்ணிகை17ல் ஸ்ரீதீர்த்தர் “முக்யப்ராண இவ வாகாதீன்” என்ற சொற்றொடரை உபயோகித்து ஸ்ரீகிருஷ்ணனை ப்ராணனுக்கு இணையாகவும் கோபர்களை வாக்கு முதலிய புலன்களுக்கு இணையாகவும் உருவகப்படுத்தி, வாக்கு முதலிய புலன்களைக் காட்டிலும் ப்ராணனே சிறந்தது என்று விளக்குகிறார். ப்ராணனே ஐம்புலன்களை காட்டிலும் சிறந்தது என்ற விஷயமானது, ப்ரஶ்னோபநிஷத் 2வது ப்ரசனம் 4வது வாக்யத்திலும், சாந்தோக்ய உபநிஷத் 5வது அத்யாயம் 1வது காண்டத்திலும், ப்ரஹதாரண்ய உபநிஷத் 6வது அத்யாயம் 1வது காண்டத்திலும் கூறப்படுள்ளது. வேத ஶாஸ்த்திரங்களையும், வேதாந்தங்களையும் நன்கு கற்றறிந்த ஸ்ரீதீர்த்தர், பாமர மக்களுக்கும் எளிதாக புரியக்கூடிய வகையில் ஸகல வேதாந்த ஸாரங்களைத் தன் நூலில் இடைஇடையே நன்மணிகளாகக் கோர்த்திருக்கிறார்.
ஸ்ரீதீர்த்தர், ”பாஹி பாஹி ஜகன்மோஹன கிருஷ்ணா பரமானந்த ஸ்ரீ கிருஷ்ணா” (4வது தரங்கம்- கீதம் 35) என்று குழந்தை ஸ்ரீகிருஷ்ணனின் அழகு உலகம் அனைத்தையும் மயங்கவைக்கும் அழகு என்றும் பரமானந்த வடிவுடையவன் என்றும் கூறுகிறார். சாதாரணமாக ஒரு குழந்தையின் கள்ளம் கபடமற்ற சிரிப்பைப் பார்த்தாலே நமக்கு இனம் தெரியாத ஆனந்தம் கிட்டுகிறது. ஏனென்றால் அது பூர்ண ஸத்வ குணத்துடன் இருப்பதாலேயே. அதற்கு அன்னப்ராசனம் ஆகும்வரை இந்த பூர்ண ஸத்வ குணம் அதனிடம் நீடிக்கிறது. அதற்குப்பின் அதற்கு ரஜோ,தமோ குணங்களின் கலப்பு வந்துவிடுகிறது. ஸத்வ குண அளவும் குறைய ஆரம்பிக்கிறது. அப்படியிருக்க ஶுத்த ஸத்வகுணமே உருவெடுத்து இருக்கும் குழந்தை ஸ்ரீகிருஷ்ணனைக் காணும்போது பரமானந்தமாக இல்லாமல் எப்படி இருக்க முடியும். அதையே “பரமானந்த ஸ்ரீ கிருஷ்ணா” என்கிறார் தீர்த்தர்,
மேலும் (4வது தரங்கம்- கீதம் 35) 3வது சரணத்தில் ஸுலபமாக மாந்தர்களால் அறிய முடியாத, உள்ளடங்கிய மஹிமை வாய்ந்தவர் எனபதை “கூடமஹிம ஸ்ரீ கிருஷ்ணா” என்கிறார். நந்த கோகுலத்தில், குழந்தை ஸ்ரீ கிருஷ்ணன் செய்யாத ஸாஹஸங்கள் இல்லை. பூதனை வதம், சகடாஸுர வதம்,காளிங்க நர்தனம், கோவர்தனகிரி உத்தாரணம், போன்ற வளர்ந்த மனிதனாலேயே முடியாத பல அதிசயிக்கும் ஸாஹஸங்களைச் செய்தாலும், கோபர்கள் அவனுடைய பராக்கிரமத்தை அறியவில்லை,ஒரு குளத்தில் இருக்கும் மீன்கள் தண்ணீரில் தெரியும் பூர்ண சந்திர ப்ரதிபிம்பத்தைக் கண்டு அதன் பெருமையை அறியாமல், அந்த சந்திரனையும் தன்னைப் போல் ஒரு மீன் என்று எண்ணுமாம். அதுபோல கோபர்களும் ஸ்ரீ கிருஷ்ணனை தங்களைப் போல ஒரு சாதாரண இடையன் என்றே எண்ணினார்கள்,என்று இதைப்பற்றி ஸ்ரீமத் பாகவதம் கூறுகிறது.
அத்வைத வேதாந்த ஸித்தாந்தப்படி ஆத்மஸ்வரூபம் ஒன்றே ப்ரகாசமாக இருக்கும் பொருள். அந்த ஆத்ம ஸ்வரூபத்தை தவிர்த்த அனைத்துப் ப்ரபஞ்சமுமே, ப்ரகாசம் அற்ற ஜடப்பொருளாகும். எனவே,ஆத்ம ஸ்வரூபத்திற்கு ஆவரணம்(மறைப்பு) தேவையில்லை.மாயையின் வசத்தில் கட்டுப்பட்டு கோபிகள் இருந்தாலும், அவர்கள் தன்னிடம் கொண்ட அத்யந்த ப்ரேமையால் கவரப்பட்டு அவர்களை அனுக்ரஹிக்கும் பொருட்டு, ஸ்ரீகிருஷ்ணன் நடத்திய லீலையே கோபிகா வஸ்த்ராபஹரணம். வஸ்திரம், ஸ்தூலதேஹத்தை மறைக்கும் ஆவரணம் (திரை). மாயை, ஸூக்ஷ்ம தேகத்தையும் காரண தேகத்தையும் மறைக்கும் ஆவரணம். அபஹரணம் என்றால் பறிப்பது, களையும்படி செய்வது என்று பொருள்.
