×
Saturday 26th of July 2025

திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர் கோவில் வரலாறு


Last updated on ஜூன் 2, 2025

thirupuvanam pushpavaneswarar temple entrance gopuram

Thirupuvanam Pushpavaneswarar Temple History in Tamil

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

சிவஸ்தலம் பெயர் திருப்பூவணம்
மூலவர் புஷ்பவனேஸ்வரர், பூவணநாதர், பித்ரு முக்தீஸ்வரர்
அம்மன் சௌந்தரநாயகி, மின்னனையாள், அழகியநாயகி
தல விருட்சம் பலா
தீர்த்தம் வைகை, மணிறகர்ணிகை
ஆகமம்/பூஜை இங்கு தினமும் 6 கால பூஜை நடக்கிறது
ஊர் திருப்புவனம்
மாவட்டம் சிவகங்கை

புஷ்பவனேஸ்வரர் கோவில், திருப்புவனம்

🛕 திருஞானசம்பந்தர் இத்தலத்திற்கு வருகை தந்த போது வைகை ஆற்றைக் கடந்து தான் அக்கரையிலுள்ள கோவிலுக்கு செல்ல வேண்டியிருந்தது. வைகை ஆற்றில் கிடந்த மணல் யாவும் சிவலிங்கங்களாக அவருக்கு தோற்றம் அளித்தன. ஆற்றைக் கடக்க வேண்டும் என்றால் சிவலிங்கங்களாகக் காட்சி அளிக்கும் மணலை மிதித்துச் செல்ல வேண்டும் என்பதால் வைகை ஆற்றின் மறுகரையில் இருந்தபடியே இத்தலத்து இறைவன் மீது பதிகம் பாடினார். ஆற்றின் இக்கரையில் இருந்து இறைவன் திருமேனியை தரிசிக்க நந்தி மறைத்தது.

🛕 இறைவன் பூவணநாதர் தனது சந்நிதியை மறைத்த நந்தியை சற்று இடதுபுறமாகச் சாய்ந்துகொள்ளும்படி பணித்தார். நந்தியும் தனது தலை மற்றும் உடலை சாய்த்துக்கொண்டது. திருஞானசம்பந்தரும் பூவணநாதரை கண்குளிரக் கண்டு வணங்கினார். சம்பந்தர் தரிசிக்க சற்று சாய்ந்த நந்தி இன்றைக்கும் சாய்ந்தவாறே இருப்பதைக் காணலாம். வைகை ஆற்றின் மறுகரையிலிருந்து தேவாரம் பாடிய மூவரும் தொழுத இடம் மூவர் மண்டபம் என்று வழங்குகிறது. இக்காலத்தில் பக்தர்கள் அதிக அளவில் வந்து வழிபடும் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலுக்கு அருகில் இம்மண்டபம் உள்ளது.

thirupuvanam pushpavaneswarar temple nandi

திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர் கோவில் அமைப்பு

🛕 ஆலயம் கிழக்கு நோக்கிய 5 நிலைகளைக் கொண்ட இராஜகோபுரத்துடன் காட்சி அளிக்கிறது. அம்மன் சௌந்தரநாயகி சந்நிதியும் தனிக்கோவிலாக ஒரு சிறிய கோபுரத்துடன் உள்ளது. பெரிய கோபுரம் கடந்து உள்ளே சென்றவுடன் வரிசையாக கம்பத்தடி மண்டபம், நளமகராசன் மண்டபம், திருவாச்சி மண்டபம், ஆறுகால் மண்டபம் ஆகியவை உள்ளன. ஆறுகால் மண்டபத்தை அடுத்து மகாமண்டபமும் அதையடுத்து அர்த்தமண்டபத்துடன் கூடிய கருவறையும் உள்ளது. மூலவர் புஷ்பவனேஸ்வரர் சுயம்புலிங்கத் திருமேனி உருவில் காட்சி தருகிறார்.

