×
Saturday 26th of July 2025

நந்தீஸ்வரர் விதவிதமாய் அமர்ந்தருளும் திருத்தலங்கள்


Last updated on ஜூன் 1, 2025

nandeeswarar temples around india in tamil

Nandeeswarar Temples around India in Tamil

நந்தீஸ்வரர் திருத்தலங்கள்

🌹 சிவாலயத்திற்குள் நுழைந்ததும் விநாயகப் பெருமானை வழிபட்டு, கொடிமரத்திற்கு வணக்கம் செலுத்திவிட்டு, நந்தியெம்பெருமானை வேண்டிக் கொண்ட பின் சிவபெருமானை வழிபட வேண்டும் என்பது விதியாகும்.

🌹 கொடிமரத்திற்கும் நந்திக்கும் இடையில் நந்தியின் பின்புறம் இருந்து இறைவனை நோக்கி வழிபடவேண்டும். இந்த நந்தியை அதிகார நந்தி என்பர். இவர் பூவுலகில் கடுமையாக தவம் செய்து பதினாறு வரங்களைப் பெற்றவர்; சிவகணங்களின் தலைவர்.

🌹 சிவாலயங்களில் கொடி மரத்திற்குப் பக்கத்தில் இருக்கும் அதிகார நந்தியை அடுத்த படியாக ஒரு நந்தி காட்சி தரும். அது மால்விடை எனப்படும் விஷ்ணு நந்தி.

🌹 திரிபுர சம்ஹார காலத்தில் திருமால் நந்தி வடிவம் எடுத்து சிவனைத் தாங்கினார் என்பது புராணம். கொடிமரம் இல்லாத கோவில்களில் சிவனை நோக்கி ஒரு நந்தி காட்சி தருவார். இவரை பிராகார நந்தி என்பர்.

🌹 சிவபெருமானுக்கு அருகில் நெருக்கமாக இருக்கும் நந்தி தர்ம நந்தி எனப்படுவார்.

🌹 இந்த நந்தியின் மூச்சுக்காற்று சுவாமியின் மீது பட்டுக்கொண்டேயிருக்கும். அதனால் நந்திக்கும் சுவாமிக்கும் இடையே செல்லக்கூடாது என்று சாஸ்திரம் சொல்லும். பழமையான சிவாலயங்களில் அதிகபட்சம் ஒன்பது நந்திகள் இருக்கும்.

🌹 அவை பத்ம நந்தி, நாக நந்தி, விநாயக நந்தி, மகா நந்தி, சோம நந்தி, சூரிய நந்தி, கருட நந்தி, விஷ்ணு நந்தி, சிவ நந்தி என்பனவாகும். இந்த ஒன்பது நந்திகளையும் நந்தியால், ஸ்ரீசைலம் ஆகிய திருத்தலங்களில் தரிசிக்கலாம்.

🌹 சிவபெருமானைப் பார்த்துக் கொண்டிருக்கும் நந்தியானவர் சிலதிருத்தலங்களில் சிவபெருமானை நோக்காமல், கோவில் வாயிலைப் பார்த்தபடி இருப்பதைக் காணலாம். திருவண்ணாமலையை வலம் வரும்போது அஷ்ட லிங்கங்களைத் தரிசிக்கலாம்.

🌹 அங்குள்ள நந்திகள் அனைத்தும் கருவறையில் அருள் புரியும் சிவலிங்கத்தைப் பார்க்காமல், திருவண்ணாமலையைப் பார்த்த வண்ணம் இருப்பதைக் காணலாம். திருவண்ணாமலையே சிவரூபமாக இருப்பதால் இந்தக் கோலம் என்பர்.

🌹 நந்தனார் தாழ்ந்த குலத்தில் பிறந்தவராததால் அவரை அந்தக் காலத்தில் கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கவில்லை. நந்தனார் கோவிலுக்கு வெளியே இருந்து சிவபெருமானைத் தரிசிக்க விரும்பினார். அதற்கு நந்தி இடையூறாக இருந்தது. நந்தனார் சிவபெருமானை வேண்டிட, இறைவனின் திருவருளால் நந்தனார் ஈசனைத் தரிசிப்பதற்கு ஏதுவாக நந்தி இருந்த இடத்திலிருந்து சற்று விலகி அமர்ந்தார். திருப்புள்ளார் என்னும் இந்தத் தலத்தில் ஏழு அடி உயரமுள்ள நந்தி சிவபெருமான் சந்நிதிக்கு நேராக இல்லாமல் சற்று விலகி இருப்பதைக் காணலாம்.