காத்யாயணி வ்ரதம் மேற்கொண்ட கோபிகைகளின் ஸ்தூலதேஹ ஆவரணம் இந்த லீலையால் நீங்குகிறது. உண்மையான ஆத்ம ஸ்வரூபம் ஸ்ரீகிருஷ்ணனிடமும் கோபிகைகளிடமும் ஒன்றே. கோபிகைகளுக்கு ஸ்வயம்ப்ரகாஶ ஸ்வரூபமான தன்னிடம், மனம், சித்தம் (ஸூக்ஷ்ம தேஹம்), மாயையாகிற ஆவரணம் களையப்பட்டு தன்னிடம் பூர்ணமாக லயிக்கப் பெறவேண்டும் என்று வஸ்த்ராபஹரணம் என்ற வ்யாஜத்தால் உபதேசித்தபோது கோபிகைகளுக்கு மூல அக்ஞான ஆவரணம் போக்கடிக்கப்பட்டது. மேலும், “என்னிடம் உள்ளத்தை நிலையாக இருக்கச் செய்தவர்களுக்கு மறுபடி உடலையடைந்து சம்ஸாரத்தில் உழலுவது என்பது கிடையாது. தீயில் நன்கு வறுக்கப்பட்ட பயிறு, உளுந்து, கோதுமை போன்ற வித்துக்கள் ஒருபொழுதும் வயலில் விதைக்கப் பெற்று முளைத்ததில்லை. ஆகவே, நீங்கள் பிறவியற்றவர்கள் ஆனீர்கள்”-என்று கோபிகைகளிடம் ஸ்ரீகிருஷ்ணன் கூறினார், (பாகவதம் ஸ்க.10அத்யா 22-ஸ்லோ. 26).
न मय्यावेशितधियां काम: कामाय कल्पते । भर्जिता क्वथिता धाना: प्रायो बीजाय नेशते ॥ २६ ॥
வஸ்த்ராபஹரண தத்துவத்தை, ஸ்ரீதீர்த்தர் 5வது தரங்கத்தில் “ஆவரணம் மம நஹி தே தாதும் பாவய கோபவதூஜன ப்ருந்த” என்ற கீதம் 45ல் கிருஷ்ண கோபிகள் ஸம்பாஷணையின் வாயிலாகத் தெளிவுபடக் கூறியுள்ளார்.
மேலும் 7வது தரங்கம், கீதம் 1 ல் “அத்வயமகண்டிதம்” என்ற சரணத்திலிருந்து 20 வது சரணம்வரை 20 சரணங்கள் அடங்கிய கீதத்தால் ஸாமவேதத்தைச் சார்ந்ததும் 16 பிரிவுகள் கொண்டதுமான சாந்தோக்ய உபநிஷத்தில், உத்தாலக ருஷியால் தன் புதல்வனும் சீடனுமான, ஶ்வேதகேது என்ற முனிகுமாரனுக்கு, உபதேஶிக்கப்பட்ட ஆத்மதத்வ ஸாரத்தை,ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா ராஸமண்டலத்தில் உள்ள கோபிகைகளுக்கு கானரூபமாக உபதேஸித்துள்ளதாக, ஸ்ரீதீர்த்தர் வர்ணித்துள்ளது அவரின் கவித்வத்தையும் உயர்ந்த ஆத்மஞானத்தையும் எடுத்துக்காட்டுகிறது,
सत्यं ज्ञानमनन्तं ब्रह्म । यो वेद निहितं गुहायां परमे व्योमन् । सोऽश्नुते सर्वान् कामान् सह ब्रह्मणा विपश्चितेति என்று தைத்திரீய உபநிஷத் ஆனந்தவல்லி கூறுகிறது, ஹ்ருதயத்தில்லிருக்கும் உபநிஷத் ஸாரச் சுருக்கமான “புத்தியால் நான் ப்ரஹ்மமாகவே இருக்கிறேன்” என்று உணருபவன் பேரானந்தத்தை அடைகிறான். பேரானந்தத்தில் முழ்கித் திளைத்த அந்த ஜீவன் முக்தன், நானே அந்த ப்ரஹ்மம் என்று பாடுகிறான்” என்று தைத்திரீய உபநிஷத் ப்ருகுவல்லி கூறுகையில் ‘ஹாவ் ஹாவ் ஹாவ்’ என்று ஆனந்தக்கூத்து ஆடுகிறான் என்றும் கூறுகிறது. இந்தக் கருத்தையே ஸ்ரீதீர்த்தர், தன்னையே ஒரு கோபிகையாகப் பாவித்து இந்த பரமானந்தத்தை தான் அனுபவித்து, அதை கோபியர்கள், ஸ்ரீ கிருஷ்ணபரமாத்மாவுடன் அனுபவித்ததாக எழுதியுள்ளார். (தரங்கம் 7 ஸ்லோ. 12).
हृदय निहितं कान्तं काचित् कलिन्द सुता तटे
प्रियतमं अथ आलिङ्गति अद्धा निरङ्कुश तृप्तित: |
निजपरभित् अतीतम् धैर्यात् श्रुते: शिरसां बलात्
मुहुरपि भृशं गायन्ति एनं चिरं बहु मोदते ||
இதில்.”நிரங்குஶ த்ருப்தித”- என்ற சொல்லால் ஸ்ரீ கிருஷ்ணபரமாத்மாவும் தானும் ஒன்றே, வேறில்லை அதாவது பரமாத்மாவும் ஜீவாத்மாவும் ஒன்றே, வேறில்லை என்ற ஆத்மஞானத்தினால் ஏற்படும் பேரானந்தம் நிகரற்றது என்ற மஹாவாக்யங்களின் அர்த்தத்தைதான் உணர்த்துகிறார் என்று சொல்லவும் வேண்டுமோ?. (தரங்கம் 7 ஸ்லோ. 12).
ஸாதாரணமான மனித அனுபவங்களில், விழிப்பு நிலையில், மனத்தில் தோன்றும் பூரண நிறைவுபெறாத எண்ணங்கள் நினைவுகள் உருவெடுத்து, நம் உறக்க நிலையில் கனவுகளாக மாறுகிறது. இதையே கவிதை நயத்துடன் பார்க்கும்போது நம் கனவுகளே விழிப்பு நிலையில் நிறைவுபெற்ற நிகழ்வுகளாக மாறுகிறது. இதைத்தான் .ஸ்ரீலீலாசுகர் தான் எழுதிய கிருஷ்ண கர்ணாமிருதத்தில் (அங்கநாம் அங்கநாம் என ஆரம்பிக்கும் (2-வது ஆஸ்வாசம் ஶ்லோகம்- 35) ராஸலீலையை விவரிக்கும்போது, எப்படி ஒரு கனவு, விழிப்பு நிலையில் உண்மை நிகழ்வாக மாறுவதை கவி நயத்துடன் வர்ணிக்கிறார்.
