×
Sunday 27th of July 2025

திருச்சி திருவானைக்கா திருக்கோவிலின் சிறப்புக்கள்


Last updated on ஜூன் 2, 2025

Thiruvanaikaval Jambukeswarar Temple Special

Thiruvanaikaval Jambukeswarar Temple Special in Tamil

🛕 திருச்சிராப்பள்ளி மாநகரத்தின் வழியாகப் பாய்ந்தோடும் பொன்னி என்றும் தென்கங்கை என்றும் அழைக்கப்படும் காவேரி நதியின் வடகரையிலும், அதன் கிளை நதியான கொள்ளிடம் நதியின் தென்கரையிலும் ஐந்து திருச்சுற்றுக்களைக் கொண்ட திருவானைக்கா என்னும் இத்திருக்கோவில் அமைந்துள்ளது. இத்திருக்கோவில் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவை ஐந்து மூலப்பொருள்களில்; (ஐம்பூதங்களில்) இரண்டாவதான நீர் தத்துவத்தைக் குறிக்கும் சிவத்தலமாகும்.

🛕 இந்தச் சிவதலத்தில் சிவபெருமான் ஐம்புகேசுவராகவும், உமையம்மை அகிலாண்டேசுவரியாகவும் அர்ச்சை என்னும் வழிபாட்டிற்குரிய தெய்வத்திருமேனி கொண்டு எழுந்துருளியுள்ளனர். சிவபெருமான் சிவலிங்கமாக எழுந்தருளியுள்ள கருவறையின் விமானம் ஐந்து கலசங்களைக் கொண்டது என்பதும் ஒன்பது துவாரங்கள் கொண்ட சாளரத்தின் வழியாக பக்தர்கள் சிவலிங்கத்தை தரிசிக்கும்படியான அமைப்பும் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கவை.

🛕 இத்திருக்கோவில் சைவ சமய நாயன்மார்களான திருவாவுக்கரசர், திருஞானசம்பந்தர், அருணகிரிநாதர், தாயுமானவர், ஐயடிகள் காடவர்கோன் ஆகியோரால் பாடல் பெற்ற திருத்தலமாகும்.

துன்பம் இன்றித் துயரின்றி என்றும்நீர்
இன்பம் வேண்டில் இராப்பகல் ஏத்துமின்
எம்பொன் ஈசன் இறைவன் என்று உள்குவார்க்கு
அன்பன் ஆயிடும் ஆனைக்கா அண்ணலே – எனத் திருநாவுக்கரசர் பாடிய தேவாரப் பாடல் பெற்ற இந்தத் திருக்கோவிலுக்கு விசேடமான தல வரலாறு உண்டு.

🛕 இந்தத் திருகோவிலில் உமையம்மை அக்கோவிலில் சிவலிங்கத்தை எடுப்பித்து வணங்கி வழிபட்டதாகவும், ஜம்பு என்னும் முனிவரும், சிலந்தியும், யானையும் சிவபெருமனை வழிபட்டு வீடுபேறு என்னும் முக்தியடைந்ததாகவும் தல வரலாறு கூறுகிறது.

🛕திருவானைக்கா திருக்கோவில் தல புராணத்தைக் குறிப்பிடும் புடைப்புச் சிற்பம் ஒன்று இக்கோவில் கற்சுவர் ஒன்றில் காணலாம். இருபுறமும் அடைப்புக் கருக்கணிகளை கொண்ட இந்தப் புடைப்புச் சிற்பத்தில் ஒரு வெண்நாவல் மரம் உள்ளது. அம்மரம் இருகரம் குவித்து வணங்கும் ஒரு முனிவரின் தலையில் இருந்து முளைத்து வளர்ந்தது போலவும், நான்கு பறவைகள் அம்மரத்திலுள்ள பழங்களைத் தின்பது போலவும் உள்ளது. அம்மரத்தின் அருகில் பூர்ணகும்பம் ஒன்று உள்ளது. நடுநாயகமாக பத்ர பீடத்தின் மீது ஒரு சிவலிங்கமும், பத்ர பீடத்திற்குக் கீழே உள்ள உபபீடத்தில் ஒன்பது கட்டங்கள் கொண்ட சாரளத்தின் வடிவமும் உள்ளது, தலையில் கிரீடம் தரித்து, ஆடை ஆபரணங்களுடன் நான்கு கரங்களுடைய ஒரு பெண்ணுருவம் இரு கரங்களில் மலர்களை ஏந்தியும், வலது கரம் மலர் தூவி சிவலிங்கத்தை வணங்கி வழிபடுவது போலவும், இடது கரம் வரத முத்திரையுடன் காட்சியளிக்கிறது. யானை ஒன்று துதிக்கையில் மலர் ஏந்தி சிவலிங்கத்தை வணங்கி வழிபடுவது போலவும், சிவலிங்கத்தின் மேலே ஒரு சிலந்தியின் உருவமும் உள்ளன.