🛕 லிங்கத் திருமேனியில் திரிசூலமும், சடைமுடியும் காணப்படுகின்றன. மூலவர் பின்புறம், கருவறையில் லிங்கத் திருமேனிக்குப் பினபுறம் நட்சத்திர தீபமும், 27 விளக்குகள் கொண்ட திருவாச்சி தீபமும் இடம் பெற்றுள்ளன. இவை இறந்தவர் முக்தி பெற ஏற்றப்படும் மோட்ச தீபங்கள் எனப்படும். இறைவி சௌந்தரநாயகியின் சந்நிதி ஆலயத்தினுள் ஒர் தனிக் கோவிலாக அமைந்துள்ளது. இரண்டு சந்நிதிகளும் ஆலயத்தின் ஒரே மதிற்சுவரின் உள்ளே சுற்றுப் பிரகாரங்களுடன் அமையப் பெற்றுள்ளன.

🛕 கோவிலின் தலவிருட்சமாக பலாமரம் விளங்குகிறது. மணிகர்ணிகை தீர்த்தம், வைகைநதி, வசிஷ்ட தீர்த்தம், இந்திர தீர்த்தம் ஆகியவை இவ்வாலத்தின் தீர்த்தங்களாக விளங்குகின்றன. உள்பிரகாரத்தில் பாஸ்கர விநாயகர், சுப்பிரமணியர், சூரியன், சயனப்பெருமாள், நால்வர், 63 மூவர், சப்தமாதர்கள், மகாலட்சுமி, தட்சிணாமூர்த்தி, சந்திரன், நவக்கிரகங்கள் ஆகிய சந்நிதிகள் உள்ளன. இத்தலத்தில் நடராஜர் சபையிலுள்ள நடராசமூர்த்தம் அற்புதமான வேலைப்பாடுடையது. கல்லில் வடிவமைக்கப்பட்ட இந்த மூர்த்தம் பெரியதாகவும், அழகாகவும் உள்ளது. அருகே பதஞ்சலி முனிவரும், வீயாக்ரபாத முனிவரும் காட்சியளிக்கன்றனர். உலோகத்தாலான உற்சவ நடராஜரும், சிவகாமியும் இச்சபையிலுள்ளனர்.

thirupuvanam pushpavaneswarar temple inside view

திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர் கோவில் சிறப்புகள்

🛕 274 பாடல் பெற்ற சிவஸ்தலங்களில் அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவராலும் பதிகம் பாடப் பெற்ற ஒரே தலம் என்ற பெருமையுடைய தலம் திருப்பூவணம். தமிழ் நாட்டு அரசர்கள் சேர, சோழ, பாண்டியர்கள் மூவராலும் வழிபட்டு போற்றப் பெற்றதென்பதும் இத்தலத்தின் சிறப்பாகும். மதுரை சோமசுந்தரக் கடவுள் செய்த 64 திருவிளையாடல்களுள், சித்தராக வந்து திருப்பூவணத்தில் வாழ்ந்து வந்த பொன்னையாளுக்கு தங்கம் கொடுத்து இரசவாதம் செய்ததும் ஒரு திருவிளையாடல் என்பதால் இத்தலம் மேலும் சிறப்பு பெறுகிறது.

திருவிளையாடல் படலம்

🛕 திருப்பூவணத்தில் பொன்னையாள் என்ற பெயருடைய பெண்ணொருத்தி வாழ்ந்து வந்தாள். அவள் இறைவன் பூவணநாதர் மேல் மிகுந்த பக்தி பூண்டவள். அவளுக்கு பூவணநாதர் திருவுருவை பொன்னால் அமைத்து வழிபட வேண்டும் என்று ஆசை இருந்தது. ஆனால் அதற்குரிய நிதிவசதி அவளிடம் இல்லை. தனது ஆசையை நிறைவேற்றித் தருமாறு இறைவனை வேண்டிக் கொண்டே இருந்தாள். அவள் விருப்பத்தை நிறைவேற்றி வைக்க திருவுளம் கொண்ட இறைவன் ஒரு சித்தராக அவள் முன் வந்தார்.

