×
Saturday 26th of July 2025

கோவில் மற்றும் பூஜைகளில் தேங்காய் உடைப்பது ஏன்?


Last updated on மே 27, 2025

thengai udaipathu yean

Thengai Udaipathu Yean

🛕 தேங்காய் உடைப்பதின் தத்துவம் “புண்ணியம் செய்வார்க்குப் பூவுண்டு நீருண்டு” என்பது திருமூலர் வாக்கு. புண்ணியம் என்பது இங்கே பூஜையை குறிக்கிறது. இறைவனை வழிபடப் பூவும், நீரும் போதும். ஆனால் இந்துசமயத்தில் பூஜையின் போது தேங்காய் இடம் பெற பல்வேறு காரணங்கள் உள்ளன. அவற்றை தெரிந்து கொள்வோம்:

சிவ அம்சம் நிறைந்த தேங்காய்

🛕 நம்முடைய வேண்டுதல் நிறைவேற கோவிலுக்கு சென்று தேங்காய் உடைத்து அர்ச்சனை செய்து இறைவனை வழிபடுகிறோம். விநாயகர் ஆலயத்தில் சூறைத்தேங்காய் உடைக்கிறோம். எதனால் இந்த வழிபாடு என்பதற்கான காரணம் வியப்பிற்குரியது. விநாயகர் ஒருமுறை தன் தந்தையிடம் உன் தலையை எனக்கு பலி கொடு என்று கேட்டாராம், இதன் காரணமாகவே தனது அம்சமாக மூன்று கண்களை கொண்ட தேங்காயை சிவன் படைத்தார் என்கிறது புராணக்கதை. இதன் காரணமாகவே வேண்டுதல் விரைவில் நிறைவேற பக்தர்கள் விநாயகருக்கு சிதறு தேங்காய் உடைக்கின்றனர்.

முக்கண் சிறப்பு

🛕 விநாயகருக்கும், சிவனுக்கும் மூன்று கண்கள் இருப்பதைப் போலத் தேங்காய்க்கும் மூன்று கண்கள் இருப்பது, அதற்குரிய மிக முக்கியமான சிறப்பு. வழிபாட்டுக்குப் பயன்பட இது முக்கிய காரணம். வழிபாட்டில் தேங்காயைப் பயன்படுத்த எந்தவித வரம்புகளும் இல்லை. இதனை இந்து சமயத்தவர் அனைவரும் பயன்படுத்துகின்றனர்.

Thengai Udaikkum Palan

தேங்காயை உடைத்தல்

🛕 பூஜை நேரத்தில் இறைவனின் திருமுன் தேங்காயை “உடைத்தல்” என்பது பழங்காலம் முதல் இருந்துவரும் ஒரு வழிபாட்டு முறை. தேங்காயை வணங்கி, அதைத் தீபம் அல்லது தூபத்தில் காட்டி, உடைத்து, அதன் குடுமியைக் களைந்து, எந்தக் குற்றமும் அதில் இல்லாமையை உணர்ந்து, வெண்பருப்பு இறைவனைத் தரிசிக்குமாறு வைத்து, அர்ச்சனை செய்து, கற்பூர தீப ஆராதனை காட்டுவது முறை. தேங்காயை உடைக்காமல், வழிபாடு பூரணமாவதில்லை; முழு நிறைவு பெறுவதில்லை.

🛕 தேங்காய் இறைவனுக்குரிய அர்ச்சனைப் பொருள். அழுகல் முதலிய எந்தக் குறையுமற்ற, கச்சிதமாக உடையக் கூடிய நெற்றுத் தேங்காயே வழிபாட்டிற்கு உகந்தது.

தேங்காய் உடைப்பதின் தத்துவம்

🛕 மக்கள் இரு கண்களுடன், நன்கு பக்குவப்பட்ட பின்னர் அகக்கண் அல்லது ஞானக் கண்ணைப் பெறுகின்றனர். பக்குவமுடைய மனமே இறைவனை வழிபடத்தக்கது. பக்குவ நிலையறிதல், தேங்காய்க்கும், மனத்திற்கும் பொது. பக்குவம் குலைந்தால் தேங்காயும், மனமும் அழுகிவிடும்.

