×
Friday 25th of July 2025

உங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கான தேவார பாடல்கள்


Last updated on ஜூன் 24, 2025

thevaram songs for the birthday star

Thevaram Songs for the Birthday Star in Tamil

தம் பிறந்த நட்சத்திரத்தின் பாடலை தினமும் மூன்று முறை பாடிக் கொண்டு சிவபெருமானை வழிபடுவோர், நவக்கிரக தோஷங்கள் நீங்கி நிம்மதியான வாழ்வைப் பெறுவர்.

அசுவினி

தக்கார்வம் எய்திசமண் தவிர்ந்து உந்தன் சரண் புகுந்தேன்
எக்கால் எப்பயன் நின் திறம் அல்லால் எனக்கு உளதே
மிக்கார் தில்லையுள் விருப்பா மிக வடமேரு என்னும்
திக்கா! திருச்சத்தி முற்றத்து உறையும் சிவக்கொழுந்தே.

பரணி

கரும்பினும் இனியான் தன்னைக் காய்கதிர்ச் சோதியானை
இருங்கடல் அமுதம் தன்னை இறப்பொடு பிறப்பு இலானைப்
பெரும்பொருள் கிளவியானைப் பெருந்தவ முனிவர் ஏத்தும்
அரும்பொனை நினைந்த நெஞ்சம் அழகிதாம் நினைந்தவாறே.

கார்த்திகை/கிருத்திகை

செல்வியைப் பாகம் கொண்டார் சேந்தனை மகனாக் கொண்டார்
மல்லிகைக் கண்ணியோடு மாமலர்க் கொன்றை சூடிக்
கல்வியைக் கரை இலாத காஞ்சி மாநகர் தன்னுள்ளார்
எல்லிய விளங்க நின்றார் இலங்கு மேற்றளியனாரே.

ரோகிணி

எங்கேனும் இருந்து உன் அடியேன் உனை நினைந்தால்
அங்கே வந்து என்னோடும் உடன் ஆகி நின்றருளி
இங்கே என் வினையை அறுத்திட்டு எனை ஆளும்
கங்கா நாயகனே கழிப்பாலை மேயோனே.

மிருக சீரிடம்

பண்ணின் இசை ஆகி நின்றாய் போற்றி, பாவிப்பார் பாவம் அறுப்பாய் போற்றி
எண்ணும் எழுத்தும் சொல் ஆனாய் போற்றி, என் சிந்தை நீங்கா இறைவா போற்றி
விண்ணும் நிலனும் தீ ஆனாய் போற்றி, மேலவர்க்கும் மேலாகி நின்றாய் போற்றி
கண்ணின் மணி ஆகி நின்றாய் போற்றி, கயிலை மலையானே போற்றி போற்றி!

திருவாதிரை/ஆதிரை

கவ்வைக் கடல் கதறிக் கொணர் முத்தம் கரைக்கு ஏற்றக்
கொவ்வைத் துவர் வாயார் குடைந்து ஆடும் திருச்சுழியல்
தெய்வத்தினை வழிபாடு செய்து எழுவார் அடி தொழுவார்
அவ்வத் திசைக்கு அரசு ஆகுவர் அலராள் பிரியாளே.

புனர்பூசம்

மன்னும் மலைமகள் கையால் வருடின மாமறைகள்
சொன்ன துறைதொறும் தூப்பொருள் ஆயின தூக்கமலத்து
அன்னவடிவின அன்புடைத் தொண்டர்க்கு அமுது அருத்தி
இன்னல் களைவன இன்னம்பரான் தன் இணை அடியே.

பூசம்

பொருவிடை ஒன்றுடைப் புண்ணிய மூர்த்திப் புலி அதளன்
உருவுடை அம்மலைமங்கை மணாளன் உலகுக்கு எல்லாம்
திருவுடை அந்தணர் வாழ்கின்ற தில்லை சிற்றம்பலவன்
திருவடியைக் கண்ட கண்கொண்டு மற்று இனிக் காண்பது என்னே.

ஆயில்யம்

கருநட்ட கண்டனை அண்டத் தலைவனைக் கற்பகத்தைச்
செருநட்ட மும்மதில் எய்ய வல்லானைச் செந்நீ முழங்கத்
திருநட்டம் ஆடியைத் தில்லைக்கு இறையைச் சிற்றம்பலத்துப்
பெருநட்டம் ஆடியை வானவர் கோன் என்று வாழ்த்துவனே.

