×
Friday 25th of July 2025

ஞான ஒளிகள்: மகான்களின் பொன்மொழிகள்


Last updated on ஜூன் 24, 2025

The sayings of the saints

கடவுளைப் பற்றிய பல்வேறு மகான்களின் பொன்மொழிகளை இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம். அவர்களின் ஞானம் மிகுந்த வார்த்தைகள் நம் வாழ்க்கைக்கு வழிகாட்டியாக அமையட்டும்.

ராஜாஜி அவர்கள் கூறுகிறார்

குடிப்பதற்கு நீர் எடுக்கும்போது, தெளிந்த நீரை மேலோட்டமாக எடுப்பதே சிறந்தது. குளத்தில் இறங்கி கலக்கினால் சேறுதான் மேலே வரும். அதுபோல, பக்தியிலும் மிதமான நிலை சிறந்தது. அளவு கடந்த சமய அறிவும், பிறருடன் வாதம் புரிவதும் மனதை குழப்பிவிடும். நம் அறிவு சிறியது, கடவுளோ பேரறிவாளி. நம் சிற்றறிவால் அவரை அளக்க முடியாது. தயிரில் மறைந்திருக்கும் வெண்ணெயைப் போல கடவுள் நம் உள்ளத்தில் இருக்கிறார். அவரை உணர பக்தியால் உள்ளத்தைக் கடைய வேண்டும். தத்துவ ஞானம் வளர்த்தால் புலமை வளருமே தவிர ஞானம் உண்டாகாது. பக்தியில் உறுதியாக நிலைத்து, எளிய தியானம் செய்து, மனம் ஒன்றி இறைவனை வழிபடுங்கள். நிச்சயம் கடவுளின் பூரண அருளைப் பெறுவீர்கள்.

ரமண மகரிஷி அவர்களின் போதனைகள்

அருளின் உயர்ந்த வடிவம் மௌனம். வலிமையற்ற மனம் படைத்தவர்களால் மௌனமாக இருக்க முடியாது. “நான் யார்?” என்று உங்களையே கேளுங்கள். பதிலைத் உங்களுக்குள்ளேயே தேடுங்கள். இதுவே பிறவியைத் தவிர்க்கும் வழி. குப்பையை ஆராய்வதால் பயனில்லை. அதுபோல, பிரபஞ்சத்தை ஆராய்ந்தாலும் பயனில்லை. நமக்குள் இருந்து இயக்கும் ஆண்டவனைத் தேடுங்கள். இறைவன் நமக்குள் இருக்கிறான் என்று உணர்ந்தவர்கள் தவறு செய்வதில்லை. செய்தாலும் வருந்தி திருத்திக் கொள்வார்கள். அகந்தை இருக்கும் இடத்தில் ஆண்டவன் ஒரு நொடிகூட இருக்க மாட்டான். “நான்”, “எனது” என்று எண்ணுபவர்கள் இறைவனை அடையவே முடியாது. ரயில் ஓடும்போது சுமையை நாம் தூக்க வேண்டியதில்லை. அதுபோல, ஆண்டவனிடம் நம்மை ஒப்படைத்தபின் உலகியல் பிரச்சனைகள் நம்மைத் தீண்டாது. அரைகுறையாக ஆண்டவனை நம்புவதால் பயனில்லை. முழுமையான சரணாகதி அடைந்தால் மட்டுமே அவன் பார்வை நம்மீது விழும்.

காஞ்சிப் பெரியவரின் அருள்மொழிகள்

உபநிடதம் நம்மை குழந்தையாக இருக்கச் சொல்கிறது. குழந்தையின் மனதில் கள்ளம் கபடம் இல்லை. தேவைகளை அதிகரிப்பதால் திருப்தி பெற முடியாது. தேவையானதை மட்டும் வாங்குவது நல்லது. மனம் எதை தீவிரமாக நினைக்கிறதோ அதுவாகவே மாறும். அதனால் தூய்மையான, உயர்ந்த சிந்தனைகளை மட்டும் நினையுங்கள். எடுத்துச் சொல்வதை விட, எடுத்துக்காட்டாக வாழ்வதே அதிக சக்தி வாய்ந்தது. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் கடவுளே இருக்கிறார். ஒருவரை வணங்கும்போது அவருக்குள் இருக்கும் கடவுளையே வழிபடுகிறோம். சுவரில் எறிந்த பந்து திரும்பி வருவது போல, நிறைவேறாத ஆசைகள் கோபமாகத் திரும்பி நம்மைத் தாக்கும். ஓடி ஓடி சம்பாதித்தாலும் மறுபிறவிக்கு அவை துணை வராது. நியாயமான வழியில் பொருள் தேடி தேவைகளை நிறைவேற்றி மகிழுங்கள். பொம்மலாட்டப் பொம்மை போல சகல உயிர்களுக்கும் உள்ளிருந்து கடவுளே அவற்றை ஆட்டி வைக்கிறார். வழியில் கிடக்கும் முள்ளையோ, கண்ணாடியையோ அகற்ற பணம் தேவையில்லை. சிறிய உதவிகளை யார் வேண்டுமானாலும் செய்யலாம்.