अङ्गनामङ्गनामन्तरे माधवो माधवं माधवं चान्तरेणाङ्गना।
इत्थमाकल्पिते मण्डले मध्यगः सञ्जगौ वेणुना देवकीनन्दनः॥ ३५
இந்த நிலையில் நமது வலுப்பெற்ற ஏகாக்ர சிந்தனைகள் பகவான்பால் இருந்தால், அவனருளால், அவை நிறைவாகும் தன்மையை ராஸக்ரீடா நிகழ்ச்சி மூலம் விவரிக்கிறார். இதில் கிருஷ்ணன் எப்படி தன்னை பல கிருஷ்ணன்களாக ஆக்கிக் கொண்டு கோபியர்களின் இடையே நடனம் புரிந்த நிகழ்ச்சியை அழகாக வர்ணித்துள்ளார். மேலும் கோபியர்கள் அமைத்த வட்டத்தின் நடுவிலும் நின்று புல்லாங்குழல் வாசித்துக்கொண்டு இருக்கிறான்.அவர்களுக்கு மற்ற கோபியர்கள் மறைந்து, ஒவ்வொரு கோபியும் தான் ஒருவளே கண்ணனுடன் தனியாக நடனம் ஆடிக் கொண்டிருப்பதாகவே எண்ணி ஆனந்திக்கிறாள், அப்போது கனவும் நினைவும் ஒன்று இணைந்து, அவர்களுக்கு தான் கனவுலகத்தில் தான் அனுபவித்த தனிப்பட்ட ஆனந்தம், நினைவு நிலையில், ஒரு உண்மை நிகழ்வாகவே தோன்றுகிறது. இந்த தன் உணர்வு இல்லாது ,தான், தனது என்ற தளைகளையும் உதறித் தள்ளிவிட்டு அப்பரமாத்மாவிடம் அனன்ய பக்தியுடன் ஶரணாகதி அடைவதையே ஒவ்வொரு பக்தனும் (ஜீவாத்மாவும்) விரும்புகிறான்.
இந்த விவரிக்க இயலாத, உன்னத ப்ரேமபக்தி பெருக்கு, நினைவுலகத்தையும், கனவாக மாற்றவல்லது என்பதை கிருஷ்ண கர்ணாம்ருதத்தில் (விக்ரேது காமா எனத்தொடங்கும் ஶ்லோகம் 55-2வது ஆஸ்வாஸம்), லீலாசுகர் மற்றொரு நிகழ்ச்சியால் வர்ணிக்கிறார்.
விக்ரேதுகாமா கில கோ³பகன்யா
முராரிபாதா³ர்பிதசித்தவ்ருʼத்தி꞉ .
த³த்⁴யாதி³கம்ʼ மோஹவஶாத³வோசத்³
கோ³விந்த³ தா³மோத³ர மாத⁴வேதி
தயிர்விற்கும் ஒரு கோபிகை ப்ருந்தாவனத்தில் “தயிர், தயிர்” என்று கூவிக்கொண்டு செல்லும்போது ,கிருஷ்ணனின் பாதகமலங்களில் மனத்தைச் செலுத்தி, அவனுடைய பாலலீலைகளில் மனம் லயித்து, தன்னை மறந்த நிலையில், “தயிர் தயிர்” என்று கூவுவதை மறந்து “கோவிந்தா, மாதவா, தாமோதரா “என்று தன் இனிய குரலில் கூவ ஆரம்பித்தாள். கனவு, நினைவுகளைத் தாண்டி, பக்திப்பரவசம் ஒருவரை எப்படி மதிமயங்கச் செய்கிறது என்பதை நன்கு உணர முடிகிறது. தன் ஸ்வானுபவங்களை கவிகளாலேயே இப்படி நயம்பட வர்ணிக்க முடியும்.
ஸ்ரீதீர்த்தர் பாடிய ஒவ்வொரு பாடலுக்கும் தன் சலங்கை ஒலி கேட்கச் செய்ததும் ஸ்ரீ கிருஷ்ணர் வராஹபுரியில் நித்யவாஸம் செய்கிறார் என்பதற்கு ப்ரமாணமாகிறது. அவரது பாததூளிகள் இந்த மண்ணில் நிறைந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. மேலும் ஸ்ரீதீர்த்தருக்கும்,ஸ்ரீ கிருஷ்ணருக்கும் வித்யாசமே இல்லை என்பது உறுதி. ஸ்ரீதீர்த்தர் வராஹபுரியிலேயே பலகாலம் வாழ்ந்து ஸ்ரீ கிருஷ்ணரின் பாலலீலா விநோதங்களைப் பாடிப்பாடி அவனையே ஸதாஸர்வ காலம் நினைந்து, நினைந்து உருகி அவனுள்ளே ஐக்யமாகி, பரம அத்வைதியான அவரே, ப்ரஹ்மவித் ப்ரஹ்மைவ பவதி என்றபதற்கேற்ப ஸ்ரீ கிருஷ்ணராக பாவித்து ஸ்ரீ கிருஷ்ணராகவே மாறிவிட்டார் என்பதில் ஒருவித ஐயமும் இல்லை. இதை அவரே நிரூபணமும் செய்திருக்கிறார். தேவர்களின் ப்ரார்த்தனையுடன் தொடங்கும் “பாஹிமாம் பாஹிமாம் பரமதயாளோ” எனத்தொடங்கும் 10வது தரங்கம் கீதம் 99 ல் ஈடற்ற தன் பரமபக்தியால் இப்பாடலின் ஒவ்வொரு சரணத்திலும் ஸ்ரீவிஜயகோபாலா என்ற சொல்லை 12 தடவைகள் ப்ரயோகித்து முத்திரை சரணத்தில் “நாராயண தீர்த்த விஜயகோபால” என்று நாராயண தீர்த்தராகவே, அவரிடமிருந்து வேறுபடாமல் இருப்பவரே என்று கூறியிருப்பது ஸ்ரீதீர்த்தர், தான் ஸ்ரீ கிருஷ்ணராகவே மாறிவிட்டதை உணரமுடிகிறது. தரங்கப் பாடல்களில், தான் வேறு தரங்கம் வேறு என்றில்லாமல் ஸ்ரீகிருஷ்ணனே ப்ரத்யக்ஷமாகக் குடி கொண்டுள்ளான் என்பது ஸத்யவாக்காகும். இதை உணர்ந்து, பாட்டு, பாடுபவர் என்ற வேறுபடாத மனோநிலையில் ,தரங்கப் பாடல்களைப் பாடும்போது வராஹபுரியில் நித்யவாசம் செய்யும், ஸ்ரீகிருஷ்ணன் ப்ரஸன்னமாகிறார் என்பதில் ஐயமே இல்லை.
ஆந்திர சம்பிரதாயத்தில் திருமண சமயத்தில் மணமகனுக்கு மணமகள் நல் முத்துக்களால் அபிஷேகம் செய்வது என்ற ஒரு ஆசாரம் அனுஷ்டிக்கப் படுகிறது. அதை அனுசரித்து ஸ்ரீ நாராயண தீர்த்த ஸ்ரீ ருக்மணி விவாஹத்தில் அதை ஶ்லோகம் 305 ல் வர்ணித்துள்ளார்.