🛕 தேங்காய்-மும்மலம்; நீர்-உயிர். தேங்காயின் மட்டை, நார், ஓட்டுப்பகுதிகள் என்ற மூன்றும் மும்மலங்கள் ஆகும். இவை படிப்படியே களையப்பட்டவுடன், இறுதியில் அகங்கார ஓடும் நொறுங்க, உடனே வெண்மைத் தூய்மை பிரகாசிக்கிறது. தேங்காய்-இதயம்; மூன்றாம் கண்-ஞானக் கண்; வெண்மை-சத்துவகுணம். “சத்துவ குணத்துடன் சஞ்சலமில்லாமல், ஞானக்கண்ணால் இறைவனைத் தரிசிக்கும்போது, தோன்றும் பக்தி உணர்வுகளை இதயம் உணர்கிறது.” என்ற உட்பொருளைத் தேங்காய் உணர்த்துகிறது.

எதிர்காலத்தை உணர்த்தும் தேங்காய்

🛕 பூஜையின் பயனையும், வாழ்வின் எதிர்கால நிகழ்வுகளையும் உடைந்த தேங்காயின் பகுதிகள் உணர்த்துகின்றன. அதனால்தான் வீட்டிலும், கோவிலிலும் தேங்காய் உடைக்கப்படும்போது, அது செம்மையாக உடைபட வேண்டும் என்று பக்தர்கள் ஆர்வத்துடனும், ஆசையுடனும், பக்தியுடனும் கவனிப்பார்கள்.

🛕 தேங்காய் ஒரே அடியில் இரு பகுதிகளாக உடைவது மிக நல்லது.உடைத்த தேங்காயில் பூ இருப்பதும், நூல் பிடித்தால் போல், சரிபாதியாக உடைவதும் மிகச்சிறப்பு. பகுதிகளில் ஏற்ற இறக்கம் இருப்பதால் தவறில்லை. தொட்டில் போல் உடைந்தால் மகப்பேறு கிடைக்கும். குடுமிப்பகுதி மற்ற பகுதியை விடச் சற்றுப் பெரிதாக உடைவது நல்லது. ஓடு சிதறி, முழுத் தேங்காய், கொப்பறையைப் போல விழுந்தால், அதைச் சரி பாதியாய்ப் பிளந்து படைக்கலாம். தேங்காய் நீரைப் பாத்திரத்தில் பிடித்து அதைத் தீர்த்தமாகப் பயன்படுத்தலாம். உடைந்த தேங்காய் மூடிகளை மீண்டும் இணைத்துப் பொருத்தக் கூடாது.

தவிர்க்க வேண்டியது

🛕 தேங்காய், ‘தேரை மோந்தும்’, அழுகியும் இருப்பது குற்றம். சிதறுகாய் போலத் தூள் தூளாக உடைவது குற்றம். குறுக்கில் உடையாமல் நெடுக்கில் உடைவது குற்றம். தேங்காய் நீர் நாறுவது குற்றம். தேங்காயை உடைக்கும்போது கை விட்டு நழுவி அப்பால் போய் விழுவது அபசகுனம். தேங்காய்ப் பிரசாதத்தை, உடைத்து அனைவருக்கும் தர வேண்டும். அல்லது சுத்தமான சைவ உணவு வகைகளைச் சமைக்கப் பயன்படுத்தலாம்.

சிதறு தேங்காய்

🛕 தேங்காய் சிதறித் தூளாகும்படி தரையில் அடிப்பது “சிதறு தேங்காய்.” சிதறிய தேங்காய்ப் பகுதிகளை, பலர் எடுத்துக் கொள்ளும்படி ‘கொள்ளை’விடுவது சூறைத் தேங்காய். நான்கு திசைகளிலும் சிதறும்படி தேங்காயை அடிப்பது சதுர்த்தேங்காய். தேங்காயைச் சூறை விட்டு, அர்ச்சனை செய்து வழிபடும் வழிபாடு விநாயகருக்கு மட்டுமே உரியது. இந்த வழிபாட்டு முறை தமிழகத்தில் மட்டுமே காணப்படுகிறது. விநாயகரிடம் பிரார்த்தனை செய்துகொண்டு சிலர் 108 தேங்காய்களைச் சூறை விடுவதுண்டு.

🛕 சிதறிய தேங்காய்ச் சிதறல்களைத் தொகுத்து எடுக்கும் உரிமை சிறுவர்களுக்கே உரியது. உண்மைதான். குழந்தைப் பிள்ளையாரின் பிரசாதத்தில் பிள்ளைக் குழந்தைகளுக்கல்லவா உரிமை இருக்க வேண்டும்?