🛕 இப்புடைப்புச் சிற்பங்களைப் பற்றி சிற்பக் கலாநிதி, ஸ்தபதி வே. இராமன், திருச்சி தொல்லியல் ஆய்வு மையத்தின் நிறுவனத் தலைவரும் தொன்மைக் குறியீட்டாய்வாளருமான தி.லெ.சுபாஸ் சந்திர போஸ் தெரித்துள்ள செய்தியாவது –

ஜம்புநாதமுனியின் தலையில் முளைத்த வெண்நாவல் மர வரலாறு

🛕 முன்னொரு காலத்தில் ஜம்பு என்னும் முனிவர் சிவனருள் வேண்டி இத்திருத்லத்தில் தவமிருந்தார். அம்முனிவரின் தவ வலிமையால் சிவபெருமான் அவருக்கு திருக்காட்சியளித்து, ஒரு வெண்நாவல் பழத்தை பிரசாதமாகக் கொடுத்தார். ஈசன் கொடுத்த அப்பழத்தை அவர் விதையோடு விழுங்கிவிட்டார்.

🛕 அந்த விதை வெண்நாவல் மரமாக அவர் தலையிலிருந்து வெளிப்பட்டு ஜம்பு முனிவர் முக்திடைந்ததாகவும், அவ்வாறு ஜம்பு முனிவர் இக்கோவிலில் முக்தியடைந்தக் காரணத்தால் இக்கோவில் ஜம்புகேசுவரம் என்று அழைக்கப்பட்டதாகவும், அந்த வெண்நாவல் மரமே இத்திருக்கோவிலின் தல விருட்சமாக உள்ளதாகவும் தல வரலாறு கூறுகிறது.

பூர்ண கும்பத்தின் சிறப்பு

🛕 பூர்ண கும்பம் ஒரு மங்களகரமான சின்னமாகும். அதனை மானுடர் உடலை தேவாலயத்ததுடன் ஒப்பிட்டு அதன் உள்ளும் புறமும் தூய்மைப் படுத்தப்பட வேண்டும் என்பதைப் பற்றி சிவானந்த லஹரீ சூத்திரம்-36 விவரிக்கிறது.

🛕 உமையம்மையுடன் கூடியவரே! பக்தனாகிய நான் என் தேகத்தில், பக்தியாகிய நூல் சுற்றப்பட்டதாகவும், சந்தோசம் என்னும் தீர்த்தம் நிறைந்ததாகவும், பிரகாசம் பொருந்திய உள்ள மனதாகிய குடத்தில் உம்முடைய திருவடிகளாகிய மாவிலைகளையும், ஞானமாகிய தேங்காயையும் வைத்துள்ளேன், சத்துவ குணத்தை வளர்க்கும் ஐந்தெழுத்து மந்திரத்தை நான் உச்சரிப்பேனாக! ஐயனே எனது தேகமாகிய வீட்டை பரிசுத்தமாக்குவாயாக! மனதிற்கு உகந்த மங்களத்தை அருள்வாயாக! என மனமார வேண்டிக்கொள்கிறேன், என்பதை உணர்த்துவதாகும்.

உமையம்மை சிவலிங்கத்தை வணங்கி வழிப்பட்ட வரலாறு

🛕 கைலாயத்தில் யோகநிலையில் ஆழ்ந்து இருந்த சிவபெருமானை இடையூறு செய்த காரணத்தால் உமையம்மை சபிக்கப்பட்டு பூலோகம் வந்தடைந்து இத்திருக்கோவிலில் நீரால் சிவலிங்கம் ஒன்றை உருவாக்கி அதனை வணங்கி வழிப்பட்டார் என்ற ஒரு சிறப்புச் செய்தியும் உண்டு.

சிலந்தி, யானை வரலாறு

🛕 திருக்கைலாயத்தில் சிவபெருமானுக்கு சேவை புரிந்த சிவகணங்களில் புட்பதந்தன், மாலியவான் ஆகிய இருவர் தங்களில் யார் அதிகமாக சிவசேவை புரிகின்றனர் என்பதில் வந்த போட்டியால் தங்களை தாங்களே சபித்துக் கொண்டு மாலியவான் ஒரு சிலந்தியாகவும், புட்பதந்தன் ஒரு யானையும்; பூலோகத்தில் பிறந்து திருவானக்கா திருத்தலத்தில் சிவபெருமானை வழிப்பட்டனர்.

🛕 சிவ வழிபாட்டிலும் கூட அவ்விரண்டுக்கும் இடையே இருந்த போட்டி தொடர்ந்தது. சிலந்தியானது சிவலிங்கத்தின் மேலே வலையைப் பின்னி வெயில், மழை ஆகியவற்றிலிருந்தும், வெண்நாவல் மரத்தின் இலைகள் அதன் மீது விழாமலும் தினந்தோறும் சிவலிங்கத்தைப் பாதுகாத்து வந்தது. யானை தன் துதிக்கை மூலம் காவேரி நீரையும் மலரையும் கொண்டு வந்து தினந்தோறும் சிலந்தி பின்னிய வலையை அகற்றி சிவலிங்கத்தை நீராட்டி, மலர் தூவி பூசை செய்து வந்ததது.