🛕 பொன்னையாள் வீட்டில் இருந்த பழைய இரும்பு, செம்பு மற்றும் பித்தளை பாத்திரங்களை இரசவாதம் செய்து தூய பொன்னாக மாற்றிக் கொடுத்து அவளுக்கு அருள் செய்தார். கிடைத்த தங்கத்தால் பூவணநாதரின் திருவுருவை வடிக்கச் செய்தாள். தங்கத்தால் உருவான சிலையின் அழகைக் கண்ட பொன்னையாள் அதைக் கிள்ளி முத்தமிட்டாள். கிள்ளிய இடம் சற்றே பள்ளமானது. இன்றும் பூவணநாதரின் அந்த திருவுருவச் சிலையில் கன்னத்தில் முத்தக்குறி அடையாளம் இருப்பதைக் காணலாம். இறைவன் நடத்திய இந்த திருவிளையாடல் படலம் இத்தலத்திற்கு மேலும் பெருமை சேர்க்கிறது.

thirupuvanam temple sthala vriksham

பிரார்த்தனை: திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம். விநாயக சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தி தினங்களில் இங்கு நடைபெறும் சிறப்பு வழிபாடுகளைத் தரிசித்து வணங்கிட, நம் வாழ்வு வளமாகும்.

நேர்த்திக்கடன்: சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

திருவிழா: வைகாசியில் விசாக விழா, ஆடி முளைக்கொட்டு உற்சவம், புரட்டாசியில் நவராத்திரி கொலு உற்சவம், ஐப்பசியில் கோலாட்ட உற்சவம், கார்த்திகையில் பெரிய தீபம், மார்கழியில் ஆருத்ரா தரிசனம், மாசியில் சிவராத்திரி, பங்குனியில் 10 நாள் உற்சவம் ஆகியவை சிறப்பானவைகளாகும்.

திருப்புவனம் தலத்திற்கு எப்படிப் போவது?

🛕 மதுரை – மானாமதுரை சாலை வழித்தடத்தில் மதுரையில் இருந்து தென்கிழக்கே 20 கி.மி. தொலைவில் திருப்புவனம் உள்ளது. மதுரையில் இருந்து ரயில் மற்றும் சாலை வழியாக திருப்புவனம் செல்லலாம். திருப்புவனம் ரயில் நிலையம் மதுரை – மானாமதுரை ரயில் பாதையில் இருக்கிறது.

Thirupuvanam Temple Timings

கோவில் திறக்கும் நேரம்: காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

thirupuvanam pushpavaneswarar temple inside

Pushpavaneswarar Temple Address

அருள்மிகு புஷ்பவனேஸ்வரர் திருக்கோவில்
திருப்புவனம் அஞ்சல், சிவகங்கை மாவட்டம் – 630611

R7G4+VM4, Tiruppuvanam, Tamil Nadu 630611

 


 

இதைப் பதிவேற்றியவர்..

Dineshgandhi

நான் தினேஷ், Aanmeegam.org வலைத்தளத்தின் நிறுவனர். 2018 ஆம் ஆண்டு Blogger மூலம் ஆரம்பித்து 2020 இல் WordPress-க்கு மாறினேன். ACCET, காரைக்குடியில் MCA முடித்துள்ளேன். 10 ஆண்டுகளுக்கும் மேல் அனுபவம் வாய்ந்த SEO நிபுணராகவும், ஆன்மிக பதிவாளராகவும் செயல்படுகிறேன்.

Read full bio →


One thought on "திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர் கோவில் வரலாறு"

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

thimiri-kumaragiri-murugan-temple-entrance
  • ஜூலை 21, 2025
குமரகிரி முருகன் கோவில், திமிரி: ஒரு சக்தி வாய்ந்த மலைக்கோவில்
nitya-kalyana-perumal-temple-tiruvidandhai
  • ஜூலை 12, 2025
அருள்மிகு நித்ய கல்யாணப் பெருமாள் கோவில், திருவிடந்தை
kolampakkam-agastheeshwarar-temple-entrance
  • ஜூன் 26, 2025
அருள்மிகு ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோவில், கொளப்பாக்கம்