×
Thursday 23rd of July 2026

அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில், திருச்செந்தூர்


Last updated on ஏப்ரல் 2, 2026

thiruchendur murugan temple entrance gopuram in night view

திருச்செந்தூர் முருகன் கோவில்

செந்தில் ஆண்டவனுக்கு அரோகரா!

முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகவும், கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள ஒரே படை வீடாகவும் திகழ்வது திருச்செந்தூர். சூரபத்மனை வதம் செய்து தேவர்களைக் காத்த அந்த வெற்றித் தலம் குறித்து, நான் சமீபத்தில் அங்கு சென்ற அனுபவங்களோடும், திரட்டப்பட்ட ஆன்மீகத் தகவல்களோடும் இந்தப் பதிவை உங்களுக்காக வழங்குகிறேன்.

என்னுடைய தரிசனம்: நான் சமீபத்தில் என் மனைவியுடன் 29.03.2026 அன்று திருச்செந்தூர் கோவிலுக்குச் சென்று முருகனைத் தரிசிக்கும் பாக்கியம் பெற்றோம். கடலோரத்தில் வீசும் அந்தப் புனிதக் காற்றும், நாழிக்கிணற்றின் அற்புதமும், சண்முகரின் திருவுருவமும் தரும் அமைதி, வார்த்தைகளால் விவரிக்க முடியாதது. எனது அந்த நேரடி அனுபவத்தின் அடிப்படையிலான குறிப்புகளையும் இங்கே பகிர்ந்துள்ளேன்.

திருச்சீரலைவாய் – பெயர்க்காரணம் மற்றும் வரலாறு

மன்னார் வளைகுடா கடலோரத்தில் அலைகள் தழுவ அமைந்துள்ளதால், இத்தலம் பழங்காலத்தில் ‘அலைவாய்’ என்று அழைக்கப்பட்டது. பின்னர் ‘திரு’ என்ற அடைமொழி சேர்க்கப்பட்டு ‘திருச்சீரலைவாய்’ ஆனது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்த ஆலயம் நிலைபெற்றிருந்ததாக வரலாற்று ஏடுகள் கூறுகின்றன.

  • அவதார நோக்கம்: அசுரர்களை அழிப்பதற்காகவே முருகப்பெருமான் எடுத்த அவதார நோக்கம் முழுமையடைந்தது இங்குதான்.
  • பல்வேறு பெயர்கள்: வெற்றி நகர், வியாழ சேத்திரம், செந்தில், சிந்துபுரம் என இத்தலத்திற்கு பல பெயர்கள் உண்டு.

திருச்செந்தூர் கோவிலின் சிறப்புகள்

திருச்செந்தூர் கோவில் மற்ற முருகர் கோவில்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டது.

  1. ஓம் வடிவ அமைப்பு: இக்கோவில் பிரணவ மந்திரமான “ஓம்” எனும் வடிவில் அமைந்துள்ளது ஒரு மாபெரும் அதிசயம்.
  2. இரண்டு மூலவர்கள்: இங்கு பாலசுப்பிரமணிய சுவாமி (கிழக்கு நோக்கி) மற்றும் சண்முகர் (தெற்கு நோக்கி) என இரண்டு மூலவர்கள் அருள்பாலிக்கிறார்கள்.
  3. பஞ்சலிங்க தரிசனம்: மூலவர் பாலசுப்பிரமணியருக்குப் பின்புறம் உள்ள சுரங்க அறையில் (பாம்பறை), முருகன் பூஜித்த ஐந்து லிங்கங்களை நாம் காணலாம். (இதற்கு ரூ.5 கட்டணம் உண்டு).
  4. இரண்டு மயில்கள்: கருவறைக்கு எதிரே இரண்டு மயில்கள் மற்றும் ஒரு நந்தி இருப்பதைக் காணலாம். சூரசம்ஹாரத்திற்குப் பின் இந்திரன் ஒரு மயிலாகவும், சூரன் ஒரு மயிலாகவும் இங்கு நிற்பதாக ஐதீகம்.