அர்ப்பணிப்பு உணர்வு

🛕 சிதறுகாய் போடுவதால் அகங்காரம் நீங்குவதோடு, தியாகமும் நிறைவேறுகிறது. உடைக்கும் சிதறுகாயை எத்தனையோ பேர் எடுத்துச்செல்கின்றனர். இது தர்மம் செய்த புண்ணியத்திற்கு சமமானது. எனவே, இறைவன் திருமுன் அகங்கார மண்டையோடு உடைய வேண்டும்; அமுதமயமான அறிவு நீரை அர்ப்பணிக்க வேண்டும் என்பன சிதறு தேங்காய் உடைப்பதன் தத்துவம்.

இளநீர்

🛕 அரசு, ஆல், அத்தி, வில்வம், துளசி முதலியன தெய்வீக மூலிகைகள். இந்த வரிசையில் தென்னையும் சேரத்தக்கது. இளநீர் மருத்துவ குணமுடையது. சிறப்பாக மருந்து செய்ய ஓர் அடிப்படைப் பொருளாகத் செவ்விள நீர் திகழ்கிறது. இளநீர் உலகத்திலேயே மிகச் சுவையான, மிகத் தூய்மையான ஒரே நீர். இயற்கையின் வரப்பிரசாதம். இது அபிஷேகப் பொருள்களில் ஒன்று.

பற்றற்ற நிலை

🛕 அறவே நீரற்ற தேங்காய் கொப்பரையாகும். முற்றிய எல்லாத் தேங்காய்களும் கொப்பரையாவதில்லை. பல அழுகிவிடும். ஏதோ ஆயிரத்திலொன்று கொப்பரையாகலாம். நீர் வற்றி உள்ளேயே உலர்ந்த தேங்காய் கொப்பரையாகிறது. தேங்காய்ப் பருப்பு, அகப்பற்றான நீரை அகற்றிவிட்டது; அந்த நீரின் சுவையையும், சக்தியையும் பறித்துக் கொண்டது. புறப்பற்றான ஓட்டை விலக்கிவிட்டது; அதனோடு கொண்ட பற்றுத் தொடர்பினை முறித்துக் கொண்டது. கொப்பரையும் அதன் ஓடும் பற்றற்று விளங்குகின்றன. இந்தக் கொப்பரைத் தேங்காயைப் “பூரண ஆகுதி”யாகப் பயன்படுத்துகின்றனர்.

🛕 வேள்வியாகத்தில் பழங்கள், தானியங்கள், உணவுப் பொருள்கள், ஆடைகள் முதலிய பல பொருள்கள் சமர்ப்பிக்கப்படுகின்றன. முடிவாக, நிறைவாக, பூரணமாக ஒரு பட்டுத்துணியில் கொப்பரைத் தேங்காயைக் கட்டி அக்னியில் இடுகின்றனர். இளநீரை விட, தேங்காயை விட, கொப்பரைத் தேங்காயே அதன் பற்றற்ற நிலையின் காரணமாக “பூரண ஆகுதி” ஆகிற முழுத்தகுதியை பெறுகிறது.

🛕 இத்தகைய சிறப்பு வாய்ந்த தேங்காய் இறைவடிவமாகவே கருதப்படுகிறது எனவேதான், வழிபாட்டில் தேங்காய்க்கு முதலிடமும், முக்கிய இடமும் அளிக்கப்படுகிறது.

Also, read


 

இதைப் பதிவேற்றியவர்..

Dineshgandhi

நான் தினேஷ், Aanmeegam.org வலைத்தளத்தின் நிறுவனர். 2018 ஆம் ஆண்டு Blogger மூலம் ஆரம்பித்து 2020 இல் WordPress-க்கு மாறினேன். ACCET, காரைக்குடியில் MCA முடித்துள்ளேன். 10 ஆண்டுகளுக்கும் மேல் அனுபவம் வாய்ந்த SEO நிபுணராகவும், ஆன்மிக பதிவாளராகவும் செயல்படுகிறேன்.

Read full bio →


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

hindu-temple
  • ஜூலை 26, 2025
கோவிலுக்கு செல்லும்போது தெரிந்து கொள்ள வேண்டியவை
boy-baby-names-in-tamil
  • ஜூன் 19, 2025
ஆண் குழந்தை தமிழ்ப் பெயர்கள் [Boy Baby Tamil Names]
Aspicious Times
  • ஏப்ரல் 23, 2025
நல்ல நேரம், குளிகை, ராகு காலம், கௌரி நல்ல நேரம் & எமகண்டம்: ஒரு முழுமையான பார்வை