×
Saturday 26th of July 2025

நமச்சிவாயத் திருப்பதிகம் மூன்றாம் திருமுறை


Last updated on மே 29, 2025

shiva-lingam

Namah Shivaya Thirupathigam

நமச்சிவாயத் திருப்பதிகம் – 02

மூன்றாம் திருமுறை

அருளிச்செய்தவர் : திருஞானசம்பந்த சுவாமிகள்

மறுபிறவியை கடக்கவும், இறைவழிபாட்டில் விருப்பம் மேலோங்கவும் ஓத வேண்டிய திருப்பதிகம்.

திருநல்லூர் பெருமணத்தில் இறைவன் சந்நிதியில் சம்பந்தர் அவரும், அவர் மனைவியும் மற்ற சுற்றத்தாருடன் இறைவன் காட்டிய ஜோதியில் இரண்டறக் கலப்பதற்கு முன் சம்பந்தர் பாடிய பதிகம் நமச்சிவாயத் திருப்பதிகம் என போற்றப்படுகிறது.

பாடல் 1

காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தமை நன்நெறிக்கு உய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது
நாதன் நாமம் நமச்சிவாயவே.

விளக்கம்: உள்ளன்பு கொண்டு மனம் கசிந்து கண்ணீர் பெருகி தன்னை ஓதுபவர்களை முத்திநெறியாகிய நன்னெறிக்குக் கூட்டுவிப்பதும், நான்கு வேதங்களின் உண்மைப் பொருளாக விளங்குபவனும், அனைவருக்கும் தலைவனான சிவபெருமானின் திருநாமம் “நமச்சிவாய” என்ற திருவைந்தெழுத்தாகும்.

பாடல் 2

நம்புவார் அவர் நாவின் நவிற்றினால்
வம்பு நாண்மலர் வார்மது ஒப்பது
செம்பொன்னார் திலகம் உலகுக்கெலாம்
நம்பன் நாமம் நமச்சிவாயவே.


விளக்கம்: சிவபெருமானின் திருவடிகளையே பற்றுக் கோடாக நம்பும் பக்தர்கள் திருவைந்தெழுத்தைத் தங்கள் நாவினால் உச்சரித்தால், நறுமணம் கமழும் நாண்மலர்களில் உள்ள தேன்போல இனிமை பயப்பது, எல்லா உலகங்கட்கும் செம்பொன் திலகம் போன்றது நம்முடைய சிவபெருமானின் திருநாமமான “நமச்சிவாய” என்னும் திருவைந்தெழுத்தே ஆகும்.

பாடல் 3

நெக்குள் ஆர்வம் மிகப்பெருகி(ந்) நினைந்து
அக்கு மாலை கொடு அங்கையில் எண்ணுவார்
தக்க வானவரா(க)த் தகுவிப்பது
நக்கன் நாமம் நமச்சிவாயவே.


விளக்கம்: உள்ளம் நெகிழ்ந்து அன்புமிகப் பெருக சிவபெருமானைச் சிந்தித்து, தமது அழகிய கையில் உருத்திராக்க மாலையைக் கொண்டு திருவைந்தெழுத்தை விதிப்படிச் செபிப்பவர்களைத் தேவர்களாக்கும் தகுதியைப் பெறும்படிச் செய்வது ஆடையில்லாத சிவபெருமானின் திருநாமமாகிய “நமச்சிவாய” என்னும் திருவைந்தெழுத்தேயாகும்.

பாடல் 4

இயமன் தூதரும் அஞ்சுவர் இன்சொலால்
நயம் வந்து ஓத வல்லார்தமை நண்ணினால்
நியமம் தான் நினைவார்க்கு இனியான் நெற்றி
நயனன் நாமம் நமச்சிவாயவே.