அதன் அர்த்தம் பின்வருமாறு-
பீஷ்ம மகாராஜாவின் மகளான ஸ்ரீ ருக்மிணீ தேவியின் செந்தாமரை போன்ற சிவந்த, குவித்த உள்ளங்கைகளில், வெண்ணிறமான நல்முத்துக்களை நிரப்பினார்கள். வெண்மையான முத்துக்கள் அனைத்தும் செந்நிறம் ஆகின. நிகரற்ற தன் அன்பினால், அம் முத்துக்களை தூய்மைப்படுத்தி அவற்றை ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் தலையில் வர்ஷித்தாள். ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் உடலுடன் சேர்ந்த, அந்த தூயமான தூய்மையான முத்துக்கள் ஸ்ரீ கிருஷ்ணனின் நிறத்தை ஒத்த (கரிய) நிறத்தை அடைந்தன. அவை ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவுடன் இரண்டற கலந்து விட்டன. ஸ்ரீகிருஷ்ண விவாகத்தில் ஸ்ரீ ருக்மிணீயால் வர்ஷிக்கப்பட்ட, அந்தப் பெருமை வாய்ந்த முத்துக்கள், எங்கும், எப்போதும் எல்லோருக்கும், எல்லா நன்மைகளையும் அளிக்கட்டும். என்று கூறியுள்ளார்.
இதில் அவர், முக்தியின் பல்வேறு நிலைகளை அதாவது ஸாலோக்யம், ஸாமீப்யம், ஸாரூப்யம், ஸாயுஜ்யம் ஆகியவற்றை வர்ணித்துள்ளார்.
ஆன்மாக்கள், பல கோடிப் பிறவிகளில் சேர்த்து வந்துள்ள கர்மங்களை, முழுவதுமாய் களைந்து, மீண்டும் பிறவாத நிலையை அடைவது ‘முக்தி’ என்று குறிக்கப் படுகிறது.
புவி ஈர்ப்பு சக்தி உள்ள பூமி, எந்தப் பொருளையும் தன் பிடியிலிருந்து, தப்பிச்செல்ல விடாது. பூமி தன் வசீகர சக்திக்கு உள்ளேயே அதை வைத்துக் கொள்ளும். அது போலவே, அச்யுதனான பகவான், எந்த ஒரு ஜீவன் தன்னை அடைய முயற்சிக்கிறதோ, அதனைத் தனக்கு மிக அருகாமையில் வைத்துக் கொள்கிறார். மேலும் அதனுடைய ஆன்மீக ஸாதனை ஏற்றத்திற்கும், அக்கறை எடுத்துக் கொள்கிறார் இதைப் போல, ஜீவன்களின் மேல் பகவான் காண்பிக்கும் அன்பே முக்தியாகும்.
முக்தி வகைகள் நான்கு என்று புராணங்கள் பறை சாற்றுகின்றன ஸாலோக்யம், ஸாமீப்யம், ஸாரூப்யம், ஸாயுஜ்யம்,
ஸாலோக்யம்-
பகவான் பகவானின் உலகில் நுழைய பக்தன் விளைகிறார் இந்த ஸாலோக்ய பக்தியே ஜீவன் முக்திக்கு வழி கூறுகிறது
ஸாமீப்யம்- பகவானின் வெகு அருகாமையில் இருக்க விரும்புவது.
ஸாரூப்யம்- இந்நிலையில் பக்தனானவன், நல்ல குணங்களையும், பகவானின் தெய்வீக குணங்களையும், தெய்வீக உருவத்தையும் பெறுகிறான்
ஸாயுஜ்யம்- பகவானுடன் பக்தன் ஒன்றாக கலக்கும் நிலையே ஸாயுஜ்யம் எனப்படுவது. .ஜீவாத்ம – பரமாத்ம ஐக்கிய நிலையைக் குறிப்பது.
ஸ்ரீதீர்த்தர் இந்த ஶ்லோகத்தில் இம்மாதிரி, அந்த நல்ல சுத்தமான வெண் முத்துக்கள் ஸ்ரீ ருக்மணி தேவீயின் ஸாலோக்யம் பெற்று, அவளின் செந்தாமரை கரங்களை அடைந்து, ஸாமீப்யம் பெற்று, அவளுடைய ஸாரூப்யத்தையும் பெற்று, செந்நிறம் ஆகின. மேலும் ஸ்ரீ ருக்மிணி தேவி ,அந்த முத்துக்களை, ஸ்ரீ கிருஷ்ண பகவானின் தலையில் வர்ஷிக்கும் போது அவை கிருஷ்ணனுடைய ஸாமீப்யத்தையும் ஸாரூப்யத்தையும் பெற்று ஸ்ரீ கிருஷ்ணனைப் போலவே , அவனின் கரிய நிறத்தையும், அவனுடைய கல்யாண குணங்களையும் பெற்று ,அவனாகவே மாறிவிட்டன என்று முக்தி தத்துவத்தை மிக அழகாக, சுருக்கமாக, நமக்கு உபதேசிக்கிறார் ஸ்ரீதீர்த்தர்.
அவ்வாறு முக்தி நிலையை அடைந்த ,பெருமை வாய்ந்த, அந்த நல் முத்துக்கள் ,எங்கும், எப்போதும், எல்லோருக்கும், எல்லா சுபங்களையும், மங்களங்களையும் அளிக்கட்டும் என்று அந்த முத்துக்களைப் பகவானாகவே நினைத்து, வேண்டுகிறார் ஸ்ரீ தீர்த்தர்.
ता: कुर्वन्तुअभित:शुभानि सततं श्रीकृष्णवैवाहिका: – தரங்கம் 12 ஶ்லோ.305
ஸ்ரீநாராயணதீர்த்தரின் ஸ்ரீகிருஷ்ணலீலா தரங்கிணி12 தரங்கிணிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது
ஸ்ரீஜயதேவரின் கீதகோவிந்தமும் 12 ஸர்கங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது, .ஸ்ரீமத்பாகவதமும் 12 ஸ்கந்தங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது
ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் த்வாதஸாக்ஷரி மந்திரம் 12 அக்ஷரங்களைக் கொண்டது. ஒவ்வொரு ஸ்கந்தம் ஆரம்பிக்கும் போது வியாசர், இந்த மூல மந்திரத்தை ஸ்மரித்தே தொடங்குகிறார் என்பது குறிப்பிடத் தக்கது.
துருவ சரித்திரத்தில் ஸ்ரீநாரத மஹரிஷி, துருவனுக்கு,இந்த மூல மந்திரத்தை உபதேஶிப்பதாக ஸ்ரீமத்பாகவதத்தில் கூறப்பட்டுள்ளது. (பாக.ஸ்க.4 அத்யா.8-ஸ்லோ.54).
