×
Saturday 26th of July 2025

முளைப்பாரி வழிபாடு


Last updated on மே 15, 2025

mulaipari festival in tamil

Mulaipari Festival in Tamil

முளைப்பாரி வழிபாடு

🛕 கிராமதேவதை வழிபாடு என்பது ஒவ்வொரு கிராமத்துக்கும் முக்கியமானது. அந்தந்த கிராமங்களை இயற்கைச் சீற்றங்களிலிருந்து பாதுகாத்து இயற்கை வளத்தைப் பெருக்குவது, இந்த கிராம தேவதைகளின் வழிபாட்டால் தான். அவற்றுக்கு நடைபெறும் திருவிழாவின் ஓர் அங்கமாக, அந்த கிராமத்தைச் சேர்ந்த சுமங்கலிப் பெண்களால் செய்யப்படுவது தான் முளைப்பாரி வழிபாடு.

Mulaipari Preparation in Tamil

🛕 கிராம தேவதைகளின் திருவிழா தொடங்கும் (கொடியேறும்) நாளன்று திருமணமான (குழந்தை பிறக்க தகுதி இருக்கும்) சுமங்கலிப் பெண்கள் ஒரு புதிய பானை அல்லது வாயகன்ற மண் பாத்திரத்தில் சத்தமான மண்ணை நிரப்பி, அதில் தட்டைப் பயிறு, சிறுபயிறு, பாசிப்பயறு, மொச்சைப்பயிறு, சோளம், கம்பு, பருத்தி போன்ற விதைகளை நெருக்கமாகத் தூவி, அதை வெயில் அதிகம் படாத ஒரு இடத்தில் (வீட்டிலுள்ள இருட்டு அறையில்) வைத்து, பானையில் இருக்கும் செடிகளுக்கு தினசரி நீர் ஊற்றி வளர்த்து வருவார்கள். இதனால் தூவப்பட்ட பயறு போன்ற விதைகள், மண்பானையில் நெருக்கமாக முளைத்து நீண்டு வளர்ந்து நிற்கும் இந்த முளைப்பாரி வளரும்போது ஒவ்வொரு நாளும் அது வளரும் வீட்டின் முன்னால், பெண்கள் வட்டமாக நின்று பாட்டுப் பாடி கும்மியடிப்பார்கள். இதனால் பயிர்கள் நன்கு வளரும். இதற்குத்தான் முளைப்பாரி எனப்பெயர்.

🛕 இவ்வாறு கிராமதேவதையின் திருவிழா கொடியேற்றம் நடக்கும் முதல் நாள் முதல், கொடி இறக்கும் பத்தாம் நாள் திருவிழா முடியும்வரை வளர்த்துவிட்டு, திருவிழா முடியும் நாளன்றோ அல்லது அதற்கு முன் நாளன்றோ, செடிகள் நிறைந்துள்ள அந்தப் பானையை ஊர்வலமாக கிராம தேவதை ஆலயத்துக்கு எடுத்துச் சென்று, கிராம தேவதைக்கு முன்னர் ஊர் நலத்தையும் தங்கள் குடும்ப நலத்தையும் வேண்டிக்கொண்டு, அந்த முளைப்பாரியை நீர்நிலைகளில் பாட்டுப்பாடி கரைத்துவிடுவார்கள். இதனால் இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்படாமல், தகுந்த காலத்தில் மறை பெய்து விவசாயம் நன்கு பெருகி கிராமம் சுபிட்சமாக இருக்கும். இதைச் செய்யும் பெண்கள் குடும்பத்திலும் அம்மன் அருளால் தக்க காலத்தில் குழந்தைகள் பிறந்து, வம்சம் வளர்ச்சியடையும்.