மகம்

பொடி ஆர் மேனியனே! புரிநூல் ஒருபால் பொருந்த
வடி ஆர் மூவிலை வேல் வளர் கங்கையின் மங்கையொடும்
கடிஆர் கொன்றையனே! கடவூர் தனுள் வீரட்டத்து எம்
அடிகேள்! என் அமுதே! எனக்கு ஆர்துணை நீ அலதே.

பூரம்

நூல் அடைந்த கொள்கையாலே நுன் அடி கூடுதற்கு
மால் அடைந்த நால்வர் கேட்க நல்கிய நல்லறத்தை
ஆல் அடைந்த நீழல் மேவி அருமறை சொன்னது என்னே
சேல் அடைந்த தண்கழனிச் சேய்ன்ஞலூர் மேயவனே.

உத்திரம்

போழும் மதியும் புனக் கொன்றைப் புனர்சேர் சென்னிப் புண்ணியா!
சூழம் அரவச் சுடர்ச் சோதீ உன்னைத் தொழுவார் துயர் போக
வாழும் அவர்கள் அங்கங்கே வைத்த சிந்தை உய்த்து ஆட்ட
ஆழும் திரைக்காவிரிக் கோட்டத்து ஐயாறு உடைய அடிகளே.

அஸ்தம்

வேதியா வேத கீதா விண்ணவர் அண்ணா என்று
ஓதியே மலர்கள் தூவி ஒருங்கு நின் கழல்கள் காணப்
பாதி ஓர் பெண்ணை வைத்தாய் படர் சடை மதியம் சூடும்
ஆதியே ஆலவாயில் அப்பனே அருள் செயாயே.

சித்திரை

நின் அடியே வழிபடுவான், நிமலா! நினைக் கருத,
“என் அடியான் உயிரை வவ்வேல்!” என்று அடல் கூற்று உதைத்த
பொன் அடியே பரவி, நாளும் பூவொடு நீர் சுமக்கும்
நின் அடியார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே!

சுவாதி

காவினை இட்டும் குளம் பல தொட்டும் கனி மனத்தால்
ஏவினையால் எயில் மூன்று எரித்தீர் என்று இருபொழுதும்
பூவினைக் கொய்து மலரடி போற்றுதும் நாம் அடியோம்
தீவினை வந்து எமைத் தீண்டப்பெறா திருநீலகண்டம்.

விசாகம்

விண்ணவர் தொழுது ஏத்த நின்றானை வேதம் தான் விரித்து ஓத வல்லனை
நண்ணினார்க்கு என்றும் நல்லவன் தன்னை நாளும் நாம் உகக்கின்ற பிரானை
எண்ணில் தொல்புகழாள் உமை நங்கை என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
கண்ணும் மூன்று உடைக் கம்பன் எம்மானைக் காணக் கண் அடியேன் பெற்றவாறே.

அனுஷம்

மயிலார் சாயல் மாது ஓர் பாகமா
எயிலார் சாய எரித்த எந்தை தன்
குயிலார் சோலைக் கோலக்காவையே
பயிலா நிற்கப் பறையும் பாவமே.

கேட்டை

முல்லை நன்முறுவல் உமை பங்கனார்
தில்லை அம்பலத்தில் உறை செல்வனார்
கொல்லை ஏற்றினர் கோடிகாவா என்று அங்கு
ஒல்லை ஏத்துவார்க்கு ஊனம் ஒன்று இல்லையே.

மூலம்

கீளார் கோவணமும் திருநீறும் மெய்பூசி உன் தன்
தாளே வந்து அடைந்தேன் தலைவா எனை ஏற்றுக்கொள் நீ
வாள் ஆர் கண்ணி பங்கா! மழபாடியுள் மாணிக்கமே
ஆளாய் நின்னையல்லால் இனியாரை நினைக்கேனே.

பூராடம்

நின் ஆவார் பிறர் அன்றி நீயே ஆனாய் நினைப்பார்கள் மனத்துக்கு ஓர் வித்தும் ஆனாய்
மன் ஆனாய் மன்னவர்க்கு ஓர் அமுதம் ஆனாய் மறை நான்கும் ஆனாய் ஆறு அங்கம் ஆனாய்
பொன் ஆனாய் மணி ஆனாய் போகம் ஆனாய் பூமி மேல் புகழ்தக்கப் பொருளே உன்னை
என் ஆனாய் என் ஆனாய் என்னின் அல்லால் ஏழையேன் என் சொல்லி ஏத்துகேனே.