ॐ नमो भगवते वासुदेवाय ।
मन्त्रेणानेन देवस्य कुर्याद् द्रव्यमयीं बुध: । सपर्यां विविधैर्द्रव्यैर्देशकालविभागवित् ॥ ५४ ॥
மிகவும் சக்தி வாய்ந்த இந்த மந்திர அக்ஷரங்களின் எண்ணிக்கை 12ஆனதால், ஸ்ரீ கிருஷ்ண பக்தர்களான ஸ்ரீஜயதேவரும், ஸ்ரீநாராயணதீர்த்தரும் ஸ்ரீமத்பாகவதத்தை அனுசரித்து தத்தம் நூல்களை 12 பாகமாக பிரித்திருக்கலாம் என்றே தோன்றுகிறது.
ஆத்ம ஞானம் பெற்று பரமாத்ம ஐக்கியத்தில் ஈடுபட்டு ப்ரஹ்மானந்தத்தில் திளைத்த ஸ்ரீநாராயணதீர்த்தர் ஆகிய ப்ரஹ்மநிஷ்டரால் ஸ்வானுபவத்தில் எழுதப்பெற்றதால், அவரின் பாடல்களில் பக்திரஸம் சொட்டுகிறது. எனவே இப்பாடல்களை நாம் பாடும் போதும், மற்றவர்கள் பாடிக்கேட்கும்போதும் மெய்மறந்து பரமானந்தத்தில் திளைத்து கண்ணீர் மல்கி பரவசமாகிறோம். இப்படி ப்ரேமபக்தியில் முழ்கிய உறுதியான பக்தன் தனக்குப் பிரியமான பகவன் நாம கீர்த்தனைகளைப் பாடும்போது மனமுருகி உலக விவஹாரங்களை அறவே மறந்து பித்தன் போல உரக்கச் சிரிப்பான், சில சமயம் அழுவான்,உறக்க கூச்சலிடுவான், பாடுவான், ஆடுவான் என்று நவயோகிகளில் ஒருவரான கவியோகி, விதேஹ ராஜாவிற்கு பக்தனின்
லக்ஷணத்தை தெரிவிக்கிறார் (ஸ்ரீமத் பாகவதம் .ஸ்க.11 அத்யா2 ஶ்லோ40).
एवंव्रत: स्वप्रियनामकीर्त्या जातानुरागो द्रुतचित्त उच्चै: ।
हसत्यथो रोदिति रौति गायत्युन्मादवन्नृत्यति लोकबाह्य: ॥ ४० ॥
இம்மாதிரி, ஸ்ரீநாராயணதீர்த்தர் எழுதிய பாடல்கள், மேலே கூறியவாறு ச்ரேஷ்ட பக்தர்களை உருவாக்குகிறது என்று சொன்னால் மிகையாகாது.
उपमा श्रीवाल्मीकस्य श्रीशुखौ अर्थ गौरवम् |
श्रीभट्टतन्त्रे पदलालित्यं श्रीतीर्थे सन्ति त्रयो गुणा ||
உவமை நயத்தில், ஸ்ரீவால்மீகி மஹரிஷியும், பொருளாழத்தில், ஸ்ரீஶுகப்ரம்மமும், சொல்லாட்சியில் ஸ்ரீ பட்டத்திரியும் சிறந்து விளங்கினாலும், இம்மூன்று சிறப்புகளையும் ஒருங்கே கொண்டவர் ஸ்ரீதீர்த்தர் மட்டுமே. ஸ்ரீதீர்த்தரின் கவித்துவச் சிறப்புக்குச் சூட்டப்பட்ட ஓர் அழகான அஞ்சலி இது.
ஸுபோதினி-
ப்ரம்ம ஸூத்ர ஶங்கர பாஷ்யத்திற்கு உரை (சதுஸ்ஸூத்ரி) 1954 -ம் வருஷம் கும்பகோணம் அத்வைத ஸபையால் அச்சிட்டு வெளியிடப்பட்டுள்ளது .
விவரண தீபிகா-
ஸுரேஶ்வராச்சார்யார் இயற்றி உள்ள பஞ்சீகரண வார்த்திகத்தின் உரையாகும். இந்நூல் பூரணமாக உள்ளது தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்தில் தெலுங்கு லிபியில் மேனுஸ்கிரிப்ட் ஆக இருப்பதாகும்.
பாரிஜாதாபஹரணம் நாடகம் :
ஒரு யக்ஷ கானம் தெலுங்கு மொழியில் ஆனது சிதிலமானதும், முழுதுமாக இல்லாததும் ஆகும் தஞ்சை ஸரஸ்வதி மஹால் நூலகத்தில் உள்ளது.
பாரிஜாதாப ஹரண நாடகம் சமஸ்கிருதத்தில் உள்ளது
27 ஓலைகளில் எழுதப்பட்டுள்ளது 2, 4 ,5 ,8 ,10 ஓலைகள் காண்பதற்கு இல்லை .மெலட்டூரில் ஸ்ரீ தீர்த்தர் வசிக்கும் போது எழுதியதாகும் மெலட்டூரிலிருந்து டாக்டர் ராகவன் அவர்களால் சென்னைக்கு எடுத்து வரப்பட்டது.
ஹரிபக்தி ஸுதார்ணவம்-
இது பாகவதம் பத்தாவது ஸ்கந்தத்தில் அடங்கிய பொருளை வர்ணித்து ஒரு காவியமாக எழுதப்பட்ட நூலாகும். இதிலும் பல அத்தியாயங்கள் காண்பதற்கு இல்லை. சென்னை அரசாங்க ஓரியண்டல் ஓலைச்சுவடி லைப்ரரியில் இருப்பதாகும்.
(ஆதாரம்- வரஹூர் ப்ரஹ்மஸ்ரீ குருஸ்வாமி சாஸ்த்திரிகளின் ஸ்ரீகிருஷ்ண லீலாதரங்கிணி உரையுடன் கூடிய புஸ்தகம்- 1986)
ஸ்ரீவரஹாபுரி வேங்கடேஶ ஸ்தோத்திரம்
ஸ்ரீ நாராயண தீர்த்தர் எழுதிய பல க்ரந்தங்களில் ஸ்ரீ வரஹாபுரி வேங்கடேஶ ஸ்தோத்திரம் முக்கியமானது. இதில் ஸ்ரீ தீர்த்தர் பகவானின் பல்வேறு கல்யாண குணங்களை வர்ணித்து, மிகவும் அனுபவித்து எழுதிய க்ரந்தமாகும்.
இச்சமயம் ஸ்ரீ பாகவதம் தோன்றிய வரலாறு நினைவுக்கு வருகிறது.