🌹 இதேபோல் பட்டீஸ்வரம் சிவாலயத்திற்கு ஞானசம்பந்தர் வெயிலில் வருவதைக் காணப்பெறாத இறைவன் தன் முத்துக் குடையைக் கொடுத்து அனுப்பினார்.

🌹 ஞானசம்பந்தரின் துன்பம் தாளாத இந்தக் கோவில் நந்திகள் அனைத்தும் ஞானசம்பந்தர் சிவபெருமானை நன்கு தரிசிக்கும் வண்ணம் சற்று நகர்ந்தே இருக்கும். இதேபோல் நந்தி விலகியிருக்கும் தலங்கள் திருப்புன்கூர், திருப்பூந்துருத்தி ஆகியவையாகும்.

🌹 சற்று வித்தியாசமான கோலத்தில் புறமுதுகைக் காட்டிக் கொண்டிருக்கும் நந்தியையும் சில தலங்களில் தரிசிக்கலாம். வட ஆற்காடு மாவட்டத்தில் உள்ள திருவல்லம் திருத்தலத்தில் இறைவன் வில்வநாதேஸ்வரர், இறைவி தனுமத்யாம்பாள் அருள் புரிகிறார்கள். இங்குள்ள நந்தி சுவாமியை நோக்கி இல்லாமல் நின்ற நிலையில் புறமுதுகு காட்டி காட்சிதருகிறார்.

🌹 இதற்குக் காரணம், ஒருமுறை கோவில் குருக்கள் சுவாமிக்கு அபிஷேகத் தீர்த்தம் எடுத்து வரும்போது கஞ்சன் என்ற அரக்கன் இடையூறு செய்தான். குருக்கள், சுவாமியிடம் முறையிட, சுவாமி நந்தியைப் பார்த்து கஞ்சனைக் கவனிக்கும்படி சொன்னார்.

🌹 நந்தியிடம் அடிபட்ட கஞ்சன், “இனிமேல் குருக்களுக்குத் தொந்தரவு கொடுக்க மாட்டேன்” என்று சத்தியம் செய்து கொடுத்துவிட்டு உயிர் தப்பினான். இருந்தாலும் அவன் மீண்டும் தொந்தரவு கொடுக்காமலிருக்க கோவிலின் வாயிலை நோக்கிய வண்ணம் இறைவனுக்கு புறமுதுகுகாட்டிய நிலையில் உள்ளார்.

🌹 கும்பகோணம் அருகில் திருவைகாவூர் திருத்தலம் உள்ளது. இத்தலம் சிவராத்திரித் தலமாகக் கருதப்படுகிறது. இத்தல இறைவன் வில்வவனேஸ்வரர்;

🌹 அம்பாள் சர்வஜனரட்சகி. சிவபக்தனான வேடன் ஒருவன் கோவிலுக்குள் ஈசனை வணங்கிக் கொண்டிருக்கும் போது, அவன் உயிரைப் பறிக்க யமன் வந்தான். சிவாலயத்திற்குள் யமன் நுழைவதைக் கண்ட நந்தியும் துவார பாலகர்களும் தடுக்க, யமன் திரும்பிச் சென்று விட்டான். மீண்டும் யமன் கோவிலுக்குள் வராமல் தடுக்க நந்தியெம்பெருமான் இங்கு வாயிலை நோக்கி உள்ளார்.

🌹 விருத்தாசலத்திற்கு மேற்கே பதினைந்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது பெண்ணாடகம். இத்தலத்தில் அருள்பாலிக்கும் சுவாமி சுடர் கொழுந்தீசர்; அம்பாள் கடந்தை நாயகி. ஒரு சமயம் பெண்ணாடகத்தில் கடும் மழை தொடர்ந்துபெய்து ஊரைச் சுற்றி வெள்ளம் சூழ்ந்தது. அந்த ஊர்மக்கள் இறைவனை வேண்டவே, இறைவன் நந்தியிடம் வெள்ளத்தை உறிஞ்சி மக்களைக் காப்பாற்றும் படி ஆணையிட்டார்.

🌹 உடனே நந்தியெம்பெருமான் கிழக்குப் பக்கமாகத் திரும்பி மழையால் ஏற்பட்ட வெள்ள நீரைக் குடித்து மக்களைக் காப்பாற்றினார். அன்றிலிருந்து நந்தி சிவபெருமானுக்கு புறமுதுகு காட்டிக் கொண்டு வாசலைநோக்கி உள்ளார்.