விளக்கம்: தன்னை நாடோறும் தியானித்து வழிபடும் அடியவர்கட்கு என்றும் நன்மை செய்பவனும், நெற்றிக்கண்ணை உடையவனுமான சிவபெருமானின் திருநாமம் “நமச்சிவாய” என்ற திருவைந்தெழுத்தாகும். இனிமையான சொற்களால் திருவைந்தெழுத்தை நயம்பட ஓதவல்லவர்களை எவரேனும் அண்டினால், அங்ஙனம் அண்டியவர்களையும் அணுக இயமன் தூதன் பயப்படுவான்.

பாடல் 5

கொல்வாரேனும் குணம் பல நன்மைகள்
இல்லாரேனும் இயம்புவர் ஆயிடின்
எல்லாத் தீங்கையும் நீங்குவர் என்பரால்
நல்லான் நாமம் நமச்சிவாயவே.


விளக்கம்: கொலைத்தொழிலில் ஈடுபட்டவர்களாக இருப்பினும், நற்குணமும், பல நல்லொழுக்கங்களும் இல்லாதவர் ஆயினும் ஏதேனும் சிறு பூர்வ புண்ணியத்தால் திருவைந்தெழுத்தை உச்சரிப்பார்களேயானால் எல்லாவிதமான தீங்குகளினின்றும் நீங்குவர் என்று பெரியோர்கள் கூறுவர். அத்தகைய சிறப்புடையது எல்லோருக்கும் நன்மையே செய்பவனாகிய சிவபெருமானின் திருப்பெயரான “நமச்சிவாய” என்னும் திருவைந்தெழுத்தேயாகும்.

பாடல் 6

மந்தரம் அன பாவங்கள் மேவிய
பந்தனையவர் தாமும் பகர்வரேல்
சிந்தும் வல்வினை செல்வமும் மல்குமால்
நந்தி நாமம் நமச்சிவாயவே.

விளக்கம்: மந்தர மலை போன்ற பாவங்களைச் செய்து பாசங்களால் கட்டுண்டவர்களும், திருவைந்தெழுத்தை உச்சரிப்பார்களேயானால் அவர்களது கொடியவினைகள் தீர்ந்து போகும். அவர்கட்குச் செல்வமும் பெருகும். அத்தகைய சிறப்புடையது நந்தி என்னும் பெயருடைய சிவபெருமானின் திருநாமமான “நமச்சிவாய” என்பதாகும்.

பாடல் 7

நரகம் ஏழ்புக நாடினர் ஆயினும்
உரைசெய் வாயினர் ஆயின் உருத்திரர்
விரவியே புகுவித்திடும் என்பரால்
வரதன் நாமம் நமச்சிவாயவே.

விளக்கம்: ஏழ் நரகங்கட்குச் செல்லக் கூடிய பாவிகளானாலும் திருவைந்தெழுத்தைப் பக்தியோடு உச்சரிப்பார்களேயானால், உருத்திர கணத்தாரோடு சேர்ந்து வசிக்கும் பேற்றினைப் பெறுவர். அடியவர்கள் கேட்ட வரமெல்லாம் தரும் சிவபெருமானின் திருநாமமான “நமச்சிவாய” என்பதாகும்.

பாடல் 8

இலங்கை மன்னன் எடுத்த அடுக்கல் மேல்
தலங்கொள்கால் விரல் சங்கரன் ஊன்றலும்
மலங்கி வாய்மொழி செய்தவன் உய்வகை
நலங்கொள் நாமம் நமச்சிவாயவே.

விளக்கம்: இலங்கை மன்னனான இராவணன் திருக்கயிலையைப் பெயர்த்து எடுக்க முயல, சங்கரன் தன் காற்பெருவிரலை ஊன்றவும், கயிலையின் கீழ் நெருக்குண்டு அவன் வாய்விட்டு அலற அவனுக்கு உய்யும்நெறி அருளி, நன்மை செய்வதையே தன் இயல்பாக உடைய சிவபெருமானின் திருநாமமாகிய “நமச்சிவாய” என்ற திருவைந்தெழுத்தாகும்.