மகாபாரதம், மற்றும் 17 புராணங்களையும் எழுதிய ஸ்ரீவேதவ்யாஸரிடம் ஸ்ரீநாரத மஹரிஷி வருகிறார். அப்போது வ்யாஸர் மன வ்யாகூலத்தில் இருக்கக் கண்டு காரணத்தை கேட்கிறார். வ்யாஸர்.“ நான் மகாபாரதம் எழுதினேன். எவ்வளவோ தர்மங்களை விவரித்தேன். ஆனாலும் என் மனம் அமைதியுறவில்லை .” என்று கூற நாரதர் மகாபாரதத்தில் பகவான் ஸ்ரீகிருஷ்ணரைப் பற்றி கூறியிருந்தபோதும், பக்தியின் பெருமையையோ பகவானின் பெருமையையோ முழுதும் கூற வில்லை என்று சொல்லி வ்யாஸரை பாகவதம் எழுதத் தூண்டுவதற்காக பக்தியின் பெருமையை எடுத்துக் கூறிய பின் ஸ்ரீவ்யாஸபகவான் ஸ்ரீமத்பாகவத மஹாபுராணத்தை,
பகவத் ஸ்துதிகள் நிரம்பிவழிய, பதினெட்டாவது புராணமாக ஸ்ரீமத் பாகவதத்தைப் படைத்து அருளினார் என்று ஸ்ரீமத் பாகவத முதல் ஸ்கந்தத்தில் அத்யாயம் 4&5 ல் கூறப்பட்டுள்ளதை நினைவுகூர்வோம்.
இதே மாதிரி ,ஸ்ரீ நாராயண தீர்த்தர் தான் எழுதிய தெய்வீக மகா காவ்யமான ஸ்ரீ கிருஷ்ண லீலா தரங்கிணியை மிகவும் உன்னதமாக, அழகாகப் படைத்தும் மனம் ஸந்துஷ்டி அடையவில்லை போலும்.
ஸ்ரீ வியாஸ பகவானைப் போலவே ஸ்ரீ தீர்த்தரும் பகவானின் கல்யாண குணங்களை தனியாக அனுபவித்து சொல்ல வேண்டும் என்ற எண்ணம் தோன்றி ,அதனை ஸ்ரீ வராஹபுரி வேங்கடேஶப் பெருமாளைக் குறித்து, அவர் தான் ஸ்ரீமன் நாராயணர், அவர்தான் ஸ்ரீ கிருஷ்ணன், அவர் தான் அனைத்தும் என்ற பொருள்பட, மிகவும் அழகாக எழுதி உள்ளார்.
இதில் வரும் சந்தங்கள் (மீட்டர்ஸ்) மிகவும் வித்தியாசமானது
வித்யாசமான பல சந்தங்களில் அவர் இந்த ஸ்தோத்திரத்தை படைத்திருக்கிறார். அதில் ஒவ்வொரு ஶ்லோகமும் பகவானின் விவித கல்யாண குணங்களையும், வரஹூர் பெருமாளின் மகிமையையும் போற்றக்கூடிய விசேஷ ஶ்லோகங்களாக இருக்கின்றன.
இதில் அவர் ப்ரயோகம் செய்த பதங்கள், அதன் அர்த்த பாவம் மிகச் சிறந்து, மனதைக் கொள்ளை கொள்வதாக இருக்கிறது.
125 ஶ்லோகங்கள் கொண்ட இந்த வராஹபுரி வேங்கடேஶ ஸ்தோத்திரம் ஒரு பெரும் தெய்வீகப் படைப்பாக இருக்கிறது.
தான் எழுதிய ஸ்ரீகிருஷ்ண லீலா தரங்கிணியில் உள்ள பல்வேறு திவ்யநாமங்களையும், பகவானின் லீலா விபூதிகளையும் இதில் ப்ரயோகப்படுத்தி ஸ்துதி பாடி உள்ளார்.
ஆனால் இது உலகிற்கு அவ்வளவு தூரம், வெளிக்கொண்டு வரப்படாமல், ப்ரகடனப் படுத்தப்படாமல் மிகவும் கூடமாகவே இருந்து வந்திருக்கிறது அதனால் இந்த க்ரந்தமானது ஸ்ரீ கிருஷ்ண லீலா தரங்கிணியைப் போல ஒரு பாப்புலாரிட்டியை அடையவில்லை. அதாவது மக்கள் மத்தியில் ப்ரஸித்தமாக இல்லை என்பது வருந்தத்தக்கது ஏனெனில், இந்த 125 ஶ்லோகங்களும் பக்தி ரஸம், பக்தி பாவம் நிறைந்தவை. அவைகளின் உள்ளர்த்தங்கள் மிகவும் புனிதமானவை. ஸ்ரீ நாராயண தீர்த்தர் தன்னுடைய கவித்துவத்தினாலும், பல்வேறு, புராணங்கள், பல்வேறு உபநிஷத்துக்கள், வேதம் இவற்றைக் கற்றுக் கைதேர்ந்ததாலும் ஒவ்வொரு பதத்திலும் அணுவைத் துளைத்து ஏழ்கடலையும் புகுத்திருக்கிறார் என்று எண்ணத் தோன்றுகிறது ஒவ்வொரு பதமும், அவர் எழுதியதைப் புரிந்து விளக்கப் போகும் கால் , எவ்வளவு விஷயங்களை அந்த ஒரு பதத்தில் அவர் நமக்குத் தெரிவித்து இருக்கிறார் என்பதை உணரும் போது மிகவும் ஆச்சர்ய அனுபவமாக இருக்கிறது. படிக்கும் போதும், அர்த்தத்தை புரிந்து அனுபவிக்கும் போதும் மெய்சிலிர்க்க வைக்கும் ஒப்புயர்வற்ற, அருமையான ஒரு கிரந்தம் இது.
வரஹூர் ப்ரஹ்மஸ்ரீ கோபால பாகவதரின் பெளத்ரரான ப்ரம்ஹஸ்ரீ வைத்ய ரத்ன பரத ஶாஸ்த்ரி என்பவரால் 1935ம் வருடம் ஸமஸ்க்ருதத்தில் ஸ்தோத்ர புஸ்தகமாக, சென்னபுரி வாவிள்ள ராமஸ்வாமி ஶாஸ்த்ருலு & சன்ஸ் மூலம் திருப்பதி ஆனந்தா பிரிண்டர்ஸால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.