🌹 சென்னைக்கு அருகில் உள்ள வடதிருமுல்லை வாயில் திருத்தலத்தின் இறைவன் மாசிலா மணீஸ்வரர்; இறைவி கொடியிடை நாயகி. இத்தலத்தினை ஆட்சி புரிந்து வந்த தொண்டைமான் சிவபக்தன். இந்த மன்னனை அழிக்க அரக்கர்கள் படையெடுத்து வரவே, மன்னன் இறைவனிடம் வேண்டினான். உடனே இறைவன் நந்தியெம் பெருமானை அனுப்பினார். நந்தி, அரக்கர்களை ஓட ஓட விரட்டி அடித்தார். அரக்கர்கள் மீண்டும் திரும்பி வராமலிருக்க போருக்கு ஆயத்தமான நிலையில் வாயிலை நோக்கிய வண்ணம் நந்தி காட்சி தருகிறார்.

🌹 காஞ்சியிலிருந்து முப்பது கிலோமீட்டர் தூரத்தில் செய்யாறு அருகில் திருவோத்தூர் திருத்தலம் உள்ளது. இத்தலத்து இறைவன், தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் வேதத்தை உபதேசிக்கும் வேளையில் இவர்கள் கவனம் சிதறாமல் இருப்பதற்கும் மற்றவர்கள் உள்ளே நுழையாமலிருக்கவும் வாயிலை நோக்கித் திரும்பிய நிலையில் உள்ளார் நந்தி.

🌹 ஆந்திர மாநிலத்தில் உள்ள சுருட்டப்பள்ளி சிவராத்திரித் தலம் என்று போற்றப்படுகிறது. இங்கு அருள்புரியும் சிவபெருமான் ஆலகால விஷம் உண்டதால் மயங்கிய நிலையில் அம்பாளின் மடியில் பள்ளி கொண்டுள்ளார். இங்கு நந்தியெம்பெருமான் எதிரில் இல்லாமல் தலைப்பக்கம் உள்ளார்.

🌹 கர்நாடக மாநிலத்தில் உள்ள நஞ்சன்கூடு என்ற தலத்தில் உள்ள நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் நந்தியானவர் வாயிலை நோக்கி உள்ளார். இறைவனை வழிபட வருபவர்களை மனசுத்தி உள்ளவர்களாக மாற்றி, முகர்ந்து அனுப்புவதாக ஐதீகம்.

🌹 குடந்தை நாகேஸ்வரம் கோவிலுக்கு ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள தேப்பெருமாநல்லூர் விஸ்வநாதசுவாமி கோவிலில் உள்ள நந்திக்கு வலது காது இருக்காது. காரணம், பிரளய காலத்தில் சிவபெருமான் எழுந்தருளிய தலத்தைத் தேடி ஓடிவந்ததில், ஒரு பக்கமாக வழுக்கி விழுந்து வலது காது பழுதடைந்து போனது. எனவே இவர் வலது காது இல்லாமல் காட்சி தருகிறார்.

🌹 இதுபோல் வித்தியாசமான தோற்றத்தில் காட்சி தரும் நந்தீஸ்வரர் அருள்புரியும் சிவன் கோவில்கள் மிகவும் போற்றப்படுகின்றன.

🌹 சிவராத்திரியின் போதும் பிரதோஷ காலத்தின் போதும் இறைவனுடன் அங்கு அருள்பாலிக்கும் நந்தீஸ்வரரையும் வழிபட்டால் வாழ்வில் வசந்தம் வீசும் என்பர்.

 

Also, read

இதைப் பதிவேற்றியவர்..

Dineshgandhi

நான் தினேஷ், Aanmeegam.org வலைத்தளத்தின் நிறுவனர். 2018 ஆம் ஆண்டு Blogger மூலம் ஆரம்பித்து 2020 இல் WordPress-க்கு மாறினேன். ACCET, காரைக்குடியில் MCA முடித்துள்ளேன். 10 ஆண்டுகளுக்கும் மேல் அனுபவம் வாய்ந்த SEO நிபுணராகவும், ஆன்மிக பதிவாளராகவும் செயல்படுகிறேன்.

Read full bio →


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

thimiri-kumaragiri-murugan-temple-entrance
  • ஜூலை 21, 2025
குமரகிரி முருகன் கோவில், திமிரி: ஒரு சக்தி வாய்ந்த மலைக்கோவில்
nitya-kalyana-perumal-temple-tiruvidandhai
  • ஜூலை 12, 2025
அருள்மிகு நித்ய கல்யாணப் பெருமாள் கோவில், திருவிடந்தை
kolampakkam-agastheeshwarar-temple-entrance
  • ஜூன் 26, 2025
அருள்மிகு ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோவில், கொளப்பாக்கம்