×
Saturday 26th of July 2025

மீளா அடிமை உமக்கே ஆள் [திருப்பாட்டு 7 -ஆம் திருமுறை]


Last updated on ஜூன் 24, 2025

meela adimai lyrics in tamil

திருப்பாட்டு 7 -ஆம் திருமுறை [பன்னிரு திருமுறை]

சுந்தரர் தேவாரம்

நாடு: சோழநாடு காவிரித் தென்கரை
தலம்: ஆரூர்
பண்: செந்துருத்தி

Meela Adimai Lyrics in Tamil

மீளா அடிமை உமக்கே ஆள்

மீளா அடிமை உமக்கே ஆள் ஆய், பிறரை வேண்டாதே,
மூளாத் தீப் போல் உள்ளே கனன்று, முகத்தால் மிக வாடி,
ஆள் ஆய் இருக்கும் அடியார் தங்கள் அல்லல் சொன்னக்கால்
வாளா(ஆ)ங்கு இருப்பீர்; திரு ஆரூரீர்! வாழ்ந்துபோதீரே! [ 1]

விற்றுக் கொள்வீர்; ஒற்றி அல்லேன்; விரும்பி ஆட்பட்டேன்;
குற்றம் ஒன்றும் செய்தது இல்லை; கொத்தை ஆக்கினீர்;
எற்றுக்கு-அடிகேள்!-என் கண் கொண்டீர்? நீரே பழிப்பட்டீர்;
மற்றைக் கண்தான் தாரா தொழிந்தால், வாழ்ந்துபோதீரே! [ 2]

அன்றில் முட்டாது அடையும் சோலை ஆரூர் அகத்தீரே!
கன்று முட்டி உண்ணச் சுரந்த காலி அவை போல,
என்றும் முட்டாப் பாடும் அடியார் தம் கண் காணாது
குன்றில் முட்டிக் குழியில் விழுந்தால், வாழ்ந்துபோதீரே! [ 3]

துருத்தி உறைவீர்; பழனம் பதியா, சோற்றுத்துறை ஆள்வீர்;
இருக்கை திரு ஆரூரே உடையீர்; மனமே என வேண்டா:
அருத்தி உடைய அடியார் தங்கள் அல்லல் சொன்னக்கால்,
வருத்தி வைத்து, மறுமை பணித்தால், வாழ்ந்துபோதீரே! [ 4]

செந் தண் பவளம் திகழும் சோலை இதுவோ, திரு ஆரூர்?
எம்தம் அடிகேள்! இதுவே ஆம் ஆறு, உமக்கு ஆட்பட்டோர்க்கு?
சந்தம் பலவும் பாடும் அடியார் தம் கண் காணாது
வந்து, எம்பெருமான்! முறையோ? என்றால், வாழ்ந்துபோதீரே! [ 5]

தினைத்தாள் அன்ன செங்கால் நாரை சேரும் திரு ஆரூர்ப்
புனைத் தார் கொன்றைப் பொன் போல் மாலைப் புரிபுன் சடையீரே!
தனத்தால் இன்றி, தாம்தாம் மெலிந்து, தம் கண் காணாது,
மனத்தால் வாடி, அடியார் இருந்தால், வாழ்ந்துபோதீரே! [ 6]

ஆயம் பேடை அடையும் சோலை ஆரூர் அகத்தீரே!
ஏ, எம்பெருமான்! இதுவே ஆம் ஆறு, உமக்கு ஆட்பட்டோர்க்கு?
மாயம் காட்டி, பிறவி காட்டி, மறவா மனம் காட்டி,
காயம் காட்டி, கண் நீர் கொண்டால், வாழ்ந்துபோதீரே! [ 7]

கழி ஆய், கடல் ஆய், கலன் ஆய், நிலன் ஆய், கலந்த சொல் ஆகி,-
இழியாக் குலத்தில் பிறந்தோம்-உம்மை இகழாது ஏத்துவோம்;
பழிதான் ஆவது அறியீர்: அடிகேள்! பாடும் பத்தரோம்;
வழிதான் காணாது, அலமந்து இருந்தால், வாழ்ந்துபோதீரே! [ 8]

பேயோடேனும் பிரிவு ஒன்று இன்னாது என்பர், பிறர் எல்லாம்;
காய்தான் வேண்டில், கனிதான் அன்றோ, கருதிக் கொண்டக்கால்?
நாய்தான் போல நடுவே திரிந்தும், உமக்கு ஆட்பட்டோர்க்கு
வாய்தான் திறவீர்; திரு ஆரூரீர்! வாழ்ந்துபோதீரே! [ 9]

செருந்தி செம்பொன்மலரும் சோலை இதுவோ, திரு ஆரூர்?
பொருந்தித் திரு மூலட்டான(ம்)மே இடமாக் கொண்டீரே;
இருந்தும், நின்றும், கிடந்தும், உம்மை இகழாது ஏத்துவோம்;
வருந்தி வந்தும், உமக்கு ஒன்று உரைத்தால், வாழ்ந்துபோதீரே! [ 10]

கார் ஊர் கண்டத்து எண்தோள் முக்கண் கலைகள் பல ஆகி,
ஆரூர்த் திரு மூலட்டானத்தே அடிப்பேர் ஆரூரன்,
பார் ஊர் அறிய, என் கண் கொண்டீர்; நீரே பழிப்பட்டீர்;
வார் ஊர் முலையாள் பாகம் கொண்டீர்! வாழ்ந்துபோதீரே! [ 11]

 

Also, read


 

இதைப் பதிவேற்றியவர்..

Umamaheswari Sivanesan

வணக்கம்! நான் உமா, சென்னையில் வசித்து வருகிறேன். வேதியியல் துறையில் முதுநிலை பட்டம் (M.Sc. Chemistry) பெற்றுள்ளேன், ஆனால் என் உள்ளார்ந்த ஆர்வம் ஆன்மிகம் மற்றும் தமிழ் கலாசாரத்தின் ஆழமான பாரம்பரியத்தில் உள்ளது.

Read full bio →


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

lord-subramanya
  • ஜூலை 15, 2025
ஸ்ரீ ஸூப்ரஹ்மண்ய பஞ்ச ரத்னம் (ஸ்ரீதர அய்யாவாள் அருளியது)
shani chalisa lyrics in english with meaning
  • ஜூலை 2, 2025
சனி சாலிசா: சனி பகவானின் அருளைப் பெறவும்
kali-kavacham
  • ஜூன் 23, 2025
ஸ்ரீ காளியம்மன் கவசம்