வேதாத்திரி மகரிஷியின் வழிகாட்டுதல்

எல்லோருக்கும் நன்மை உண்டாக வேண்டும் என்று எண்ணுவதே நல்லவர்களின் குணம். உள்ளதைச் சொல்லுங்கள், நல்லதை எண்ணுங்கள், நல்லதைச் செய்யுங்கள், நல்லவனாகவே வாழுங்கள். மனிதன் முழுமை பெற பரம்பொருளோடு ஒன்றுவதே வழி. நல்ல பண்புகளை படிப்படியாகத்தான் பழக முடியும். ஒரே நாளில் எதையும் கற்றுவிட முடியாது. மனத்தூய்மை, சத்துள்ள உணவு, அளவான உழைப்பு, முறையான ஓய்வு நல்வாழ்க்கைக்கு அடிப்படை. துன்பம் இல்லாத மகிழ்ச்சியை மட்டுமே பெற நினைக்கிறோம். ஆனால் அதற்கான வழிகளை அறிவதில்லை. கோபமின்றி வாழ்வதே உயர் வாழ்வின் அடிப்படை குணம். சினமில்லாதவன் ஞானப் பாதையில் பயணிக்கத் தொடங்குவான்.

குரு மகராஜ் – ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் உபதேசங்கள்

இறைவனே உலகம் என்ற நம்பிக்கை உறுதியானால் எல்லா பிரச்சனைகளும் தீரும். எவன் இறைவனைக் காண ஏங்கி அழுகிறானோ அவன் மீது இறைவனின் கருணை விழும். உலக இன்பங்களில் மயங்குபவன் எந்தப் பிறவியிலும் இறைவனை அடைய முடியாது. பணத்தின் மீதான மோகம் பைத்தியமாக்கும். காமம் இறைவனிடமிருந்து பிரிக்கும். படிப்பதைக் காட்டிலும் கேள்வி ஞானம் உயர்ந்தது. கேட்பதை விட நேரில் காண்பது சிறந்தது. இறைக்காட்சி கிடைத்த பின்பே அறியாமை அகலும். மன வலிமை படைத்தவர்களால் மட்டுமே உலக ஆசைகளைத் துறக்க முடியும். கடவுள் நமக்கு முதலாளி, நாம் அவர் வேலைக்காரர்கள். அவருக்கு பணிவிடை செய்வதே பிறவிப்பயன். மனித வாழ்வின் சாரமே பக்தி. பக்தி இல்லாத வாழ்வு அர்த்தமற்றது. நீங்கள் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்யுங்கள். அதே நேரத்தில் மனதை ஆண்டவனிடம் வையுங்கள்.

நண்பர்களே… இந்த ஞானமொழிகளில் ஏதாவது ஒரு கருத்து உங்கள் மனதில் ஆழமாக பதிந்திருக்கிறதா? சிந்தித்துப் பாருங்கள்!

இதைப் பதிவேற்றியவர்..

Umamaheswari Sivanesan

வணக்கம்! நான் உமா, சென்னையில் வசித்து வருகிறேன். வேதியியல் துறையில் முதுநிலை பட்டம் (M.Sc. Chemistry) பெற்றுள்ளேன், ஆனால் என் உள்ளார்ந்த ஆர்வம் ஆன்மிகம் மற்றும் தமிழ் கலாசாரத்தின் ஆழமான பாரம்பரியத்தில் உள்ளது.

Read full bio →


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

sri-chakra
  • ஏப்ரல் 18, 2025
ஸ்ரீ சக்கரம்: பிரபஞ்சத்தின் அதிர்வு
Pilgrimage Songs in Tamil
  • ஏப்ரல் 1, 2025
புனித யாத்திரை பாடல்கள்
Diseases and Treatment Prescriptions in Atharva Veda
  • மார்ச் 30, 2025
அதர்வ வேதத்தில் நோய் மற்றும் சிகிச்சை பரிந்துரைகள்