- பிப்ரவரி 6, 2026
Last updated on மார்ச் 4, 2026
தென்னிந்தியாவின் கும்பமேளா என்றழைக்கப்படும் மகாமகம் / மாசி மகத் திருவிழா மாசி மாதத்தில் பௌர்ணமியுடன் சேர்ந்து வரும் மகம் நட்சத்திரம் (குரு சிம்மராசியில் இருக்கும் போது) வரும் நாள் மகாமகம் அல்லது மாசிமகம் என்றழைக்கப்படுகிறது.
இந்த மாசிமகத் திருவிழா உலகில் வாழும் தமிழர்கள் அனைவராலும் கொண்டாடப்படுகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் கும்பேசுவரர் கோவிலில் ஆண்டுதோறும் பெரு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
வருடாவருடம் நடக்கும் மகாமகத் திருவிழாவில் – கும்பகோணத்தில் மட்டும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். அதுவே பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் மாசிமகத் திருவிழாவில் ஏறக்குறைய 20 லட்சம் பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.
இந்த ஆண்டு மாசி மகம் விழா மாசி – 18 (மார்ச் 02) 2026 (திங்கள்) அன்று கொண்டாடப்படுகிறது.
மாசி மாதம் என்பது வழிபாட்டிற்கு உகந்த மாதங்களில் ஒன்றாகும். “மகம்” நட்சத்திரத்திற்கு அதிபதி “கேது” பகவான், பித்ருக்களுக்கு அதிபதி “பித்ரு தேவர்கள்”. எனவே, இந்நாளில் செய்யப்படும் வழிபாடுகள் முன்னோர்களின் ஆசியையும், பாவ விமோசனத்தையும் பெற்றுத்தரும்.
மாசி மகத்தன்று சந்திரன் மகம் நட்சத்திரத்திலும், சூரியன் கும்ப ராசியிலும் சஞ்சரிக்கின்றனர். இந்த கிரக நிலைகளால் பூமியின் நீர்நிலைகளில் ஒருவித நேர்மறை காந்த அதிர்வுகள் ஏற்படுவதாக ஆன்மீக ரீதியாக நம்பப்படுகிறது. இதனாலேயே அன்று ஆற்று நீரிலோ அல்லது கடல் நீரிலோ நீராடுவது நம் உடலில் உள்ள எதிர்மறை ஆற்றலை நீக்கி, புத்துணர்ச்சியைத் தருகிறது.

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகாமகம் உலகப்புகழ் பெற்றது. வருடாவருடம் நடக்கும் மாசி மகத்தன்று கும்பகோணம் கும்பேசுவரர் கோவில் தீர்த்தவாரியில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு புனித நீராடுகின்றனர்.
பித்ருக்களுக்கு (முன்னோர்களுக்கு) தர்ப்பணம் கொடுக்க ஆடி மற்றும் தை அமாவாசை எவ்வளவு முக்கியமோ, அதைவிடவும் பல மடங்கு பலன் தரக்கூடியது மாசி மகம். இந்நாளில் புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவது நம் ஏழு ஜென்ம பாவங்களை நீக்கும் என்பது நம்பிக்கை.
வருண பகவான் விமோசனம்: ஒருமுறை பிரம்மஹத்தி தோஷத்தால் பாதிக்கப்பட்ட வருண பகவான், கடலுக்கடியில் ஒளிந்திருந்தார். சிவபெருமான் அவரை விடுவித்து தோஷ நிவர்த்தி செய்த நாளே மாசி மகம்.
சக்தி தேவியின் அவதாரம்: பார்வதி தேவி, தட்சனின் மகளாக “தாட்சாயிணி” என்ற பெயரில் மாசி மக நட்சத்திரத்தில் அவதரித்ததாக கந்தபுராணம் கூறுகிறது. எனவே இது அன்னை வழிபாட்டிற்கு உகந்த நாளாகிறது.
அண்ணாமலையார் நீத்தார் கடன்: திருவண்ணாமலை அரசன் வல்லாள மகாராஜாவிற்கு வாரிசு இல்லாததால், சிவபெருமானே மகனாக வந்து மாசி மகத்தன்று அரசனுக்கு நீத்தார் கடன் (சிரார்த்தம்) செய்ததாக வரலாறு கூறுகிறது.
புண்ணிய நதிகளுக்கோ அல்லது கடலுக்கோ சென்று நீராட முடியாதவர்கள், வீட்டிலேயே கீழ்க்கண்ட முறையில் வழிபாடு செய்யலாம்:
மாசி மகம் என்பது வெறும் திருவிழா மட்டுமல்ல, அது நம் ஆன்மாவைத் தூய்மைப்படுத்தும் ஒரு புண்ணிய நாள். இந்நாளில் இயன்றவரை ஏழைகளுக்கு அன்னதானம் அல்லது வஸ்திர தானம் செய்து இறைவனின் அருளைப் பெறுவோம்.