🛕 பொதுவாகவே, நாம் முக்கியமாக செய்யும் பல விதமான சடங்குகளிலும் பயிரிடுதல், செடி வளர்த்தல் மரம் வளர்த்தல் போன்றவை தவறாது இடம்பெறும். குறிப்பாக திருமணம், உபநயனம், ஆலய கும்பாபிஷேகம் போன்ற முக்கியமான நிகழ்ச்சிகளில், இந்த முளைப்பாரியைப் போன்றே, மண்ணாலான ஐந்து கிண்ணங்களில் (பாலிகைகளில்) மண்ணைப் பரப்பி, அந்த மண்ணில் விதைகளை விதைத்து, திருமணமான சுமங்கலிப் பெண்கள் மூலம் ஜலம் விட்டு வளர்க்கச் செய்து, அந்த மண் பாலிகைகளை, செடிகளை மங்கள நிகழ்ச்சிகள் முடியும் நாளன்று, நீர் நிலைகளில் பாட்டுப்பாடி கரைத்துவிட வேண்டும். இதனால் நிகழ்ச்சி தடங்கலின்றி நிறைவேறுவதுடன், மங்களமும் ஏற்படும் என்கிறது சாஸ்திரம். இதுவே முளைப்பாரி எனும் வேண்டுதல் நிகழ்ச்சியாக அமைந்துள்ளது.

முளைப்பாரி சடங்கில் பெண்கள்

🛕 முளைப்பாரி சடங்கில் பூப்பெய்திய வயதிலிருந்து குழந்தை பேற்றை இழக்கும் வயதுக்கு முன் உள்ள பெண் வரை முளைப்பாரி போடத் தகுதியானவர்களாக விளங்குகிறார்கள். மேலும் மாதவிலக்கு சமயத்திலுள்ள பெண்கள், புதியதாக திருமணம் செய்த பெண்கள் இந்த முளைப்பாரி சடங்கில் பங்கு பெறுவதில்லை. பெண்கள் முளைப்பாரி போடுவதற்கான காரணம் இவர்கள்தான் வளமையின் குறியீடாகத் திகழ்கின்றனர். எனவே பெண்கள் இதனைச் செய்கின்றனர்.

Mulaipari Poduvathu Eppadi in Tamil

🛕 முளைப்பாரி போடும் விதம்: முளைப்பாரி போட கொண்டு வந்து கொடுத்துள்ள சில்வர் குத்துச் சட்டிகளில் கரம்பையை நொருக்கி சட்டியின் அரையளவு போட்டு அதன் மேல் ஆட்டுப் புழுக்கையும், மாட்டுச் சாணத்தையும் நொறுக்கி பரவலாக தூவுவார்கள். தூவிய பின் தட்டாம் பயிறு, சிறுபயிறு, பாசிப்பயறு, மொச்சைப் பயிறு, சோளம், கம்பு, பருத்தி போன்ற விதைகளை ஊர் செழிப்பாக உள்ள காலத்தில் 21 வகையான விதைகளையும், செழிப்பு குறைந்த காலத்தில் 11 வகையான விதைகளையும் போடுகின்றனர். மேலும் சுரைவிதை, பூசணி விதை, புடலைவிதை, போன்ற விதைகளைப் போடுவதில்லை. படரும் விதைகளைப் போட்டால் மற்ற பயிர் வகைகளை வளரவிடாது படர்ந்துவிடும். எனவே, இந்த விதைகளைப் போடுவதில்லை. இது போன்ற விதைகளைத் தவிர்த்து மற்ற விதைகளை சாணங்களின் மேல் பரப்பி பின் அதன் மேல் நெருங்கிய சாணத்தை பரவலாகப் போடுவார்கள். இவ்வாறு செய்தவற்றை முளைப்பாரி என்கின்றனர். கோவில் தோன்றிய காலம் முதல் கடந்த 5 ஆண்டுக்கு முன்பு வரை ஓலைக் கொட்டான்களில் முளைப்பாரி போட்டு வந்தனர். நாகரீக மாற்றத்தின் காரணமாக 5 ஆண்டாக சில்வர் சட்டியில் முளைப்பாரி போட்டு வருகின்றனர்.