ஆன்மீக அனுபவம்: எனது பயணக் குறிப்புகள்

நீங்கள் திருச்செந்தூர் செல்லத் திட்டமிட்டால், கீழ்க்கண்ட முறையைப் பின்பற்றுவது சிறந்தது:

  • புறப்படும் முன் செய்ய வேண்டியவை: வீட்டிலிருந்து கிளம்பும் முன்பே குலதெய்வத்தை வணங்கி ஒரு தீபம் ஏற்றி, “முருகா, உன்னையே நம்பி வருகிறேன், நீயே எனக்குத் துணையாக இரு” என்று மனதார வேண்டிப் புறப்படுங்கள்.
  • தூண்டுகை விநாயகர்: கோவிலுக்குச் செல்லும் வழியில் உள்ள தூண்டுகை விநாயகரை முதலில் வணங்கிய பின்னரே முருகனைத் தரிசிக்கச் செல்ல வேண்டும்.
  • கடல் & நாழிக்கிணறு நீராடல்: முதலில் கடலில் குளித்துவிட்டு, அதன் பிறகே நாழிக்கிணற்றில் நீராட வேண்டும். நாழிக்கிணற்றில் நீராடிய பிறகு, வேறு எந்த நீரிலும் குளிக்கக் கூடாது என்பது ஐதீகம். ஈர உடைகளுடன் கோவிலுக்குள் நுழையக் கூடாது. காய்ந்த தூய்மையான உடைகளை அணிந்தே உள்ளே செல்ல வேண்டும்.
  • தரிசன விபரம்: நான் ஞாயிறு அன்று சென்றதால் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அதனால் காலையில் நெரிசலைத் தவிர்க்க, மதியம் 12.45 மணியளவில் 100 ரூபாய் வரிசையில் நின்று, சுப்ரமணியஸ்வாமியை 1.35 மணிக்கெல்லாம் கண்குளிர தரிசித்தோம். நீங்களும் கூட்டத்தை தவிர்க்க விரும்பினால் மதியம் 1 மணி முதல் 2 மணிக்குள்ளாக தரிசன வரிசையில் நிற்கலாம். கோவிலுக்குள் நுழைந்ததும் கிழக்கு நோக்கி இருக்கும் சுப்பிரமணியரையும், தெற்கு நோக்கி அருள்பாலிக்கும் சண்முகரையும் தரிசிக்கவும். வரிசையில் நிற்கும்போது அமைதியைக் கடைப்பிடித்து “கந்த சஷ்டி” மந்திரத்தை உச்சரிப்பது மனதிற்கு கூடுதல் அமைதியைத் தரும்.

thiruchendur murugan temple shanmugar

  • திருப்பணி செய்த பெரியோர்கள்: நாழிக்கிணறு அருகே இந்தக் கோவிலைப் புனரமைக்கத் தங்கள் வாழ்நாளை அர்ப்பணித்த மௌன சுவாமி, காசி சுவாமி மற்றும் ஆறுமுக சுவாமி ஆகிய மூவரின் சமாதிகளை வணங்குவது சிறப்பு. [நாங்கள் சென்ற நேரத்தில் மூவர் சமாதி கட்டிட வேலைப்பாடுகள் நடந்துகொண்டிருந்தது. அதனால் உள்ளே செல்ல அனுமதி இல்லை.]
  • பன்னீர் இலை விபூதி பிரசாதம்: இங்கு வழங்கப்படும் பன்னீர் இலை விபூதி பிரசாதம் மிகவும் மகத்துவமானது. இதை உட்கொண்டால் நோய்கள் மற்றும் தீய சக்திகளின் பாதிப்புகள் (செய்வினை தோஷங்கள்) நீங்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
  • சிறப்பு வசதிகள்: முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கெனத் தனி வரிசை வசதிகள் உள்ளன. இதனைப் பயன்படுத்தி சிரமமின்றி தரிசனம் செய்யலாம்.

பூஜைகளும் வழிபாட்டு முறைகளும்

திருச்செந்தூரில் நடைபெறும் பூஜைகள் மிகவும் நியமமானவை.

