×
Thursday 24th of July 2025

அவனிதனிலே பிறந்து – திருப்புகழ் 110


Last updated on ஜூன் 24, 2025

Avanithanile Piranthu Song Lyrics in Tamil

அவனிதனிலே பிறந்து பாடல் வரிகள்

Avanithanile Piranthu Song Lyrics in Tamil

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் 110 அவனிதனிலே பிறந்து (பழநி):

தனதனன தான தந்த தனதனன தான தந்த
     தனதனன தான தந்த …… தனதான

அவனிதனி லேபி றந்து மதலையென வேத வழ்ந்து
     அழகுபெற வேந டந்து …… இளைஞோனாய்

அருமழலை யேமி குந்து குதலைமொழி யேபு கன்று
     அதிவிதம தாய்வ ளர்ந்து …… பதினாறாய்

சிவகலைக ளாக மங்கள் மிகவுமறை யோது மன்பர்
     திருவடிக ளேநி னைந்து …… துதியாமல்

தெரிவையர்க ளாசை மிஞ்சி வெகுகவலை யாயு ழன்று
     திரியுமடி யேனை யுன்ற …… னடிசேராய்

மவுனவுப தேச சம்பு மதியறுகு வேணி தும்பை
     மணிமுடியின் மீத ணிந்த …… மகதேவர்

மனமகிழ வேய ணைந்து ஒருபுறம தாக வந்த
     மலைமகள்கு மார துங்க …… வடிவேலா

பவனிவர வேயு கந்து மயிலின்மிசை யேதி கழ்ந்து
     படியதிர வேந டந்த …… கழல்வீரா

பரமபத மேசெ றிந்த முருகனென வேயு கந்து
     பழநிமலை மேல மர்ந்த …… பெருமாளே.

அவனிதனிலே பிறந்து பாடல் விளக்கம்

Avanithanile Piranthu Song Meaning in Tamil

அவனிதனிலே பிறந்து … இந்த பூமியிலே பிறந்து

மதலை எனவே தவழ்ந்து … குழந்தை எனத் தவழ்ந்து

அழகு பெறவே நடந்து … அழகு பெறும் வகையில் நடை பழகி

இளைஞோனாய் … இளைஞனாய்

அருமழலையே மிகுந்து … அரிய மழலைச் சொல்லே மிகுந்து வர

குதலை மொழியே புகன்று … குதலை மொழிகளே பேசி

அதிவிதம் அதாய் வளர்ந்து … அதிக விதமாக வயதுக்கு ஒப்ப வளர்ந்து

பதினாறாய் … வயதும் பதினாறு ஆகி,

சிவகலைகள் ஆகமங்கள் … சைவ நூல்கள், சிவ ஆகமங்கள்,

மிகவுமறை ஓதும் அன்பர் … மிக்க வேதங்களை ஓதும் அன்பர்களுடைய

திருவடிகளே நினைந்து துதியாமல் … திருவடிகளையே நினைந்து துதிக்காமல்,

தெரிவையர்கள் ஆசை மிஞ்சி … மாதர்களின் மீது ஆசை மிகுந்து

வெகுகவலை யாய்உழன்று … அதன் காரணமாக மிக்க கவலையுடன் அலைந்து

திரியும் அடியேனை … திரிகின்ற அடியேனை,

உன்றன் அடிசேராய் … உனது திருவடிகளில் சேர்க்க மாட்டாயா?

மவுன உபதேச சம்பு … சும்மா இரு என்ற மெளன உபதேசம் செய்த சம்பு,

மதியறுகு வேணி தும்பை … பிறைச்சந்திரன், அறுகம்புல், கங்கை, தும்பைப்பூ

மணிமுடியின் மீதணிந்த மகதேவர் … தன் மணி முடியின் மேலணிந்த மகாதேவர்,

மனமகிழவே அணைந்து … மனமகிழும்படி அவரை அணைத்துக்கொண்டு

ஒருபுறமதாகவந்த … அவரது இடப்புறத்தில் வந்தமர்ந்த

மலைமகள் குமார … பார்வதியின் குமாரனே

துங்க வடிவேலா … பரிசுத்தமும் கூர்மையும் உடைய வேலினை உடையவனே

பவனி வரவே உகந்து … இவ்வுலகைச் சுற்றிவரவே ஆசை கொண்டு

மயிலின் மிசையே திகழ்ந்து … மயிலின் மேல் ஏறி விளங்கி

படி அதிரவே நடந்த … பூமி அதிரவே வலம் வந்த

கழல்வீரா … வீரக் கழல் அணிந்த வீரனே

பரம பதமே செறிந்த … மோட்ச வீட்டில் பொருந்தி நின்று

முருகன் எனவே உகந்து … முருகன் என விளங்கி

பழனிமலை மேல் அமர்ந்த பெருமாளே… பழனிமலையில் வீற்ற பெருமாளே.

 

Also, read

இதைப் பதிவேற்றியவர்..

Umamaheswari Sivanesan

வணக்கம்! நான் உமா, சென்னையில் வசித்து வருகிறேன். வேதியியல் துறையில் முதுநிலை பட்டம் (M.Sc. Chemistry) பெற்றுள்ளேன், ஆனால் என் உள்ளார்ந்த ஆர்வம் ஆன்மிகம் மற்றும் தமிழ் கலாசாரத்தின் ஆழமான பாரம்பரியத்தில் உள்ளது.

Read full bio →


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

thimiri-kumaragiri-murugan-temple-entrance
  • ஜூலை 21, 2025
குமரகிரி முருகன் கோவில், திமிரி: ஒரு சக்தி வாய்ந்த மலைக்கோவில்
lord-subramanya
  • ஜூலை 15, 2025
ஸ்ரீ ஸூப்ரஹ்மண்ய பஞ்ச ரத்னம் (ஸ்ரீதர அய்யாவாள் அருளியது)
shani chalisa lyrics in english with meaning
  • ஜூலை 2, 2025
சனி சாலிசா: சனி பகவானின் அருளைப் பெறவும்