🛕 முளைப்பாரி போட்ட மறுநாளிலிருந்து முளைப்பாரி போட்ட வீட்டின் முன்பு வட்டமாக நின்று கும்மியடிக்கிறார்கள். இந்த கும்மி ஓசை எழும்புவது போல் முளைப்பாரியும் வெளிவரும் என்று கூறுகின்றனர். ஆகவேதான் பாடும்போது கும்மியடித்துக் கொண்டு பாடுகின்றனர். இப்பாடல்களில் மழை வளத்தையும், குழந்தை மற்றும் வளமான வாழ்க்கையும் தங்களுக்கு தர வேண்டும் என்பதாக கீழ்க்கண்டவாறு பாடுகின்றனர்:

Mulaipari Padal

“பூக்காத மரம் பூக்காதோ – நல்ல
பூவுல வண்டு விழாதோ
பூக்க வைக்கும் காளியம்மனுக்கு
பூவால சப்பரம் சோடனையாம்
காய்க்காத மரம் காய்க்காதோ
காயில வண்டு விழாதோ
காய் காய்க்க வைக்கும் காளியம்மனுக்கு
காயால சப்பரம் சோடனையாம்”

🛕 என்றவாறு பூக்காத மரம் பூக்க வேண்டும், காய்க்கத மரம் காய்க்க வேண்டும் என்று பாடுவது தாவரச் செழிப்பை வேண்டி பாடுவதாகவும், முளைப்பாரி நன்கு வளர்வது போன்று அந்த ஆண்டு வேளாண்மைப் பயிர்களும் நன்கு வளர்ந்து நல்ல விளைச்சலைக் கொடுக்கும் என்று நம்புகின்றனர்.

முளைப்பாரியின் முடிவு

🛕 கோவில் நிறைவு நிகழ்ச்சியாக முளைப்பாரியினை அவ்வூர் பொதுக் கிணற்றில், குளத்தில், நீர் நிலைகளில் முளைப்பாரி போட்ட பெண்கள் போடுகின்றனர். அப்போது பெண்கள்,

“வாயக் கட்டி வயித்தக்கட்டி
வளர்த்தேன்ம்மா முளைய – இப்ப
வைகாசி தண்ணியில
போரேயம்மா முளைய”

என்று பாடிக் கொண்டு முளைப்பாரியை போடுகின்றனர்.

🛕 முளைப்பாரியை நீர் நிலைகளில் போடுவதற்கான காரணம் பயிர் வகைகள் ஒரு பருவத்தில் அழிந்து மறுபருவத்தில் துளிர் விடுவதின் குறியீடாக முளைப்பாரியை நீர் நிலைகளில் போடுகின்றனர் என்பதனை அறிய முடிகிறது.

🛕 இம்மை வாழ்வில் தீமை வராமல் மென்மேலும் செழுமை ஓங்குவதற்காக செய்யப்படுவதே முளைப்பாரியாகும். மேலும் முளைப்பாரி சடங்கு செய்வதால் கன்னிப் பெண்களுக்கு திருமணம் விரைவில் நடைபெறும். குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு குழந்தைப்பேறு கிடைக்கும். இதனால் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே உள்ள இறுக்கம் குறைந்து குடும்பம் மகிழ்ச்சியில் செழித்து ஓங்க வழிவகுப்பதின் அடித்தளமே இந்த முளைப்பாரி.

Also, read


 

இதைப் பதிவேற்றியவர்..

Dineshgandhi

நான் தினேஷ், Aanmeegam.org வலைத்தளத்தின் நிறுவனர். 2018 ஆம் ஆண்டு Blogger மூலம் ஆரம்பித்து 2020 இல் WordPress-க்கு மாறினேன். ACCET, காரைக்குடியில் MCA முடித்துள்ளேன். 10 ஆண்டுகளுக்கும் மேல் அனுபவம் வாய்ந்த SEO நிபுணராகவும், ஆன்மிக பதிவாளராகவும் செயல்படுகிறேன்.

Read full bio →


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

july-month-hindu-festivals
  • ஜூன் 30, 2025
ஜூலை 2025 மாதத்தில் வரும் முக்கிய இந்து பண்டிகைகள் மற்றும் விரத தினங்கள்
boy-baby-names-in-tamil
  • ஜூன் 19, 2025
ஆண் குழந்தை தமிழ்ப் பெயர்கள் [Boy Baby Tamil Names]
june-2025-hindu-festivals-and-vratams
  • மே 27, 2025
ஜூன் 2025 மாதத்தில் வரும் முக்கிய இந்து பண்டிகைகள் மற்றும் விரத தினங்கள்