- ஜூலை 6, 2026

ஆடி மாதம் என்றாலே அம்மன் கோவில்களில் திருவிழா களைகட்டும். அதிலும் குறிப்பாக, அம்பாளுக்கு மிகவும் உகந்த நாளாகக் கொண்டாடப்படுவது ‘ஆடிப்பூரம்‘. உலகைக் காக்கும் அகிலாண்டேஸ்வரிக்கு வளைகாப்பு நடத்தும் விழாவாகவும், பூமிப் பிராட்டியான ஆண்டாள் அவதரித்த நன்னாளாகவும் இந்த ஆடிப்பூரம் கொண்டாடப்படுகிறது.
திருவில்லிபுத்தூரில் பெரியாழ்வாரின் நந்தவனத்தில் துளசிச் செடியின் அருகே, ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரத்தில் தான் சூடிக்கொடுத்த சுடர்க்கொடியான ‘ஆண்டாள்’ அவதரித்தாள். மார்கழி மாதத்தில் திருப்பாவை பாடி அரங்கனையே மணந்த ஆண்டாளின் பிறந்தநாளை, ஆடிப்பூரத் திருவிழாவாக வைணவத் திருத்தலங்களில் வெகு விமர்சையாகக் கொண்டாடுகிறார்கள்.
உலக உயிர்களுக்கெல்லாம் தாயாக விளங்கும் பார்வதி தேவி, தாய்மை அடைந்ததைக் கொண்டாடும் விதமாக, சிவாலயங்களில் அம்பாளுக்கு ஆடிப்பூரத்தன்று ‘வளைகாப்பு‘ திருவிழா நடத்தப்படுகிறது. அன்றைய தினம் அம்பாள் சன்னதியில் ஆயிரக்கணக்கான கண்ணாடி வளையல்களால் தோரணம் கட்டி, அம்பிகைக்கு வளையல்களால் அலங்காரம் செய்து வழிபடுவது வழக்கம்.
கோவிலுக்குச் சென்று கூட்ட நெரிசலில் தரிசிக்க முடியாதவர்கள், தங்கள் வீடுகளிலேயே மிக எளிமையான முறையில் அம்பாளை நினைத்து வழிபடலாம்.
முக்கியக் குறிப்பு: அம்பாளுக்குப் படைத்த கண்ணாடி வளையல்களைப் பூஜை முடிந்த பின்பு, வீட்டில் உள்ள சுமங்கலிப் பெண்களும், கன்னிப் பெண்களும் அணிந்துகொள்வது மிகவும் சிறப்பானது. அக்கம் பக்கத்தில் உள்ள பெண்களுக்கும் தாம்பூலத்துடன் வளையல்களைக் கொடுத்து ஆசி பெறலாம்.
குழந்தை பாக்கியம்: நீண்ட நாட்களாகக் குழந்தை பாக்கியம் இல்லாத பெண்கள், ஆடிப்பூரத்தன்று அம்மனுக்கு வளைகாப்பு நடத்தி, அந்த வளையல்களைப் பிரசாதமாக அணிந்து கொண்டால் விரைவில் மழலைச் செல்வம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
திருமணத் தடை நீங்கும்: கன்னிப் பெண்கள் ஆடிப்பூரத்தன்று விரதமிருந்து ஆண்டாளையும், அம்மனையும் வழிபட்டால், சிறந்த வாழ்க்கைத்துணை அமைவார்.
ஆடி மாதம் முழுவதுமே ஆன்மீகச் சிறப்புகள் நிறைந்த மாதமாகும். உங்களின் விரிவான வாசிப்பிற்கு நமது தளத்தின் மற்ற கட்டுரைகள் இதோ:
இறைவனின் அருளும், அன்னை அகிலாண்டேஸ்வரியின் ஆசியும் உங்கள் இல்லங்களில் நிறைந்து சிறக்கட்டும்! வாழ்க வளமுடன்!