  • விஸ்வரூப தரிசனம்: அதிகாலையில் நடைபெறும் நிர்மால்ய பூஜை (விஸ்வரூபம்) மிகவும் சக்தி வாய்ந்தது.
  • ஆடைகள்: மூலவருக்குத் தினமும் வெள்ளை நிற ஆடையும், சண்முகருக்குப் பச்சை நிற ஆடையும் அணிவிக்கப்படுகிறது.
  • தங்க அங்கி: பக்தர்கள் கட்டணம் செலுத்தி முருகனுக்குத் தங்க அங்கி மற்றும் வைர வேல் அணிவித்து மகிழலாம்.
  • கங்கை பூஜை: தினமும் உச்சிக்கால பூஜை முடிந்த பின், அன்னம் மற்றும் பாலை மேளதாளத்துடன் கொண்டு சென்று கடலில் கரைப்பார்கள். இது கங்கை பூஜையாகக் கருதப்படுகிறது.

முக்கியமான இடங்கள் (சுற்றிப் பார்க்க வேண்டியவை)

  • வள்ளி குகை: கோவிலின் இடது பக்கத்தில் உள்ளது. இங்குள்ள சந்தன மலையில் தொட்டில் கட்டினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
  • சண்முக விலாசம்: 124 தூண்களைக் கொண்ட 120 அடி உயர பிரம்மாண்ட மண்டபம் இது.
  • ராஜகோபுரம்: 157 அடி உயரம், 9 அடுக்குகளைக் கொண்டது. இதன் வாசல் ஆண்டு முழுவதும் அடைக்கப்பட்டிருக்கும்; சூரசம்ஹாரம் முடிந்த மறுநாள் தெய்வானை திருமணத்தன்று மட்டுமே திறக்கப்படும்.

திருச்செந்தூர் முருகன் கோவில் திறக்கும் நேரம்

அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் காலை 04:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை திறந்திருக்கும். திருவிழா மற்றும் பண்டிகை நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்..

  • வீரவாகு தேவர்: இத்தலத்தின் காவல் தெய்வம். இவருக்குப் பூஜை செய்த பிறகே மூலவருக்குப் பூஜை நடக்கும்.
  • சமய ஒற்றுமை: திருச்செந்தூர் முருகன் கோவில் இந்துக்கள் மட்டுமின்றி, பல சமயத்தவரும் போற்றும் ஒரு தலமாக விளங்குகிறது.
  • நிவேதனம்: மூலவர் தவக்கோலத்தில் இருப்பதால் பிரசாதத்தில் புளி, காரம் சேர்க்கப்படுவதில்லை (சண்முகருக்கு உண்டு).

“திருச்செந்தூரில் ஒரு நாள் உபவாசம் இருந்து முருகனைத் தரிசிப்பவர்கள், வாழ்வில் சகல ஐஸ்வர்யங்களையும் பெறுவார்கள்” என்று புராணங்கள் கூறுகின்றன. உங்கள் வாழ்வில் ஒருமுறையாவது இந்த வெற்றித் தலம் சென்று அந்த செந்தில் ஆண்டவனின் அருளைப் பெற்று வாருங்கள்.

வள்ளி தெய்வானை உடனமர் வெற்றிவேல் முருகனுக்கு அரோஹரா


இதைப் பதிவேற்றியவர்..

Dineshgandhi

I'm Dinesh, founder of Aanmeegam.org...


One thought on "அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில், திருச்செந்தூர்"

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

poonamallee-vaitheeswaran-temple-gopuram
  • ஜூன் 29, 2026
பூந்தமல்லி வைத்தீஸ்வரன் திருக்கோவில் [செவ்வாய் ஸ்தலம்]
Nageshwara Swamy Temple Kundrathur
  • ஜூன் 13, 2026
அருள்மிகு காமாட்சி அம்மை உடனுறை அருள்மிகு நாகேச்சர சுவாமி திருக்கோவில், குன்றத்தூர்
chennai-navagraha-temples-list-in-tamil
  • மே 24, 2026
சென்னையில் உள்ள நவக்கிரக தலங்கள்