🛕 சிவலிங்கத்தின் மேலே தினந்தோறும் தான் பின்னிய வலையை அகற்றும் யானையின் செயலை கண்ட சிலந்தி யானையை தண்டிக்க எண்ணி யானையின் துதிக்கையில் புகுந்து கடித்தது. யானையும், சிலந்தியும் உயிருக்கு போராடி இறுதியில் இரண்டுமே இறந்தன.

🛕 இவ்விரண்டின் சிவபக்தியைப் பாராட்டிய சிவபெருமான் யானையை சிவகணங்களின் தலைவனாக்கினார் என்றும் சிலந்தியை கோட்செங்கட் சோழன் என்ற அரசனாகப் பிறவி எடுக்கச் செய்தார் என்றும், திருவானைக்கா திருக்கோவில் அம்மன்னனால் கட்டப்பட்டது என்றும் ஸ்தல வரலாறு கூறுகிறது.

ஒன்பது துவாரங்கள் கொண்ட சாளரத்தின் சிறப்பு

🛕 சிவலிங்கத்தின் பத்ர பீடத்திற்கு அடியில் உள்ள உபபீடத்தில் ஒன்பது கட்டங்கள் கொண்ட வடிவம் காணப்படுகிறது. மயமதம் என்னும் சிற்ப சாத்திர நூல் வரைப்படம் என்ற அத்தியாயத்தில் பாடல் எண் 7.8-21 ஒன்பது கட்டங்கள் கொண்ட வரைப்படத்தை பிதா வரைப்படம் என குறிப்பிடுகிறது. மயன் அருளிய ஐந்திறம் என்ற நூல் பக்கம் 10-ல் சிவபெருமானின் திருமேனிகள் பவ, சரவ, உகிர, உருத்திர, மகாதேவ, பீம, ஈசானிய, பசுபதி ஆகிய எட்டு எனவும் அந்தத் திருமேனிகள் எட்டும் சிவபெருமானின் திருவுருவத்தை மையமாகக் கொண்டவை என ஒன்பது துவாரங்கள் கொண்ட சாரளத்திற்கு விளக்கமளிக்கிறது.

Thiruvanaikaval Jambukeswarar Temple Special in Tamil

🛕 மேற்கண்ட திருவானைக்கா திருக்கோவிலின் தல வரலாற்றைக் குறிப்பிடும் பழங்காலக் கல்வெட்டுப் பொறிப்புக்கள் கொண்ட தொல்லியல் சார்ந்த வரலாற்றுச் சின்னங்கள், திருச்சி மாவட்டம் திருச்சி சர்வதேச விமான நிலைத்திற்குப் பின்புறமுள்ள கீழக்குறிச்சியிலும், எட்டரை கிராமத்திற்கு அருகிலுள்ள அகிலாண்டபுரத்திலும், திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி, அச்சமங்களத்திலும், திருச்சி மாவட்டம் சமயபுரத்திற்கு அருகிலுள்ள துர்க்கை அம்மன் கோவிலும் உள்ளன. அவைகள் தங்களாலும் அறிஞர் பெருமக்களாலும் கண்டறியப்பட்டுள்ளன எனவும் தெரிவித்துள்ளனர்.

Our Sincere Thanks to:

வே. இராமன்
வே. இராமன்
T.L.Subash Chandira Bose
T.L.Subash Chandira Bose

இதைப் பதிவேற்றியவர்..

Dineshgandhi

நான் தினேஷ், Aanmeegam.org வலைத்தளத்தின் நிறுவனர். 2018 ஆம் ஆண்டு Blogger மூலம் ஆரம்பித்து 2020 இல் WordPress-க்கு மாறினேன். ACCET, காரைக்குடியில் MCA முடித்துள்ளேன். 10 ஆண்டுகளுக்கும் மேல் அனுபவம் வாய்ந்த SEO நிபுணராகவும், ஆன்மிக பதிவாளராகவும் செயல்படுகிறேன்.

Read full bio →


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

thiruvanmiyur-marundeeswarar-temple-rishi-gopuram
  • ஜூலை 27, 2025
அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோவில், திருவான்மியூர்
hindu-temple
  • ஜூலை 26, 2025
கோவிலுக்கு செல்லும்போது தெரிந்து கொள்ள வேண்டியவை
thimiri-kumaragiri-murugan-temple-entrance
  • ஜூலை 21, 2025
குமரகிரி முருகன் கோவில், திமிரி: ஒரு சக்தி வாய்ந்த மலைக்கோவில்