உத்திராடம்

குறைவிலா நிறைவே குணக்குன்றே கூத்தனே குழைக்காது உடையோனே
உறவு இலேன் உனை அன்றி மற்று அறியேன் ஒரு பிழை பொறுத்தால் இழிவு உண்டே
சிறைவண்டு ஆர் பொழில் சூழ்திருவாரூர்ச் செம்பொனே திருவடுதுறையுள்
அறவோனே எனை அஞ்சல் என்று அருளாய் ஆர் எனக்கு உறவு அமரர்கள் ஏறே

திருவோணம்/ஓணம்

வேதம் ஓதி வெண்நூல் பூண்ட வெள்ளை எருது ஏறி
பூதம் சூழப் பொலிய வருவார் புலியின் உரிதோலார்
நாதா எனவும் நக்கா எனவும் நம்பா என நின்று
பாதம் தொழுவார் பாவம் தீர்ப்பார் பழன நகராரே.

அவிட்டம்

எண்ணும் எழுத்தும் குறியும் அறிபவர் தாம் மொழியப்
பண்ணின் இடைமொழி பாடிய வானவரதா பணிவார்
திண்ணென் வினைகளைத் தீர்க்கும் பிரா திருவேதிக்குடி
நண்ணரிய அமுதினை நாம் அடைந்து ஆடுதுமே.

சதயம்

கூடிய இலயம் சதி பிழையாமைக் கொடி இடை இமையவள் காண
ஆடிய அழகா அருமறைப் பொருளே அங்கணா எங்கு உற்றாய் என்று
தேடிய வானோர் சேர் திருமுல்லை வாயிலாய் திருப்புகழ் விருப்பால்
பாடிய அடியேன் படுதுயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே.

பூரட்டாதி

முடி கொண்ட மத்தமும் முக்கண்ணனின் நோக்கும் முறுவலிப்பும்
துடிகொண்ட கையும் துதைந்த வெண்ணீறும் சுரிகுழலாள்
படி கொண்ட பாகமும் பாய்புலித் தோலும் என் பாவி நெஞ்சில்
குடி கொண்டவா தில்லை அம்பலக் கூத்தன் குரை கழலே.

உத்திரட்டாதி

நாளாய போகாமே நஞ்சு அணியும் கண்டனுக்கு
ஆளாய அன்பு செய்வோம் மட நெஞ்சே அரன் நாமம்
கேளாய் நம் கிளை கிளைக்கும் கேடுபடாத்திறம் அருளிக்
கோள் ஆய நீக்குமவன் கோளிலி எம்பெருமானே.

ரேவதி

நாயினும் கடைப்பட்டேனை நன்னெறி காட்டி ஆண்டாய்
ஆயிரம் அரவம் ஆர்த்த அமுதனே அமுதம் ஒத்து
நீயும் என் நெஞ்சினுள் நிலாவிளாய்நிலாவி நிற்க
நோயவை சாரும் ஆகில் நோக்கி நீ அருள் செய்வாயே.

திருச்சிற்றம்பலம்

Also, read

இதைப் பதிவேற்றியவர்..

Umamaheswari Sivanesan

வணக்கம்! நான் உமா, சென்னையில் வசித்து வருகிறேன். வேதியியல் துறையில் முதுநிலை பட்டம் (M.Sc. Chemistry) பெற்றுள்ளேன், ஆனால் என் உள்ளார்ந்த ஆர்வம் ஆன்மிகம் மற்றும் தமிழ் கலாசாரத்தின் ஆழமான பாரம்பரியத்தில் உள்ளது.

Read full bio →


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

lord-subramanya
  • ஜூலை 15, 2025
ஸ்ரீ ஸூப்ரஹ்மண்ய பஞ்ச ரத்னம் (ஸ்ரீதர அய்யாவாள் அருளியது)
shani chalisa lyrics in english with meaning
  • ஜூலை 2, 2025
சனி சாலிசா: சனி பகவானின் அருளைப் பெறவும்
kali-kavacham
  • ஜூன் 23, 2025
ஸ்ரீ காளியம்மன் கவசம்