- அக்டோபர் 25, 2025
| சிவஸ்தலம் பெயர் | அருள்மிகு நவநீதேஸ்வரர் திருக்கோவில் |
|---|---|
| மூலவர் | நவநீதேஸ்வரர், வெண்ணைப்பிரான் |
| அம்மன்/தாயார் | வேல்நெடுங்கண்ணி, சக்தியாயதாட்சி |
| தல விருட்சம் | மல்லிகை |
| தீர்த்தம் | க்ஷீரபுஷ்கரணி, பாற்குளம் |
| புராண பெயர் | மல்லிகாரண்யம், திருச்சிக்கல் |
| ஊர் | சிக்கல் |
| மாவட்டம் | நாகப்பட்டினம் |
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
தமிழகத்தின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ள அருள்மிகு வேல்நெடுங்கண்ணி அம்மன் சமேத நவநீதேஸ்வரர் திருக்கோவில், சிக்கல், சைவ சமயத்தின் புகழ்பெற்ற தலங்களில் ஒன்றாகும். இக்கோவில் வெண்ணையால் உருவான சுயம்பு சிவலிங்கத்தைக் கொண்டது மட்டுமல்லாமல், சிங்காரவேலவர் எனப்படும் முருகப்பெருமானுக்கு வேல் வழங்கிய தலமாகவும், ஐப்பசி சூரசம்ஹாரத்தில் வியர்வை சிந்தும் அதிசயத்தைக் கொண்ட தலமாகவும் பிரசித்தி பெற்றது. தேவாரப் பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் இது 83வது தலமாக உள்ளது. கோச்செங்கட் சோழன் கட்டிய 72 மாடக்கோயில்களில் இதுவும் ஒன்று.

புராணக் காலத்தில் மல்லிகாரண்யம் என அழைக்கப்பட்ட இத்தலத்தில் வசிஷ்ட முனிவர் ஆசிரமம் அமைத்து சிவனை வழிபட்டார். தேவலோகப் பசு காமதேனு, பஞ்ச காலத்தில் மாமிசம் உண்டதால் சாபமடைந்து புலி முகமுடையதாக மாறியது. சிவன் அறிவுறுத்தலின்படி, இத்தலத்திற்கு வந்து பாற்குளம் (க்ஷீரபுஷ்கரணி) எனும் தீர்த்தத்தில் நீராடியது. அதன் மடியில் பால் பெருகி குளம் பால் நிறைந்தது. வசிஷ்டர் அப்பாலை வெண்ணையாகத் திரண்டு உருவானதில் சிவலிங்கம் செய்து பூஜித்தார். பூஜை முடிந்து லிங்கத்தை எடுக்க முயன்றபோது, அது கையில் ஒட்டிக்கொண்டு “சிக்கல்” ஏற்பட்டது. இதனால் இவ்வூர் சிக்கல் எனப் பெயர் பெற்றது. வெண்ணையால் உருவான இறைவன் வெண்ணைப்பிரான் அல்லது நவநீதேஸ்வரர் என அழைக்கப்படுகிறார்.


இத்தலத்தின் முதன்மை அதிசயம், ஐப்பசி கந்தசஷ்டியில் சிங்காரவேலர் வேல் வாங்கியவுடன் வீராவேசத்தில் வியர்வை சிந்துவது. பட்டுத்துணியால் துடைத்தாலும் முத்து முத்தாக வியர்வைத் துளிகள் தோன்றும். இதனால் “சிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் சம்ஹாரம்” எனும் பழமொழி பிரசித்தம். அம்பாள் வேல்நெடுங்கண்ணி எனப்படுவது, முருகனுக்கு சக்தி வேலாக வழங்கியதால். இத்தலம் அம்மனின் 51 சக்தி பீடங்களில் ஒன்று.

மற்ற சிறப்புகள்:
கோலவாமனப்பெருமாள்: வாமன அவதாரத்தில் மகாபலியை அழிக்கும் சக்தி பெற, இத்தல சிவனை வழிபட்டு ஆற்றல் பெற்றார். ஸ்ரீதேவி, பூமாதேவி சகிதம் நின்ற கோலத்தில் தனிச் சந்நிதியில் அருள்பாலிக்கிறார்.
கோச்செங்கட் சோழன் கட்டிய மாடக்கோவில். 7 நிலை, 80 அடி உயர ராஜகோபுரம் முன்புறம் இரும்புத்தூண் கல்யாண மண்டபம். உள்ளே கார்த்திகை மண்டபம், தெற்கே விநாயகர், வடக்கே தண்டபாணி. இரண்டாம் சுற்றில் சனீஸ்வரர், தட்சிணாமூர்த்தி, திருமகள், துர்க்கை, சண்டீசர், நவக்கிரகம்.
மையத்தில் 12 படிகள் கொண்ட கட்டுமலை மேல்:

கீழ்ப்பகுதியில் வேல்நெடுங்கண்ணி சந்நிதி (மேல்பகுதியில் வேல் தரும் சிற்பம்). வடக்குச் சுற்றில் கோலவாமனப்பெருமாள் தனிக்கோயில். வடமேற்கு மூலையில் ஆஞ்சனேயர் சந்நிதி. எட்டுக்குடி, எண்கண், சிக்கல் முருகர் மூர்த்திகள் ஒரே சிற்பியால் வடிக்கப்பட்டவை என்பர்.
திருஞானசம்பந்தர் பாடிய பதிகம் 2வது திருமுறையில் இடம்பெற்றுள்ளது:
மடங்கொள் வாளைகுதி கொள்ளும் மணமலர்ப் பொய்கைசூழ்
திடங்கொள் மாமறையோரவர் மல்கிய சிக்கலுள்
விடங்கொள் கண்டத்து வெண்ணெய்ப் பெருமானடி
மேவிய அடைந்துவா மும்மடி யாரவர் அல்லல் அறுப்பரே.
கஷ்டங்கள் தீர, பிரார்த்தனை செய்கின்றனர். நிறைவேறியதும் அமாவாசை, பவுர்ணமியில் உச்சிகால பூஜையில் வெண்ணெய் சாற்றி அர்ச்சனை. “சத்ரு சம்ஹார திரி சதை” அர்ச்சனை செய்தால் எதிரிகள் தொல்லை விலகும்.
காலை 05:00 மணி முதல் 12:00 மணி வரை, மாலை 04:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை. பிரதோஷம் மற்றும் பண்டிகை நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

சிக்கல் சிங்காரவேலவர் திருக்கோவிலுக்கு எப்படிச் செல்வது?
நாகப்பட்டினத்தில் இருந்து மேற்கே 5 கி.மீ. தொலைவில் திருவாரூர் செல்லும் சாலையில் சிக்கல் உள்ளது.
அருள்மிகு நவநீதேஸ்வரர் திருக்கோவில்,
சிக்கல் அஞ்சல்,
நாகப்பட்டினம் மாவட்டம்,
PIN – 611108.
தொடர்பு எண்கள்: 📞 +91-4365-245452, +91-4365-245350