பாடல் 9

போதன் போதன கண்ணனும் அண்ணல்தன்
பாதம் தான்முடி நேடிய பண்பராய்
யாதும் காண்பரிதாகி அலந்தவர்
ஓதும் நாமம் நமச்சிவாயவே.

விளக்கம்: தாமரை மலரில் வீற்றிருக்கின்ற பிரமனும், தாமரை மலர் போன்ற கண்களையுடைய திருமாலும், எல்லோருக்கும் தலைவரான சிவபெருமானின் திருமுடியையும், திருவடியையும் தேட முயன்று காண இயலாதவராகித் தம் செயலுக்கு வருந்திப் பின்னர் அவர்கள் நல்லறிவு பெற்று ஓதி உய்ந்தது “நமச்சிவாய” என்ற திருவைந்தெழுத்தேயாகும்.

பாடல் 10

கஞ்சி மண்டையர் கையில் உண் கையர்கள்
வெஞ்சொல் மிண்டர் விரவிலர் என்பரால்
விஞ்சை அண்டர்கள் வேண்ட அமுது செய்
நஞ்சுண் கண்டன் நமச்சிவாயவே.

விளக்கம்: தேவர்கள் வேண்ட நஞ்சினை உண்டு அதை கழுத்தில் தேக்கிய நீலகண்டனான சிவபெருமானின் திருநாமமாகிய “நமச்சிவாய” என்னும் திருவைந்தெழுத்து மந்திரத்தை, மண்டை என்னும் ஒருவித பாத்திரத்தில் கஞ்சியைக் குடிக்கும் வழக்கமுடைய பௌத்தர்களும், கைகளையே பாத்திரமாகக் கொண்டு அதில் உணவு ஏற்றுப் புசிக்கும் வழக்கமுடைய சமணர்களும் ஓதும் பேறு பெற்றிலர்.

பாடல் 11

நந்தி நாமம் நமச்சிவாய எனும்
சந்தையால் தமிழ் ஞானசம்பந்தன் சொல்
சிந்தையால் மகிழ்ந்து ஏத்த வல்லார் எலாம்
பந்த பாசம் அறுக்க வல்லார்களே.


விளக்கம்: நந்தி என்னும் பெயருடைய சிவபெருமானின் திருநாமமாகிய “நமச்சிவாய” என்னும் திருவைந்தெழுத்தைச் சந்தம் மிகுந்த தமிழ் கொண்டு ஞானசம்பந்தன் அருளிச் செய்த இத்திருப்பதிகத்தைச் சிந்தை மகிழ ஓத வல்லவர்கள் பந்தபாசம் அறுக்க வல்லவர் ஆவர். திருச்சிற்றம்பலம்.

 

Also, read


 

இதைப் பதிவேற்றியவர்..

Dineshgandhi

நான் தினேஷ், Aanmeegam.org வலைத்தளத்தின் நிறுவனர். 2018 ஆம் ஆண்டு Blogger மூலம் ஆரம்பித்து 2020 இல் WordPress-க்கு மாறினேன். ACCET, காரைக்குடியில் MCA முடித்துள்ளேன். 10 ஆண்டுகளுக்கும் மேல் அனுபவம் வாய்ந்த SEO நிபுணராகவும், ஆன்மிக பதிவாளராகவும் செயல்படுகிறேன்.

Read full bio →


2 thoughts on "நமச்சிவாயத் திருப்பதிகம் மூன்றாம் திருமுறை"

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

lord-subramanya
  • ஜூலை 15, 2025
ஸ்ரீ ஸூப்ரஹ்மண்ய பஞ்ச ரத்னம் (ஸ்ரீதர அய்யாவாள் அருளியது)
shani chalisa lyrics in english with meaning
  • ஜூலை 2, 2025
சனி சாலிசா: சனி பகவானின் அருளைப் பெறவும்
kolampakkam-agastheeshwarar-temple-entrance
  • ஜூன் 26, 2025
அருள்மிகு ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோவில், கொளப்பாக்கம்