மேலும் ஆஸ்தீக அன்பர்கள் பாராயணம் செய்வதற்கு ஹேதுவாக ஸமஸ்க்ருதம்,தமிழ் இரண்டு லிபிகளில் ஸ்ரீ.PK.சுப்ரமணியன் அவரது துணைவியார் ஸ்ரீமதி ஷோபனா சுப்ரமணியன் எழுதிய தமிழ் அர்த்தத்துடன் கூடியது-
வரஹூர் ஸ்ரீ S. ஶங்கரநாராயணன் [வாத்யார் ஶங்கரன் என்று அன்புடன் அழைக்கப் படுபவர்] என்ற வரஹூர் பெருமாளின் பரம பக்தரால் 2003வது ஆண்டில் புஸ்தகமாக வெளிடப்பட்டு 2013,2018 ஆண்டுகளில் மறுபதிப்பு செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.
மேலும்,இந்த க்ரந்தத்தின் மதிப்பை உணர்ந்த வரஹூர் ப்ரஹ்மஸ்ரீ வே.ரங்கப்ராஸாத் பாகவதரால், பகவத் அனுக்ரஹத்தால் இந்த ஸ்தோத்திரங்கள் பதம் பிரிக்கப்பட்டு 1008 நல் முத்துக்களான நாமாவளிகளாக , 2024ம் ஆண்டு ஸமஸ்க்ருதம், தமிழ் இரண்டு லிபிகளிலும் புஸ்தமாக வெளியிடப்பட்டது.
இந்த நாமாவளிகளால், பிரதி சனிக்கிழமை ஏகாதஶி, ஶ்ரவணம், ரோஹிணி நக்ஷத்திரங்கள் போன்ற விசேஷ தினங்களில் பெருமாளுக்கு அர்ச்சனை செய்வதற்கு உகந்ததாக இருக்கிறது.
இந்த கிரந்தம் அவ்வளவு பக்தர்களிடையே பிரசித்தமாக இல்லாமல் இருப்பது மனதிற்கு ஒரு வேதனையையளிக்கிறது.
ஸ்ரீராமகிருஷ்ண மடத்தைச் சேர்ந்த பரமஹம்ச ஸ்ரீப்ரம்மானந்த சுவாமிகள் மேற்கு வங்காளத்தில் 21 ஜனவரி 1863 இல் பிறந்தவர் .அவர் கொல்கத்தாவில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் தலைவராக,ஸ்வாமி விவேகானந்தரால் 1897ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். சுவாமி பிரம்மானந்தா அவர்கள் ஹரி ஸ்தோத்திரம், ஸ்ரீரமாபதி அஷ்டகம் ஸ்ரீகோவிந்தாஷ்டகùம் என்ற மூன்று கிரந்தங்களைப் படைத்துள்ளார் அவைகளில் ஸ்ரீபரமஹம்ச பிரம்மானந்த விரசிதம் என்று ஒவ்வொரு கிரந்தத்தின் கடைசியிலும் எழுதப்பட்டு உள்ளது இந்த மூன்று அஷ்டகங்களும் முறையே ஸ்ரீஹரிஸ்தோத்திரம்
ஸ்ரீ ரமாபதி அஷ்டகம் ஸ்ரீகோவிந்தாஷ்டகம் என்பவை. இவை வடநாடுகளில் மிகவும் பிரசித்தி யான கிரந்தங்கள். ஹரி பக்தர்களால் மிகவும் போற்றப்படும் ஸ்தோத்திரங்கள். இவைகளை ஆழ்ந்து படிக்கும் பொழுது இவர் ஸ்ரீ நாராயண தீர்த்தர் எழுதிய ஸ்ரீ வெங்கடேச ஸ்தோத்திரம் என்ற க்ரந்தத்திலிருக்கும் ஸ்தோத்திரங்களைப் போலவே சிறிய மாற்றங்களுடன் இருக்கின்றன.
ஸ்ரீ நாராயண தீர்த்தர் கிபி 17ஆம் நூற்றாண்டின் நடுவிலும் கிபி 18 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் (அதாவது1650- 1750 AD) வாழ்ந்து வந்தார் என்பதை நாம் இங்கு நினைவு கூர்வோம்
இப்பொழுதுஸ்ரீ ஹரி ஸ்தோத்திரம் என்கிற அவருடைய முதல் கிரந்தத்தைப் பார்ப்போம் .
இதில் ஸ்ரீ நாராயண தீர்த்தர் எழுதிய வராஹபுரி வேங்கடேச ஸ்தோத்திரம் ஸ்லோகம் 23 லிருந்து 30 வரை சுவாமி பிரம்மானந்தாவின் ஹரி ஸ்தோத்திரத்தில் சிறிய மாற்றங்களுடன் காணப்படுகிறது
ஸ்ரீ வராஹபுரி வேங்கடேச ஸ்தோத்திரத்தில், ஸ்ரீ நாராயண தீர்த்தர் ஒவ்வொரு ஸ்லோகத்தின் முடிவிலேயும் வராஹபுரி ஈசனைக் குறித்து துதித்திருக்கிறார் அவைகளின் கடைசி வரியில் ஒவ்வொரு ஸ்லோகத்திலும் பஜே வேங்கடேசம் வராஹ புரீசம் என்று ஸ்ரீதீர்த்தர் எழுதி உள்ளார் .ஆனால் சுவாமி பிரம்மானந்தா எழுதிய ஹரிஸ்தோத்திரத்தில் ஒவ்வொரு ஸ்லோகத்தின் கடைசி வரியிலும் ” பஜேஹம் பஜேஹம் என்று எழுதப்பட்டுள்ளது.
அடுத்ததாக சுவாமி பிரம்மானந்தா எழுதிய மற்றொரு அஷ்டகமான ஸ்ரீரமாபதி அஷ்டகத்தைப் பார்ப்போம். இந்த அஷ்டகத்தில் ஸ்ரீ நாராயண தீர்த்தர் எழுதிய வேங்கடேச ஸ்தோத்ரம்- ஸ்லோகம் 37 இல் இருந்து 44 வரை உள்ள எட்டு ஸ்லோகங்கள் சிறிய மாறறங்களுடன் உள்ளதை அறியலாம். ஸ்ரீவேங்கடேச ஸ்தோத்திரத்தில் இந்த எட்டு ஸ்தோத்திரங்களின் முடிவிலும் (ஒவ்வொரு ஸ்தோத்திரத்தின் முடிவிலும் “ப்ரணமாமி வராஹபுரி ராஜகம்”, என்று எழுதப்பட்டு உள்ளது அந்த ரமாபதி அஷ்டகத்தில் கடைசி வரியில் “பிரணமாமி ரமாபதிம் தமஹம்”, என்று எழுதப்பட்டுள்ளது.
அடுத்ததாக சுவாமி பிரம்மானந்தா எழுதிய கோவிந்த அஷ்டகம் என்ற க்ரந்தத்தைப் பார்க்கும் போது அதில் ஸ்ரீ நாராயண தீர்த்தர் எழுதிய வராஹபுரி வெங்கடேச ஸ்தோத்திரத்தில் உள்ள ஸ்லோகம் 67 லிருந்து 74 வரை உள்ள ஸ்லோகங்களின் வரிகள் சிறிய மாற்றங்களுடன் உள்ளது என்பது தெரிய வருகிறது. ஸ்ரீ நாராயண தீர்த்தர் இந்த குறிப்பிட்ட இந்த எட்டு ஸ்தோத்திரங்களில்
ஒவ்வொரு ஸ்தோத்திரத்தின் முடிவிலும் “ஸதா வேங்கடேசம் வராஹபுரி தேவம் பஜதரே” என்று எழுதி உள்ளார் இந்த கடைசி வரியானது கோவிந்தாஷ்டகத்தில் “ஸதா தம் கோவிந்தம் பரம சுக கந்தம் பஜதரே”என்று உள்ளதைப் பார்க்க முடிகிறது.
மஹான்கள் ,ஒரே மாதிரியாகச் சிந்தித்து ஒரே மாதிரியான பதங்களுடன், ஒரே சந்தஸில்,தமிழ்நாட்டிலிருந்தும்( ஸ்ரீதீர்த்தர்)வங்காளத்திலிருந்தும்(ஸ்வாமி ப்ரம்மானந்தர்) என்ற இருமஹான்களும் தனித்தனியே,ஒரே மாதிரியான
ஸ்லோகங்கள் எழுதியுள்ளது என்பது மிகவும் அபூர்வமாகவும் ஆச்சரியகரமாக உள்ளது . இது அந்த மாயக்கண்ணனின் விளையாட்டோ என்று எண்ணத் தோன்றுகிறது.
ஸ்ரீபிரம்மானந்தா எழுதிய இந்த 3 அஷ்டகங்களும் இன்டர்நெட்டில் இருக்கின்றன.ஆர்வம் உள்ளவர்கள் பரிசீலித்து தெரிந்து கொள்ளலாம்.
ஸ்ரீ நாராயண தீர்த்தர் பேரிலுள்ள பக்தியும், அவரின் க்ரந்தங்களில் எனக்குள்ள மரியாதையும் என்னை இதை எழுதத் தூண்டியது.
மேலும், ஸ்ரீநாராயண தீர்த்தரின் ஸ்ரீவரஹாபுரி ஸ்தோத்திரத்தில் உள்ள ஒரு 24 ஶ்லோகங்களாவது பிரசித்தமாக இருக்கிறது என்பதை அறியும் போது மனதிற்கு ஆறுதலாக இருக்கிறது.
இந்த க்ரந்தம் பகதர்களிடையே உலகப்பிரசித்தியாக, இருக்க இதைப் படைத்த ஸ்ரீநாராயண தீர்த்தர் அருளையும் அவருடைய இஷ்ட தெய்வமான வராஹபுரி வேங்கடரமணனையும் வேண்டுகிறேன்.
ஆதிசங்கர பகவத் பாதாள் படைத்த விவேகசூடாமணி ஶ்லோகம் 37 நினைவிற்கு வருகிறது .
உண்மையான ஞானி அல்லது ஸத்குருவின் உயர்ந்த தன்மைகளை விளக்கும் 37-ஶ்லோகம் மிகவும் புகழ்பெற்றது.
शान्ता महान्तो निवसन्ति सन्तो वसन्तवल्लोकहितं चरन्तः ।
तीर्णाः स्वयं भीमभवार्णवं जनान् अहेतुनान् यानपि तारयन्तः ॥ ३७
இதன் அர்த்தத்தைப் பார்ப்போம்-
மன அமைதி உள்ளவர்களும், பெரியோர்களும், வசந்த காலத்தைப் போல உலகிற்கு நன்மையை செய்பவர்களும், பயங்கரமான பிறவிக் கடலை தாங்கள் தாண்டியவர்களாகவும், பிற மனிதர்களைக் காரணத்தை வேண்டாமல், எந்த எதிர்பார்ப்புகளும் இல்லாமல், தாண்டுவிப்பவர்களும் ஆன ஸாதுக்கள் இவ்வுலகில் வசிக்கிறார்கள்.
அந்த காலத்தில் இருந்தார்கள் இந்த காலத்தில் அப்படிப்பட்ட மகான்கள் இல்லை என்று எண்ணுவது தவறானது. மகான்கள் எல்லா காலத்திலும் இருக்கிறார்கள் அவர்களைக் கண்டுகொள்ள நமக்கு அறிவும், அவாவும், முனைப்பும் இல்லாதது தான் குறை.
அப்படிப்பட்ட ஒரு சிறந்த மகான் தான் ஸ்ரீ நாராயண தீர்த்தர் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. இந்த மாதிரி மகான்கள் அவதரித்து எதிர்காலத்தில் நமது ஸனாதன தர்மத்தை மக்கள் புரிந்து கொள்ளும் அளவிற்கு எடுத்துச் சொல்வார்கள் என்பது நிச்சயம்.
चिन्तामणिर्लोकसुखं सुरद्रुः स्वर्गसम्पदम् । प्रयच्छति गुरुः प्रीतो वैकुण्ठं योगिदुर्लभम्॥
ஸர்வ மனோரதங்களையும் பூர்த்தி செய்யக்கூடிய சிந்தாமணி ரத்னம் கேவலம் ஸம்ஸார சுகங்களை மட்டும் நல்கக்கூடியது.
தேவலோக விருக்ஷமான கல்பவிருக்ஷமோ ஸ்வர்க லோகத்தையும், அதனுடைய போகங்களையும் மட்டும் அளிக்கக்கூடியது.
ஆனால் குருநாதரோ நம் பக்தியில் சந்தோஷம் அடைவாரெனில் மஹாயோகிகளுக்கும் துர்லபமான ஸ்ரீவைகுண்டத்தை அளித்துவிடுவார்.
அப்படி பட்ட சிறந்த குரு நாதரான ஸ்ரீ நாராயண தீர்த்தர் இயற்றிய பக்திக் க்ரந்தங்களைப் படித்து, அவைகளின் ஸாரத்தை மனத்தில் இருத்தினால், நமக்கும் ஸ்ரீவைகுண்டப் ப்ராப்தியை அளிப்பார் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
ஸ்ரீநாராயணதீர்த்தரின் திருப்பாதங்களை மீண்டும் மீண்டும் வணங்குவோமாக.
ஸ்ரீநாராயண தீர்த்த ஸத்குருவரம் தம் நெளமி முக்திஶ்ரியை. 🙏
🙏 ஸர்வம் ப்ரஹ்மார்பணமஸ்து 🙏